இன்று இயக்குநர் அட்லீயின் பிறந்தநாள். பல்வேறு விமர்சனங்கள் அட்லீ மேல் வைக்கப்படும் போதும் 900 கோடி வசூல் ஈட்டியிருக்கிறது ஜவான் திரைப்படம். ஏன் அட்லீயின் படங்கள் விமர்சிக்கப் படுகின்றன. அதே நேரத்தில் வெற்றியும் பெறுகின்றன என்பதை பற்றிய ஒரு சில அலசல்.


வணிக சினிமாவின் கடைக்குட்டி அட்லீ


அனைத்து உதவி இயக்குநர்களும் ஒரு அறையில் திரண்டிருக்க இயக்குநர் வந்து அவர்களுடன் சேர்ந்து கொள்கிறார். ஹீரோவும் ஹீரோயினும் பார்த்துக் கொள்வது தான் காட்சி என்று இயக்குநர் சொல்லிவிடுவார். அங்கு இருக்கும் 20 உதவி இயக்குநர்களின் வேலை தாங்கள் பார்த்த படங்கள், வெப் சீரிஸ்கள், நாடகங்களில் பார்த்த ஹீரோ ஹீரொயின் சந்தித்துக் கொள்ளும் காட்களை வரிசையாக சொல்லவேண்டும். அதில் எது இயக்குநருக்கு பிடிக்கிறதோ அதை அவர் தேர்வு செய்து அதே காட்சியை தனது படத்தில் உருவாக்குவார்.


வணிக சினிமாவின் மிகப்பெரிய பின்னடைவாக சினிமா விமர்சகர்களால் சொல்லப்படுவது ஒரு சிலரைத் தவிர்த்து கிட்டதட்ட பெரும்பாலான இயக்குநர்கள் ஒரே மாதிரியான காட்சிகளை அமைப்பது. ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு குறிப்பிட்ட இயக்குநரால் ஒரு ட்ரெண்ட் உருவாக்கப்படுகிறது. அவருக்கு அடுத்து வரும் இயக்குநர்கள் அதே காட்சியை உதாரணமாக வைத்துக் கொண்டு அதே மாதிரியான ஒரு காட்சியையே உருவாக்குகிறார்கள்.


அட்லீயின் படங்கள் விமர்சிக்கப் படுவதற்கு முதல் காரணம் என்றால் எந்த ஒரு புதிய விதமான காட்சி அமைப்புகள்  ஒரு ரொமான்ஸ் காட்சியாகட்டும் , ஒரு எமோஷனல் காட்சியாகட்டும், ஒரு சண்டைக் காட்சியாகட்டும் எல்லாவற்றை பார்க்கும் போதும் ஏற்கனவே பலமுறை பார்த்து சலித்துப்போன ஒரு காட்சியை தான் நாம் பார்க்கிறோம். உண்மையில் அட்லீ பிற படங்களை காப்பி அடிக்கிறார் என்ற விமர்சனம் ஒருபுறம் இருந்தாலும், இன்ஸ்பிரேஷன் என்ற ஒன்று இல்லாமல் எதுவுமே இல்லை. 


ஆனால் இங்கு அட்லீ உள்ளிட்ட சிலர் மட்டுமே குறை சொல்லப்படுகிறார்கள். கதையே இல்லாமல் காட்சிகள், பாடல்களை வைத்து படத்தை வெற்றி பெற வைத்த காலமெல்லாம் உண்டு. ஒரு செல்போனுக்கு எல்லா காலகட்டத்திலும் அப்டேட் என்ற ஒன்று இருப்பது போல காட்சிகளுக்கும் அப்டேட் என்பது இருக்கும். அதே காதல் காட்சி.. அதே டயலாக் தான் என்றாலும் ரசிக்க வைக்கிற ஸ்டைல் என்ற ஒன்று இருக்கும். அதுதான் கமர்ஷியல் சினிமாவை தூக்கி பிடிக்கிறது. அதன் சூட்சமத்தை தெளிவாக அறிந்து அதில் வெற்றியும் பெற்றுள்ளார் அட்லீ.  


ஷங்கரின் உதவி இயக்குநராக பணியாற்றிய அட்லீயிடம் ஷங்கரின் படங்களில் இருக்கும் ஒரு சில கூறுகளை நாம் அடையாளம் காணலாம். அந்த அந்த காலகட்டத்தில் இருக்கும் சமூக பிரச்சனைகளை மையமாக வைத்து தனது திரைக்கதையை அமைப்பது. பார்வையாளர்களை உணர்ச்சிவசப்படுத்தி கதையோடு ஒன்ற வைப்பதற்காக காட்சிகளை உருவாக்குவது போன்ற அம்சங்களை ஷங்கரின் படங்களில் இருந்து நேரடியாக எடுத்துக் கையாள்கிறார் அட்லீ. காரணம் ஒருவர் அவரைப் போல, இவரைப் போல இப்படித்தான் இருக்க வேண்டும் என்பது இல்லை. தனக்கு இருக்கும் சின்ன திறமையை வைத்து எப்படி வாழ்க்கையில் முன்னேறுகிறார் என்பதே முக்கியம். 


ஒருவரை மற்றவர்களுடன் ஒப்பிடுவதே இங்கு தவறு என்கிற போது அட்லீ மட்டும் எப்படி அந்த விமர்சனத்தில் சிக்குகிறார் என்பது அவரது ரசிகர்களுக்கு குழப்பமாகவே உள்ளது. தொடர்ந்து விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் உள்ளிட்டப் படங்களை இயக்கிய அட்லீ காட்சியில் எந்த வித புதுமையையும் முயற்சிக்காமல் ஏற்கனவே வெற்றிபெற்ற கமர்ஷியல் ஃபார்முலாவை வைத்தே தனது படங்களை வெற்றிபெறச் செய்தார்.


தான் பார்த்த பிற மொழிப் படங்களில் தான் ஈர்க்கப் பட்ட காட்சிகளை தன்னுடையப் படங்களில் மீண்டும் உருவாக்குகிறார். உலக சினிமா பார்ப்பவர்களுக்கு பரிச்சயப்பட்ட ரசிகர்களுக்கு அந்த காட்சி எங்கிருந்து எடுக்கப் பட்டிருக்கிறது என்பது தெரிவதால் அது விமர்சிக்கப்படுகிறது. ஆனால் தமிழ் படங்களை மட்டுமே பார்த்து வரும் எளிய சாமானிய மக்களுக்கு அந்த காட்சி புதிய வகையிலான உணர்ச்சியையே தருகிறது. பாலுமகேந்திரா, வெற்றிமாறன், மனிரத்னம் படங்களில் இருப்பது போல் கவித்துவமாகவோ, எதார்த்தமாகவோ ஒரு காட்சியை நாம் அட்லீயில் படங்களில் எதிர்பார்க்க முடியாது. எதிர்பார்க்கவும் கூடாது.


தற்போது ஜவான் திரைப்படம் தமிழ் ரசிகர்களால் விமர்சிக்கப் பட்டு பாலிவுட்டில் 900 கோடிகள் வரை வசூல் செய்துள்ளது. அட்லீ வெற்றிகரமான இயக்குநராக இருப்பதன் காரணமும் அதுதான். எத்தனை விமர்சனங்கள் இருந்தாலும் விஜய், ஷாருக்கான் போன்ற வெகுஜன மக்கள் நிராகரிக்கவே முடியாத ஒரு பிம்பங்கள் மூலம் தனது படத்தை ஈர்க்க வைக்கிறார்.


எத்தனையோ படங்கள் நிச்சயம் தோல்வியடையும் என்று தெரிந்தும் அதை ரசிகர்கள் பார்க்க செல்வதைப் போல்தான். சிறந்த படைப்பிற்காகவோ, சினிமாவில் மறுக்க முடியாத பங்களிப்பை செய்ததற்காகவோ இயக்குநர் அட்லீயை மக்கள் கொண்டாடப் போவதில்லை. ஆனால் வணிக சினிமாவை நோக்கி நகரும் பலருக்கும் அவர் ஒரு முன்மாதிரி தான். பின்புலம் இருக்கு, இல்லை என்பதை தாண்டி சினிமாவின் தரத்தை வணிக ரீதியிலான லாபத்தை மட்டுமே முதன்மைப்படுத்திய இயக்குநர் அட்லீக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!