விஜயகாந்த்
தேமுதிக தலைவர் நடிகர் விஜயகாந்த் கடந்த மாதம் உடல் நலக் குறைவால் காலமானார். அவரது இறப்பு ஒட்டிமொத்த தமிழ் மக்களின் மனதில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது . அரசியல் தலைவர்கள் , நடிகர்கள் , சாமானிய மக்கள் என அனைவரும் அவரது இறப்பை தங்களது நெருக்கமான ஒருவரின் இறப்பாகவே கருதினார்கள். விஜயகாந்த் குறித்த பல்வேறு தகவல்கள் இணையதளத்தில் பகிரப்பட்டு வருகின்றன. இப்படியான நிலையில் நடிகர் விஜயகாந்திடம் கடந்த 30 வருடங்களாக கார் ஓட்டுநராக இருந்த வேங்கடேசன் விஜயகாந்த் பற்றிய பல புதிய தகவல்களை யூடியூப் சானல் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.
என் டேஸ்டுக்கு இவன் கார் ஓட்டுவானா
விஜய்காந்திடம் தன்னை இப்ராஹிம் ராவுத்தர்தான் கார் ஓட்டுநராக வேலைக்கு சேர்த்துவிட்டார் என்றும் என்னுடைய டேஸ்டுக்கு இவன் கார் ஓட்டுவானா என்று விஜயகாந்த் ராவுத்தரிடம் கேட்டபோது “ உன்னோட டேஸ்ட் எனக்கு தெரியாதா விஜயகாந்த், அதெல்லாம் ஓட்டுவான் என்று அவர் கூறியுள்ளார்.
”விஜய்காந்த் மீனாட்சித் திருவிளையாடல் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது அவரை அவசரமாக ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு கொண்டு செல்ல என்னிடம் சொன்னார். நான் கார் ஓட்டுவது மட்டுமில்லாமல் மெக்கனிக் வேலையும் செய்தேன். அதனால் வேகமாக அவரை சரியான நேரத்திற்கு ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு கொண்டு சென்றேன் . உடனே விஜயகாந்த் ராவுத்தருக்கு கால் செய்து யோவ் இவன் சூப்பர் பையன் யா.. நானே வெச்சிக்குறேன்’ என்று கூறினார்.”
” அதற்கு பிறகு 30 வருடங்கள் நான் அவரிடம் கார் ஓட்டியிருக்கிறேன் , ஒரு நாள் கூட அவர் என்னை டிரைவராக நடத்தியது கிடையாது எங்காவது வெளியே தங்கினால் கூட அவருடன் என்னையும் மெத்தையில் படுத்துக் கொள்ளச் சொல்வார். அவரிடம் எனக்கு இது வேண்டும் அது வேண்டும் என்று ஒரு நாளும் நான் கேட்டது இல்லை, எனக்கு தேவையானதை எல்லாம் அவரே செய்து கொடுப்பார். “
விஜயகாந்தின் மதுபழக்கம் குறித்து பேசியபோது வெங்கடேசன் இப்படி கூறினார் “ விஜயகாந்துக்கு மதுபழக்கம் இருந்தது. யாருக்குதான் அது இல்லை, ஆனால் எல்லாரும் நினைப்பது போல் அவர் மது பழக்கத்திற்கு அடிமையாகி விடவில்லை, அவர் தன்னை வருத்திக் கொண்டு சண்டைக் காட்சிகளில் நடிக்கக் கூடியவர். அவரைப் போல் யாராலும் நடிக்க சண்டைக் காட்சிகளில் நடிக்க முடியாது. கடுமையாக உடற்பயிற்சி செய்வார். என்னை அழைத்து என் நெற்றிக்கு நேராக காலை தூக்கி நிற்பார். அப்படி பயிற்சி செய்ததால் தான் அவரால் சண்டைக் காட்சிகளில் நடிக்க முடிந்தது. அவர் இல்லை என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை, என் சொந்த அண்ணனை இழந்துவிட்டேன் “ என்று அவர் கூறினார்.