லால் சலாம்
தனுஷ் நடித்த 3 படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இப்படம் இளைஞர்கள் கொண்டாடும் படமாக இன்றைய சூழலில் மாறியுள்ளது. அடுத்தபடியாக இவர் இயக்கிய வை ராஜா வை திரைப்படம் பெரியளவில் கவனமீர்க்கவில்லை. ஐஸ்வர்யா இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான படம் லால் சலாம். விஷ்ணு விஷால், விக்ராந்த் , அனந்திகா சனில்குமார் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். லைகா ப்ரோடக்ஷன்ஸ் தயாரித்த இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்தார். ரஜினிகாந்த் இப்படத்தில் மொய்தீன் பாய் என்கிற சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.
தொலைந்து போன ஹார்ட் டிஸ்க்
லால் சலாம் படம் ரிலீஸாக இருந்த சில நாட்கள் முன்பாக இப்படத்தின் முக்கியமான காட்சிகள் அடங்கியிருந்த ஹார்ட் டிஸ்க் தொலைந்துவிட்டதாக படக்குழு சார்பாக தெரிவிக்கப்பட்டது. கடைசி நேரத்தில் தங்களிடம் இருந்த காட்சிகளையும் சில காட்சிகளை மீண்டும் எடுத்து இந்த படத்தை அவர்கள் வெளியிட்டனர். ஆனால் திரையரங்கில் படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இதுமட்டுமில்லாமல் ஹார்ட் டிஸ்க் தொலைந்துபோனது எல்லாம் ஒரு காரணமாக சொல்கிறார்கள் என சமூக வலைதளத்தில் நெட்டிசன்கள் சரமாரியாக படக்குழுவினரை ட்ரோல் செய்தனர். மேலும் இதுவரை படம் எந்த ஓடிடி தளத்திலும் வெளியாகவில்லை.
சமீபத்தில் லால் சலாம் படம் ஓடிடியில் வெளியாக இருப்பதாக தகவல் பரவியது. இதனைத் தொடர்ந்து இந்த தகவல் பொய்யென்றும் ரஜினி ரசிகர்கள் இப்படியான ஒரு தகவலை பரப்பியதாக கூறப்பட்டது.
விரைவில் ஓடிடியில் வெளியாகும் லால் சலாம்
லால் சலாம் திரைப்படம் விரைவில் ஓடிடியில் வெளியாகும் என படத்தின் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நேர்காணல் ஒன்றில் தெரித்துள்ளார். தொலைந்து போன சில காட்சிகளை மீட்டுள்ளதாகவும் இந்த காட்சிகளை உள்ளடக்கிய டைரக்டர்ஸ் கட் ஒன்று ஓடிடியில் வெளியாகும் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் திரையரங்கில் வெளியானதை இட ஓடிடியில் வெளியாகும் பிரதி முற்றிலும் மாறுபட்டு இருக்கும் என்றும் தான் எடுக்க நினைத்த படமாக இது இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் இப்படம் வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் படிக்க : GV Prakash - Selvaraghavan: மீண்டும் இணையும் வெற்றிக்கூட்டணி - செல்வா, ஜி.வி. ஆயிரத்தில் ஒருவன் - 2 - என்னமோ இருக்கு..!