நீட் தேர்வு முறைகேடு, ஆள் மாறாட்டம் ஆகிய விவகாரங்கள் விஸ்வரூபம் எடுத்து வருவதை அடுத்து, இதுதொடர்பான விசாரணை அனைத்தும் சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டு, வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நீட் தேர்வும் புகார்க் குரல்களும்
இந்தியாவில் இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு நீட் எனப்படும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த தேர்வானது மிகுந்த கட்டுப்பாடுகள் மற்றும் தீவிர சோதனைகளுக்குப் பிறகு தேசிய தேர்வு முகமையால் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.
அவ்வப்போது வட மாநிலங்களில் நீட் தேர்வில் முறைகேடு நடைபெறுவதாகப் புகார்க் குரல்கள் எழும். இதற்கிடையே 2024ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு கடந்த மே 5 ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வை நாடு முழுவதும் சுமார் 24 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். இதனிடையே ஜூன் 14ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தேர்தல் முடிவுகள் வெளியான 4ஆம் தேதி இரவே தேர்வு முடிவுகளும் வெளியாகின.
கிளம்பிய சர்ச்சைகள்!
இதில் வழக்கத்துக்கு மாறாக 67 பேர் முதல் மதிப்பெண் பெற்றனர். சில மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது, ஆள் மாறாட்டம், வினாத்தாள் கசிவு என நீட் இளநிலைத் தேர்வில் ஏகப்பட்ட சர்ச்சைகள் கிளம்பின.
முதலில் நீட் தேர்வில் முறைகேடுகள் நடந்ததை தேசியத் தேர்வுகள் முகமை மறுத்தது. ஆனால் இதுதொடர்பான விசாரணையில் பலர் கைது செய்யப்பட்டனர். பிஹார், ஹரியாணா ஆகிய மாநிலங்களில் கைது நடந்த நிலையில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நீட் தேர்வில் முறைகேடு நடந்ததை ஒப்புக்கொண்டார்.
சிபிஐ வழக்குப் பதிவு
இதற்கிடையில் நீட் தேர்வு முறைகேடு, ஆள்மாறாட்டம், மோசடி குறித்து விசாரிக்க சிபிஐ வசம் விவகாரம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நீட் தேர்வு முறைகேடு குறித்து சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.
பொதுத் தேர்வு சட்டம் இயற்றம்
இத்தகைய சம்பவங்கள் இனிமேலும் நடைபெறாமல் இருக்க மத்திய அரசு சார்பில் பொதுத் தேர்வு சட்டம் (முறைகேடு தடுப்பு) 2024 இயற்றப்பட்டுள்ளது.
தனிப்பட்ட நபரோ, நிறுவனமோ மாணவர்களின் நலனுக்கு எதிராகச் செயல்படுவது தெரிந்தால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், நீட் தேர்வு முறைகேடு, ஆள் மாறாட்டம் ஆகிய விவகாரங்கள் விஸ்வரூபம் எடுத்து வருவதை அடுத்து, இதுதொடர்பான விவரங்கள் அனைத்தும் சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. விசாரணையைத் தொடங்கிய சிபிஐ, வழக்குப் பதிவு செய்துள்ளது.
இதையும் வாசிக்கலாம்: NEET UG Result 2024: நீட் தேர்வு முடிவில் குளறுபடி? வெளிச்சத்துக்கு வரும் முறைகேடுகள்? விளக்கம் அளிக்குமா என்டிஏ?