லால் சலாம் படத்தில் நடிகர் ரஜினிகாந்துடன்  நடித்த அனுபவத்தைப் பற்றி நடிகர் விக்ராந்த் பகிர்ந்துகொண்டுள்ளார்.


லால் சலாம்


ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் , விக்ராந்த்  நடித்துள்ள படம் லால் சலாம். ரஜினிகாந்த் கெளரவ  தோற்றத்தில் இப்படத்தில் நடித்துள்ளார். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இப்படம் வரும் பிப்ரவரி 9-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. தற்போது லால் சலாம் படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் நடந்துவரும் நிலையில் இப்படம் குறித்த பல்வேறு தகவல்களை படக்குழு பகிர்ந்து வருகிறார்கள். நடிகர் விக்ராந்த் ரஜினியுடன் இணைந்து பணியாற்றிய தனது அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.


நீ ரொம்ப நல்ல நடிகர்


17 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் நடிகர் விக்ராந்த் இருந்து வருகிறார்.  நடிகர் விஜயின் நெருங்கிய உறவினர் என்பதால் தன்னிடம் கதை சொல்லும் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்கள் பல நிபந்தனைகள் வைப்பார்கள் என்று விக்ராந்த் சமீபத்தில் தெரிவித்தார்.  படத்தில் ஒரு காட்சியில் நடிக்க வேண்டும், அல்லது நடனம் ஆட வேண்டும் , இசை வெளியீட்டுக்கு வர வேண்டும் என பல நிபந்தனைகளை அவர்கள் வைப்பார்கள். நான் யோசிக்காமலேயே முடியாது என்று சொல்லிவிடுவேன் என்று விக்ராந்த் தெரிவித்தார். இதனால் பல வாய்ப்புகளை தான் இழந்துள்ளதாகவும் விக்ராந்த் கூறினார்.


லால் சலாம் படத்தின் படப்பிடிப்பின்போது ரஜினிகாந்த் தன்னை பார்த்து நீங்க ரொம்ப நல்ல நடிகர். இந்த படம் வெளியானதற்கு பிறகு உங்க லைஃப் மாறிடும் என்று சொன்னதாக விக்ராந்த் தெரிவித்தார். இவ்வளவு பெரிய நடிகர் தன்னைப் பார்த்து அப்படி சொன்னது தனக்கு மிகப்பெரிய நம்பிக்கை அளித்ததாக விக்ராந்த் தெரிவித்தார்.


இன்னும் அவர் பாலச்சந்திரன் சிஷ்யன்தான்


ரஜினியுடன் பணியாற்றிய அனுபவத்தைப் பகிர்ந்துகொண்ட விக்ராந்த்,  ‘இந்தப் படத்தில்  நான் அவரிடம் கேட்டுத் தெரிந்துகொண்டதுதான் அதிகம். ஒவ்வொரு முறையும் அவரிடம் சென்று இந்த காட்சியை எப்படி நடித்தீர்கள். இதை எப்படி செய்தீர்கள், ஒரு குறிப்பிட்ட காட்சியில் ஏன் இப்படி நடித்தீர்கள் என்று நிறைய கேட்டிருக்கிறேன். அவர் ஒரு சூப்பர்ஸ்டார் என்பதை தன் தலையில் ஏற்றிக் கொள்ளவில்லை. அவர் இன்னும் தன்னை பாலச்சந்தரின் மாணவனாகதான் பார்க்கிறார். ஒரு செட்டில் 3 ஆயிரம் பேர் இருந்தாலும் எல்லாருடைய கண்ணும் அவர்மீது தான் இருக்கும்.


ஆனால் அவர் அமைதியாக உட்கார்ந்து தீவிரமாக யோசித்துக் கொண்டேதான் இருப்பார். அப்படி என்னதான் யோசிக்கிறார் என்று நான் அவரிடம் ஒருமுறை கேட்டேன். ஒரு காட்சியில் 10 நொடிகூட வீணாக்க தான் விரும்பவில்லை. அதனால் அதை எப்படி சிறப்பாக நடிக்க வேண்டும் என்று தான் யோசிப்பதாக அவர் தெரிவித்தார்.  இயக்குநர் பாலச்சந்தர் தன்னிடம் அடிக்கடி சொல்வதை அவர் என்னிடம் சொன்னார். நான் சொல்வதை தான் நடிக்க வேண்டும் என்றால் அதற்கு எத்தனையோ நடிகர்கள் இருக்கிறார்கள்.  நீ என்ன புதிதாக செய்ய போகிறாய். பாலச்சந்தரின் இந்த குரலுக்காக தான் ரஜினி இன்னும் ஓடிக் கொண்டே இருக்கிறார். இந்த வயதிலும் அவர் புதிதாக ஏதாவது செய்ய வேண்டும் என்று ஆர்வமாக இருக்கிறார்.” என்று விக்ராந்த் கூறினார்