நடிகர் வடிவேலுவின் மிகப் பிரபலமான காமெடி ஒன்று மறைந்த இயக்குநர் மாரிமுத்துவின் குடும்பத்தில் நடந்தது என்பது பலரும் அறியாத தகவல். அதனைப் பற்றி காணலாம். 


இயக்குநர், நடிகராக மிகப்பிரபலமாக சினிமா, சீரியல் இரண்டிலும் வலம் வந்த மாரிமுத்து, சமீபத்தில் மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். இவர் சீமான், வசந்த், மணிரத்னம், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலரிடமும் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார். அவ்வப்போது நேர்காணலில் தன்னுடைய திரையுலக வாழ்க்கை பற்றி நிறைய தகவல்களை பகிர்ந்திருந்தார். 


மாரிமுத்து மறைவை பலராலும் ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில், அவருடைய பழைய நேர்காணல்களை சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். அப்படியான ஒரு நேர்காணலில் பேசிய மாரிமுத்து, பாஞ்சாலங்குறிச்சி படத்தில் இடம் பெற்ற பிரபலமான வடிவேலு காமெடி பற்றி பேசியுள்ளார். நாம் தமிழர் கட்சியில் ஒருங்கிணைப்பாளரான சீமான் இயக்கிய அந்த படத்தில் பிரபு, மதுபாலா, வடிவேலு, வாகை சந்திரசேகர் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். தேவா அந்த படத்துக்கு இசையமைத்திருந்தார். 


அப்படத்தில் நடிகர் வடிவேலு குடித்து விட்டு சுருண்டு வரும் ஓலைப் பாயுடன் படுக்க போராடும் காட்சி இன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிக்காமல் இருக்க முடியாது. அந்த அளவுக்கு மிகவும் பிரபலமானது. இந்த காட்சி உண்மையில் மாரிமுத்துவின் குடும்பத்தின் நடந்த காட்சியாம். 



அந்த நேர்காணலில் பேசும் அவர், “ பாஞ்சாலங்குறிச்சி படத்துல வடிவேலு ஓலை பாயை வைத்துக் கொண்டு செய்யும் காமெடி காட்சி எங்க அம்மா எனக்கு சொன்னது. எங்க குடும்பத்துல கிறுக்கு செல்லையா என்ற ஒருவர் இருந்தார். அவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றாலும் மிகவும் நல்ல மனிதர். கல்யாணம் எதுவும் செய்யாமல் தனியாளாக வாழ்ந்து வந்தார். அவர் ஒருநாள் கடைக்கு போய் சுருட்டி வைத்திருந்த ஓலை பாய் ஒன்றை வாங்கி வந்தார். அதனை விரித்து விரித்து பார்த்திருக்கிறார். விரியவே இல்லை. அப்புறம் 2 பக்கமும் காலை நகர்த்தி இப்ப என்ன செய்வ என கூறி குப்புற விழுந்துள்ளார். இதை நான் சீமானிடம் சொன்னேன். அவர் இதற்குள் ஒரு நல்ல மேட்டர் ஒன்று இருக்கே மாரி என சொல்லிவிட்டு வடிவேலு வச்சி பண்ணலாம் என கூறினார். 


அந்த படம் உருவான காலக்கட்டத்தில் டெக்னாலஜி, சிஜி என எதுவுமே இல்லாத  நிலையில் இயற்கையாகவே சுருண்டு வரும் ஓலை பாய் கிடைக்க வேண்டும். வாங்க பாய் எதுவும் சுருளவில்லை. உடனே ஓலை பாயில் கருப்பட்டியை காய்ச்சி ஊற்றி வெயிலில் காய வைத்தோம். அதில் ஒரு வெடவெடப்பு ஏறுனதும் இயற்கையாகவே பாய் சுருள தொடங்கியது. வடிவேலு அந்த சீனை வேற லெவலுக்கு கொண்டு போயிருப்பார்” என மாரிமுத்து கூறியுள்ளார். 




மேலும் படிக்க: Atlee Birthday : வணிக சினிமாவின் கடைக்குட்டி சிங்கம்... இயக்குநர் அட்லீயின் பிறந்தநாள் இன்று