பிரபல நடிகரும், இயக்குநருமான மாரிமுத்து மாரடைப்பால் காலமான நிலையில், அவரது மறைவுக்கு ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 


’அரண்மனை கிளி’ (1993) மற்றும் ‘எல்லாமே என் ராசாதான்’ (1995)  ஆகிய படங்களில் நடிகர் ராஜ்கிரணிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மாரிமுத்து. தொடர்ந்து இயக்குநர்கள் மணிரத்னம், வசந்த், சீமான், எஸ். ஜே. சூர்யா உள்ளிட்ட  இயக்குநர்களிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தார். சிலம்பரசன் நடித்த மன்மதன் படத்தில் இணை இயக்குநராக பணியாற்றினார். இதனையடுத்து நடிகர் பிரசன்னா நடித்த ‘கண்ணும் கண்ணும்’ படம் மூலம் இயக்குநரானார். 


நடிப்பின் மூலம் பிரபலம்


தொடர்ந்து புலிவால் என்னும் படத்தை இயக்கிய மாரிமுத்துவை, நடிக்க கூட்டி வந்தார் இயக்குநர் மிஷ்கின். அவர் இயக்கிய யுத்தம் செய் படத்தில் நடிகராக அறிமுகமான அவர், ஆரோகணம், நிமிர்ந்து நில், ஜீவா, கொம்பன், மருது, பைரவா, கடைக்குட்டி சிங்கம், சண்டக்கோழி 2, பரியேறும் பெருமாள் என 50க்கும் மேற்பட்ட படங்களில் மிக முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார். கடைசியாக மாரிமுத்து நடித்த ஜெயிலர் படம் வெளியாகியிருந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது இந்தியன் 2, கங்குவா உள்ளிட்ட படங்களில் அவர் நடித்து வந்தார்.


இதற்கிடையில் சன் டிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியல் மூலம் எண்ட்ரீ கொடுத்த மாரிமுத்துவுக்கு அதன் மூலம் எக்கச்சக்கமான ரசிகர்கள் கிடைத்தனர். ஆதி குணசேகரன் என்னும் கேரக்டரில் அவர் நடித்து வந்த நிலையில், அதில் ஆணாதிக்கம் மிக்க குடும்பத்தின் மூத்த அண்ணனாக நடித்திருப்பார். இதில் மாரிமுத்து பேசும் ‘இந்தாம்மா ஏய்’ என்னும் வசனம் மிகப்பெரிய அளவில் ரீச் ஆனது. இப்படியான நிலையில் மாரிமுத்துவின் மரணம் சின்னத்திரை, வெள்ளித்திரையுலகைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழக மக்களையும் உலுக்கியுள்ளது. 


வைரலாகும் வீடியோ


இதனிடையே எதிர்நீச்சல் சீரியலில் மாரிமுத்து பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. முன்னதாக கடந்த மாதம் ஒளிபரப்பான எபிசோடில் தனக்கு நெஞ்சுவலிப்பதாக கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் மாரிமுத்து ஒரு கை செயல்படவில்லை என சொல்லி குடும்பத்தினரிடம் நடிப்பார். அதேசமயம் சொத்துக்கள் பறிபோன பதற்றத்தில் இருக்கும் அவர் தன் தம்பியிடம், ‘நெஞ்சில் கை வைத்து வலி வந்து அப்பப்ப அழுத்துது. அது உடம்புல வர்றதா, மனசுல வர்றதான்னு தெரியல, அப்பப்ப வலி வந்து எச்சரிக்கை பண்ணுதுன்னு தோணுது, ஏதோ கெட்டது நடக்கப்போகுதுன்னு தோணுதுப்பா, அதுதான் நெஞ்சுவலி மாறி வந்து எனக்கு காட்டுது” என வசனம் பேசியிருப்பார். இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.