என் அப்பா ரஜினிகாந்தை பார்த்து சங்கி என விமர்சிப்பது வருத்தமாக உள்ளதாக அவரது மூத்த மகளும் இயக்குநருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். 


லைகா நிறுவனம் தயாரிப்பில் ஐஸ்வர்யா இயக்கத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால், நிரோஷா, ஜீவிதா, செந்தில், கே.எஸ்.ரவிகுமார், தம்பி ராமையா உள்ளிட்ட பலரும் நடித்துள்ள படம் “லால் சலாம்”. கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்திய இந்த படத்தில் ”மொய்தீன் பாய்” என்ற கேரக்டரில் சிறப்பு தோற்றத்தில் நீண்ட இடைவெளிக்குப் பின் ரஜினிகாந்த் நடித்துள்ளார். இதேபோல் முன்னாள் இந்திய அணியின் கேப்டன் கபில்தேவ் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள லால் சலாம் படம் பிப்ரவரி 9 ஆம் தேதி திரைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இப்படியான நிலையில் தாம்பரம் அருகே உள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரியில் மிக பிரமாண்டமான முறையில் லால் சலாம் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் ஐஸ்வர்யா பல நிகழ்வுகளை குறிப்பிட்டு பேசியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.


அதாவது, “இந்த மேடை எங்க எல்லாருக்கும் முக்கியமான மேடை. கேமராமேன் விஷ்ணு தான் இந்த படத்தோட கதையை என்னிடம் சொன்னார். கதையை வைத்துக் கொண்டு படம் எடுக்க சிலரை சந்தித்தேன். ஆனால் அவர்களோ என் அப்பா  மேல் உள்ள மரியாதையால் என்னை சந்தித்தது புரிந்தது. என் அப்பா இந்த படத்திற்குள் வந்த பிறகு எல்லாம் மாறிப்போனது. 


அவங்க என்னப்பா பெரிய ஆளுங்க எல்லாம் சுலபமா கிடைக்கும்ன்னு மத்தவங்க நினைப்பாங்க. ஆனால் அதெல்லாம் இல்லை. நான் அப்பாவை பார்த்து கொண்டதை விட, ரசிகர்கள் நன்றாக பார்த்துக் கொண்டார்கள். என் அப்பா எனக்கு ஒரு படம் கொடுத்திருக்கிறார், வாழ்க்கை கொடுத்திருக்கிறார். எனக்கு எப்பவும்  முதலில் அவர் தான். எங்க குழு சமூக வலைத்தளங்களில் வரும் பதிவுகளை காட்டுவங்க. அடிக்கடி என் காதில் விழும். 


எங்க அப்பா ரஜினிகாந்தை சங்கி என விமர்சிக்கிறார்கள். எனக்கு அதைக் கேட்டதும் வருத்தமாக உள்ளது. ரஜினி ஒரு சங்கியாக இருந்திருந்தால் லால் சலாம் படத்தில் நடித்திருக்க மாட்டார். சங்கியால் இந்த படம் பண்ண முடியாது. இந்த படத்தில் அவரைத் தவிர யாரும் தைரியமாக நடித்திருக்க மாட்டார்கள். நீங்கள் எந்த மதமாக இருந்தாலும் சரி லால் சலாம் படம் நிச்சயம் உங்களை பெருமைப்படுத்தும். ரஜினிகாந்த நிச்சயமாக சங்கி இல்லை. இந்த படம் பார்த்தா உங்களுக்கு புரியும்” என தெரிவித்துள்ளார். இந்நிலையில் மகளின் வருத்தமான பேச்சை கேட்டு நடிகர் ரஜினிகாந்த் கண் கலங்கினார். 


முன்னதாக நடிகர் ரஜினிகாந்த் ஆன்மீகத்தில் அதிக நாட்டம் கொண்டவர் என்பது அனைவருக்கும் தெரியும். அவர் ஆன்மீகம் சார்ந்த நிகழ்வுகளில் ஈடுபடுவதோடு மட்டுமல்லாமல், மத்தியில் ஆளும் பாஜக அரசின் செயல்களையும் அவ்வப்போது வெளிப்படையாக பாராட்டுவார். மேலும் தேர்தல் சமயங்கள் பாஜகவுக்கு மறைமுக ஆதரவு தெரிவிக்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார். இதனால் சமூக வலைத்தளங்களில் ரஜினி ஒரு சங்கி என இணையவாசிகள் சரமாரியாக விமர்சித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.