தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத ஒரு நடிகராக, அரசியல் கட்சி தலைவராக தனக்கே ஒரு தனி பாதையை உருவாக்கிய நடிகர் விஜயகாந்த் உடல்நலக் குறைவால் காலமானார். ஒரு மனிதராக அவர் செய்த உதவிகள் எண்ணில் அடங்காதவை. அப்படி பலரின் வாழ்க்கையை உயர்த்திய விஜயகாந்த்தால் திரையுலகில் ஒரு நடிகராக பரிச்சயமானவர் நடிகர் லிவிங்ஸ்டன். நடிகர் விஜயகாந்த் குறித்து அவரின் நினைவலைகளை பகிர்ந்துள்ளார். 



’’நான் இன்று ஒரு நடிகராக இருப்பதற்கு காரணமானவரே விஜயகாந்த் சார்தான்.  ஆரம்ப காலகட்டத்தில் நான் பாக்யராஜிடம்தான் இருந்தேன். அவர் என்னை ஒரு உதவியாளராக, கதாசிரியராகத்தான் பார்த்தார். ஆனால் என்னை ஒரு நடிகராக பார்த்தவர் விஜயகாந்த் சார்தான். 


 




நான் ஒரு முறை அவரிடம் கதை சொல்ல அவரோட ஆபிஸுக்கு போயிருந்தேன். அங்க நடந்ததை பார்த்து எனக்கு வியப்பாக இருந்தது. தினமும்  ஒரு 300 பேருக்காவது சாப்பாடு போடுவார். அதனாலேயே மதியம் என்றால் அவ்வளவு ஜனம் வந்து நிக்கும். தினமும் அத்தனை பேருக்கு சாப்பாடு பரிமாறுவாங்க. நான் அதை நேரடியாக பார்த்து இருக்கிறேன். 


எல்லார்கிட்டயும் அன்பு காட்டியவர்


அப்போ நான் கதை சொல்ல சென்றபோது நிறைய பேர் காத்துக்கொண்டு  இருந்தாங்க. அப்போ நான் வந்து இருக்கேன் என தெரிஞ்சதும் என்னை உடனே கூப்பிட்டார். அப்போ என்னோட காத்துகிட்டு  இருந்தவங்க பல பேர் ஒரு மாதிரியாக்கூட பேசுனாங்க. நாங்க எல்லாம் ஆறு மாசமா காத்துகிட்டு இருக்கோம்,  ஆனா உங்களுக்கு உடனே சான்ஸ் கிடைச்சுடுச்சு, கதை சொல்றதுக்கு அப்படினு பேசிக்கிட்டாங்க. அவர் என் மேல அதிகமா மரியாதை, அன்பு எல்லாம் வைச்சு இருந்தாரு. என்கிட்ட மட்டும் அன்பு இல்ல, எல்லார்கிட்டயும் அன்பாக இருப்பார். 


 



'வானத்தை போல' படத்தில் இயக்குநர் விக்ரமன் ஒரு காட்சிக்காக கிட்டத்தட்ட 19 டேக் எடுத்தார். அத்தனை டேக் எடுக்கும் போதும் மிகவும்  பொறுமையாக இருந்தார். அதை பற்றி கேட்கையில் இயக்குநருக்கு எப்ப பிடிச்சு இருக்கோ அது வரைக்கும் எடுத்தார். அவருக்கு 19வது டேக்தான் ஓகேவாக தோணுச்சு அதனால ஒன்னும் கிடையாது என ரொம்ப தன்மையாக சொன்னார். 


கருணை, வீரம், வள்ளல் என ஒரு தலைவனுக்கான அனைத்து குணங்களும் கொண்டவர் விஜயகாந்த். ஒரு தலைவனாக நல்ல நிலையில் வந்துகொண்டு இருந்த நிலையில் காலம் வேறு ஒரு கணக்கு போட்டு அவரை எடுத்துச் சென்றது மனதிற்கு வேதனை கொடுக்கிறது’’ என மிகவும் உருக்கமாக பேசியுள்ளார் நடிகர் லிவிங்ஸ்டன்.