செங்கல்பட்டு - காஞ்சிபுரம்- அரக்கோணம் இடையே ரூ.1538 கோடியில், இரண்டாவது ரயில் பாதை அமைப்பதற்கு வரைவு விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
செங்கல்பட்டு - காஞ்சிபுரம் - அரக்கோணம் ரயில் பாதை (Arakkonam - Kanchipuram - Chengalpattu)
சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் இணைப்பதற்கு, மின்சார ரயில் சேவை மிக முக்கிய சேவையாக இருந்து வருகிறது. தினமும் லட்சக்கணக்கான பயணிகள் மின்சார ரயில்களை பயன்படுத்தி, வருகின்றனர். காஞ்சிபுரத்திலிருந்து செங்கல்பட்டு வழியாக இயக்கக்கூடிய மின்சார ரயில் சேவை, காஞ்சிபுரம் மற்றும் சென்னையில் இணைக்கக்கூடிய மிக முக்கிய போக்குவரத்தாக இருந்து வருகிறது.
அரக்கோணம் அருகே உள்ள திருமால்பூரில் இருந்து காஞ்சிபுரம், வாலாஜாபாத், செங்கல்பட்டு, கூடுவாஞ்சேரி, தாம்பரம், கிண்டி, எழும்பூர் வழியாக சென்னை கடற்கரைக்கு இந்த ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் போராட்டம்
திருமால்பூரில் இருந்து காஞ்சிபுரம் முறையாக செல்லக்கூடிய ரயில் பாதை ஒரு வழி பாதையாகவே இருக்கிறது. இதனால் மின்சார ரயில் சேவை செல்லும்போது, எதிரே எக்ஸ்பிரஸ் ரயில்கள் வந்தால் பயணிகள் ரயில் ஏதாவது ஒரு ரயில் நிலையத்தில் காத்து கிடைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவ்வப்போது பயணிகள் மற்றும் ரயில்வே ஊழியர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. இது ஒரு சில நேரங்களில் பயணிகள் ரயில் மறியல் உள்ளிட்ட போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
திட்ட அறிக்கையை தயாரித்த ரயில்வே துறை
செங்கல்பட்டில் இருந்து காஞ்சிபுரம் வழியாக அரக்கோணத்திற்கு இரண்டாவது ரயில் பாதை, அமைப்பது தொடர்பான வரைவு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது ரயில் பாதை அமைப்பதற்கு ரூபாய் 1538 கோடி செலவாகும், என அந்த விரிவான திட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான திட்ட அறிக்கையை தயாரிப்பதற்கு கடந்த 2023 அக்டோபர் மாதம், தனியார் நிறுவனம் இடம் ஒப்படைத்தது. இந்த இரண்டாவது ரயில் பாதை பயன்பாட்டிற்கு வந்தால் தினமும் 13 ரயில்கள் இயக்கம் இடத்தில், 40 ரயில்கள் வரை விரிவுபடுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. பயணிகள் ரயில் மட்டும் இல்லாமல், சரக்கு ரயில்களும் கூடுதலாக இயக்குவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிறப்பம்சங்கள் என்னென்ன ?
ஏற்கனவே ஒரு வழித்தடம் இருப்பதால் குறைந்த அளவு ரயில்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. கூடுதலாக ரயில்வே தண்டவாளம் அமைக்கப்படுவதால், 50% வரை கூடுதல் ரயில்கள் இயக்கப்படும். இதனால் காஞ்சிபுரத்திலிருந்து சென்னை செல்லும் பயணிகளுக்கு பெரும் உதவியாக அமையும். இதனால் ரயில்வே துறைக்கு கூடுதல் வருமானமும் கிடைக்கும்.
இந்த வழித்தடத்தில் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சென்னையில் மையமாக வைத்து, சரக்கு ரயில்களும் அதிக அளவு இயங்கி வருகின்றனர். கூடுதல் தண்டவாளம் அமைக்கப்படும்போது கூடுதலான சரக்கு ரயில்களை கையாள முடியும்.