தமிழ் சினிமாவின் மூத்த நடிகை மனோரமாவின் மகனும் நடிகருமான பூபதி இன்று காலை உடல்நலக்குறைவால் காலமானார். விசு இயக்கிய மணல் கயிறு , குடும்பம் ஒரு கதம்பம் , ராணித் தேனீ ஆகிய படங்களில் நடித்து பிரபலமானர் பூபதி. 70 வயதான பூபதி வயது முதிர்வால் இன்று அக்டோபர் 23 ஆம் தேதி காலை காலமானார். 

Continues below advertisement

பூபதியின் திரைப்பயணம்

தன்னுடன் மேடை நாடகங்களில் நடித்து வந்த எஸ்.எம் ராமநாதனை 1954 ஆம் ஆண்டு தனது அண்ணையில் கடும் எதிர்ப்பை மீறி மனோரமா திருமணம் செய்துகொண்டார்.  1955 ஆம் ஆண்டு மன்னார்குடியில் மனோரமா மற்றும் எஸ்.எம் ராமநாதனுக்கு ஒரே  மகனாக பிறந்தவர் பூபதி . குழந்தை பிறந்த 15 நாட்களில் மனோரமாவை மீண்டும் நாடகத்தில் நடிக்க அழைத்தார் அவரது கணவர் ராமநாதன். இதற்கு மனோரமாவின் அண்ணை கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அன்று தனது மனைவி மற்றும் மகனை விட்டுச் சென்றவர் அதன் பின் திரும்பி வரவேயில்லை. சிறு வயதில் தனது அம்மா மற்றும் பாட்டி ராமாமிர்தமின் வளர்ப்பில் வளர்ந்தவர் பூபதி.

தனது அம்மாவின் ஆசையை நிறைவேற்ற மருத்துவ படிப்பு படிக்க நினைத்தார் பூபதி. ஆனால் அந்த ஆசை நிறைவேறாததால் சென்னை பிரெஸிடென்ஸி கல்லூரியில் பி.எஸ்.சி பட்ட படிப்பை முடித்தார் . பல்வேறு எதிர்ப்புகளை கடந்து பிரபல பத்திரிகையாளரின் மகளை திருமணம் செய்துகொண்ட பூபதி ஒரு சில மாதங்களிலேயே அவரை பிரிந்தார். மன உளைச்சலில் இருந்த பூபதி தனது அம்மாவுடன் நாடகத்தில் நடித்து வந்தார். இப்படியான நிலையில் தான் மகேந்திரன் இயக்கிய உதிரிப்பூக்கள் படத்தில் விஜயனின் தம்பியாக சினிமாவிற்கு அறிமுகமானார். இந்த படத்தில் அவருக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடிக்கத் தொடங்கினார். 

Continues below advertisement

20க்கும் மேற்பட்ட படங்களில்  நாயகன் , வில்லன் , நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்த பூபதியால் மாறிவந்த திரையுலகில் தனக்கான இடத்தை தக்கவைக்க முடியவில்லை. முதல் திருமணம் பிரிவில் முடிந்த பின் தனது தாயார் பார்த்து வைத்த தனலக்‌ஷ்மி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு ராஜராஜன் என்கிற மகனும் , அபிராமி மற்றும் ராஜலக்‌ஷ்மி என்கிற இரு மகள்களும் உள்ளனர். 

திரையுலகினர் அஞ்சலி 

திரையுலகில் சாதிக்க முடியாதது மற்றும் தனிப்பட்ட ஏமாற்றங்களால் தீவிர மதுப்பழக்கத்திற்கு அடிமையானார் பூபதி. இதனால் பல்வேறு உடல்நல பிரச்சனைகளையும் எதிர்கொண்டார். இப்படியான நிலையில் இன்று தி நகரில் தனது இல்லத்தில் காலை 10.40 மணிக்கு வயது மூப்பின் காரணமாக அவரது உயிர் பிரிந்தது. தி. நகர் நீலகண்ட மேத்தா தெரு, மனோரமா இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் பொருளாளர் கார்த்தி, துணைத்தலைவர்கள் பூச்சி எஸ்.முருகன், கருணாஸ் மற்றும் நடிகர் சங்க மேலாளர் தாமராஜ் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். நாளை 3 மணி அளவில் அவரது உடல் இறுதி ஊர்வலம் நடைபெற இருக்கிறது.