கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் நடித்த சேதுராமன் மாரடைப்பால் உயிரிழந்து நான்கு ஆண்டுகள் கடந்துள்ளன.


நடிகர் சேதுராமன்


சந்தானம்  நடித்த ’கண்ணா லட்டு தின்ன ஆசையா ‘ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் சேதுராமன். சக்க போடு போடு ராஜா, வாலிப ராஜா , 50/50 உள்ளிட்டப் படங்களில் நடித்தார்  சேதுராமன் . சரும மருத்துவ படிப்பை முடித்த சேதுராமன் கடந்த 2016 ஆம் ஆண்டு சொந்தமாக மருத்துவமனை ஒன்றை திறந்தார். இதனைத் தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு சென்னை அண்ணா நகரில் இரண்டாவது மருத்துவமனையை திறந்தார். 2016 ஆம் ஆண்டு உமா என்பவரை திருமணம் செய்துகொண்டார்  சேதுராமன், உமா தம்பதியினருக்கு சஹானா என்கிற  பெண் குழந்தை இருந்தது. இதனை அடுத்து இரண்டாவது முறையாக மனைவி உமா கர்ப்பமாக இருந்தபோது   கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் 26 ஆம் தேதி மாரடைப்பால் திடீர் மரணமடைந்தார் சேதுராமன். அவரது இறப்பு திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.


குட்டி சேதுராமன் பிறந்தார்


சேதுராமன் இறந்த அடுத்த ஐந்து மாதங்களுக்குப் பிறகு உமா சேதுராமனுக்கு ஆண் குழந்தை பிறந்தது. தனது கணவர் மீண்டும் பிறந்துவிட்டதாக உமா சேதுராமன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இந்த ஆண் குழந்தைக்கு வேதாந்த் என்று பெயர் வைத்தார் என்றாலும் குட்டி சேதுராமன் என்று அழைக்க இருப்பதாக அவர் தெரிவித்தார். சமீபத்தில் அவர்களின் திருமண நாள் வந்தது. ”தனது கணவரை தான் அறிந்து 8 ஆண்டுகள் கடந்துள்ளன. அதில் நான்கு ஆண்டுகள் நிஜத்திலும் நான்கு ஆண்டுகள் கனவிலும்” என்று உமா சேதுராமன் தனத் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.


4 -வது ஆண்டு நினைவு நாள்






 நேற்று மார்ச் 26-ஆம் தேதியோடு சேதுராமன் இறந்து நான்கு ஆண்டுகள் கடந்துள்ளன. அவரது நினைவை சுமக்கும் மனைவி உமா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இப்படி கூறியுள்ளார் ”நீங்கள் எங்களை விட்டு பிரிந்து 1461 நாட்கள் கடந்துள்ளன. நீங்கள் எங்களுடன் இல்லையென்றாலும் நம் குடும்பத்தின் பெரிய தூணாக என்றும் எங்களுடன் இருக்கிறீர்கள். நாங்கள் உங்களைப் பற்றி நினைக்காத நாள் இல்லை. உங்களைப் பற்றி நாங்கள் தினமும் பேசிக் கொண்டிருக்கிறோம். உங்களைப் பற்றி நினைத்தால் எங்கள் முகத்தில் புன்னகை படர்கிறது. ஏதோ ஒரு வடிவத்தில் நீங்கள் எங்களுடன் இருந்துகொண்டு தான் இருக்கிறீர்கள் என்று வாழ்க்கை எங்களுக்கு உணர்த்தி இருக்கிறது” என்று அவர் கூறியுள்ளார்