80களின் தெலுங்கு சினிமாவில் தன் நடிப்புப் பயணத்தைத் தொடங்கி கலெக்‌ஷன் கிங்காக வலம் வந்து 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் மோகன் பாபு (Mohan Babu).


நடிகர் ரஜினிகாந்தின் நண்பர் மோகன்பாபுவின் மகள்




நடிகர் ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான மோகன் பாபு ரஜினியுடன் இணைந்து நடித்த நாட்டாமை படத்தின் ரீமேக்கான பெத்த ராயுடு இன்றளவும் கொண்டாடப்படும் ஹிட் படங்களில் ஒன்று. நடிப்பு தாண்டி தயாரிப்பாளர், அரசியல்வாதி என பல தளங்களில் வலம் வந்த மோகன் பாபுவுக்கென தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.


இவரது மகள் பிரபல நடிகை லட்சுமி மஞ்சு (Lakshmi Manchu). தெலுங்கு சினிமாவில் தன் நடிப்புப் பயணத்தைத் தொடங்கி தமிழ், மலையாளம், இந்தி, ஆங்கில, அமெரிக்க வெப் சீரிஸ், தொலைக்காட்சித் தொடர் என பல மொழிகளிலும் நடித்துள்ள லட்சுமி மஞ்சு, மோகன் பாபுவின் மகள் என்பதாலும் பிரபலமாக வலம் வருகிறார். இவரது சகோதரர் விஷ்ணு மஞ்சுவும் தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருகிறார்.


பிரபல நடிகை லட்சுமி மஞ்சு


சென்னையில் பிறந்து வளர்ந்து, அமெரிக்காவில் படிப்பை முடித்தவரான லட்சுமி மஞ்சு, தமிழில் ஜோதிகா நடித்த காற்றின் மொழி, அனுஷ்காவுடன் இஞ்சி இடுப்பழகி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். ஐடி துறையைச் சேர்ந்த ஆண்டி ஸ்ரீநிவாசன் என்பவரைக் கடந்த 2006ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட லட்சுமி மஞ்சுவுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. தன் திருமணத்துக்குப் பின் தொடர்ந்து நடிப்பில் லட்சுமி மஞ்சு கவனம் செலுத்தி வருகிறார்.




இந்நிலையில் தன் அப்பா என்னதான் பெரிய பிரபலமாக இருந்தும் தான் தெலுங்கு சினிமாவில்  சந்தித்த சிக்கல்கள் மற்றும் பெண் வாரிசுகளின் நிலைமை ஆகியவை பற்றி பரபரப்பு கருத்தினை லட்சுமி மஞ்சு பகிர்ந்துள்ளார்.


குடும்பத்துடன் போராட்டம்


பிரபல தனியார் ஊடகத்துக்குப் பேட்டியளித்துள்ள லட்சுமி மஞ்சு, “இந்தியில் நடித்த பிறகு என்னை என் குடும்பத்தினர் மும்பை சென்று நீண்ட காலம் தங்க அனுமதிக்கவில்லை. நான் வட இந்தியாவுக்கு சென்று செட்டில் ஆகாததற்கு அவர்கள் தான் காரணம் அவர்களுக்கு அதில் சங்கடம் இருந்தது. நான் என் தோழி ரகுல் ப்ரீத் சிங் வீட்டில் தங்கி இருந்தேன். ரகுல் நான் மும்பை வர வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தினார். என் மகள் குழந்தையாக இருந்ததும் நான் போகாததற்கு ஒரு காரணம்.


‘தென்னிந்திய சினிமாவில் பெண் வாரிசுகள் நடிகையாவது கஷ்டம்’


நான் இந்த விஷயங்களுக்காக குடும்பத்துடன் போராட வேண்டியிருந்தது. ஆனால் அவை எல்லாம் என் சகோதரனுக்கு ஈஸியாகக் கிடைத்தது. நான் ஆணாதிக்க சமூகத்தால் பாதிக்கப்பட்டேன். தென்னிந்திய சினிமாவில் உள்ள ஆண்கள், ஹீரோக்களின் மகள்கள் அல்லது சகோதரிகள் நடிகையாவதை விரும்பவில்லை. எங்களை அவர்கள் படத்தில் ஒப்பந்தம் செய்வதைத் தவிர்க்கிறார்கள். பின் வாங்குகிறார்கள்.


என்னை இயக்குநர் பிரகாஷ் திரைத்துறையில் அறிமுகப்படுத்தினார். ஆனால் என் அப்பா மோகன் பாபுவும் அவரது அப்பாவும் சேர்ந்து இந்த முயற்சி, யோசனையை விரும்பவில்லை. நாம் ஒரு ஆணாதிக்க சமூகம், அதை அடையாளப்படுத்துவதை விட நாம் அதைப் பற்றி பேச வேண்டும். இது தென்னிந்தியத் துறையில் மட்டுமல்ல, நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ளது. தற்போது நாங்கள் மும்பையில் வசிப்பதால் சலுகைகள் அதிகம் கிடைக்கின்றன” எனப் பேசியுள்ளார்.