நடிகர் விஜய்யுடன் என்னை ஒப்பிட்டு பேசுவது கஷ்டமாக உள்ளது என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளது சினிமாவுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


லைகா நிறுவனம் தயாரிப்பில் விக்ராந்த், விஷ்ணு விஷால், நிரோஷா, ஜீவிதா, செந்தில், கே.எஸ்.ரவிகுமார், தம்பி ராமையா உள்ளிட்ட பலரும் நடித்துள்ள படம் “லால் சலாம்”. நடிகர் ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யா கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி இந்த படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் ”மொய்தீன் பாய்” என்ற கேரக்டரில் சிறப்பு தோற்றத்தில் நீண்ட இடைவெளிக்குப் பின் ரஜினிகாந்த் நடித்துள்ளார். இதேபோல் முன்னாள் இந்திய அணியின் கேப்டன் கபில்தேவ் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள லால் சலாம் படம் பிப்ரவரி 9 ஆம் தேதி திரைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதனிடையே லால் சலாம் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று (ஜனவரி 26) நடைபெற்றது. அப்போது பேசிய ரஜினிகாந்த், நடிகர் விஜய் உடனான சர்ச்சை பற்றி பேசினார்.


அதாவது, “ஜெயிலர் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழால் நான் காக்கா - கழுகு கதை சொன்னது வேற மாதிரி சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டது. நான் விஜய்யை சொன்ன மாதிரி போய்டுச்சு. அது எனக்கு நிஜமாகவே வருத்தமா இருந்துச்சு. விஜய் என் கண் முன்னாடி வளர்ந்த பையன். அவர் வீட்டுல தர்மத்தின் தலைவன் ஷூட்டிங் போய்ட்டு இருந்துச்சு. அப்ப விஜய்க்கு 13, 14 வயசு இருக்கும். மேலே இருந்து ஷூட்டிங் பார்த்துட்டு இருப்பாரு. அப்ப சந்திரசேகர் அவரை என்னிடம் கூட்டி வந்து, ‘இவன் என்னோட பையன். நடிப்புல ரொம்ப ஆசை இருக்கு. நீங்க சொல்லுங்க படிச்சிட்டு வந்து நடிக்கலாம்’ என தெரிவித்தார். நான் விஜய்யிடம், ‘நல்ல படிப்பா. அப்புறம் நடிகர் ஆகலாம்’ என சொன்னேன். 






இன்னைக்கு விஜய் நடிகராகி படிப்படியாக தனது திறமை, ஒழுக்கம் மற்றும் உழைப்பால் இந்த சினிமாவுலகில் மேலே ஒரு இடத்துல இருக்காங்க. அடுத்ததாக அரசியல், சமூக சேவைன்னு போறாங்க. இதுல எனக்கும் விஜய்க்கும் போட்டின்னு சொல்றப்ப மனசு கஷ்டமா இருக்குது. விஜய்யும் சரி, நானும் சரி எங்களுடைய பேச்சுகளில் ‘எங்களுக்கு நாங்களே போட்டி”ன்னு தான் சொல்லியிருக்கிறோம். விஜய் வந்து எனக்கு போட்டின்னு நினைச்சா அது எனக்கு மரியாதை இல்லை, கௌரவம் இல்லை. 


விஜய்யும் அப்படி நினைத்தால் அவருக்கும் மரியாதையும், கௌரவமும் இல்லை. தயவுசெய்து இரண்டு பேரோட ரசிகர்களும் எங்கள் இருவரையும் ஒப்பிடாதீர்கள். இது என்னோட அன்பான வேண்டுகோள்” என ரஜினிகாந்த் பேசினார். இதன் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


நடந்தது என்ன? 


கடந்தாண்டு ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் காக்கா- கழுகு கதை ஒன்றை சொன்னார். அதாவது காக்கா எவ்வளவு தான் தொந்தரவு செய்தாலும் கழுகு எதைப்பற்றியும் கவலைப்படாமல் மேலே மேலே செல்லும் என கூறினார். இதில் காக்கா என நடிகர் விஜய்யை தான் அவர் குறிப்பிட்டார் என சமூக வலைத்தளங்களில் கருத்து பரவ இரு நடிகர்களின் ரசிகர்களும் சரமாரியாக சமூக வலைத்தளத்தில் மோதிக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து நடிகர் விஜய் நடித்த லியோ பட வெற்றி விழாவில் அவர் குட்டிக்கதை என காட்டில் வாழும் விலங்குகள் என கழுகையும் குறிப்பிட்டு பேசினார். இது அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. 




மேலும் படிக்க: Lal Salaam Audio Launch: எங்க அப்பா ஒன்னும் சங்கி கிடையாது.. ஐஸ்வர்யா வேதனை - கண் கலங்கிய ரஜினி!