தென்னிந்திய சினிமாவில் ஹீரோக்கள் மட்டுமே போலீஸ்களாக கெத்து காட்டி வந்த காலகட்டத்தில் ஒரு ஹீரோயின் போலீஸாக மாஸாக நடித்து ஆக்ஷன் காட்சிகளில் கலக்கியவர் நடிகை விஜயசாந்தி. உண்மையிலேயே லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்திற்கு சொந்தக்காரரான நடிகை விஜயசாந்தி இன்று தனது 57வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 


 




விஜயசாந்தி என்றாலே நேர்மையான போலீஸ் என்பது தான் நினைவில் வரும் அளவிற்கு ரசிகர்களின் மத்தியில் ஒரு இன்ஸ்பிரேஷனல் போலீஸாகவே நடித்து வந்தார். தமிழ் மற்றும் தெலுங்கில் 186க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த விஜயசாந்தி இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் இயக்கத்தில் 1980ம் ஆண்டு வெளியான 'கல்லுக்குள் ஈரம்' படம் மூலம் தமிழில் அறிமுகமானவர். அதே ஆண்டு தெலுங்கில் வெளியான 'கிலாடி கிருஷ்ணடு' படத்தின் மூலம் அறிமுகமானார்.  


போலீஸ் கெட்டப் போட்டு விஜயசாந்தி நடித்த முதல் தெலுங்கு படம் 'கர்தவ்யம்'. மாபெரும் வெற்றிப்படமாக அமைந்த அப்படத்தை தொடர்ந்து தமிழிலும் 'வைஜெயந்தி ஐபிஎஸ்' என்ற பெயரில்  டப்பிங் படமாக வெளியானது. கிரண்பேடி ஐபிஎஸ் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவான படம் என்பதால் பாராட்டுகளை குவித்தது. அப்படத்திற்காக தேசிய விருதையும் கைப்பற்றினார் விஜயசாந்தி. இப்படத்திற்காக ஒரு கோடி ரூபாய் சம்பளமாக பெற்றார். அந்த காலகட்டத்திலேயே இத்தனை பெரிய தொகையை பெற்ற முதல் நடிகை என பெருமையை பெற்றவர். 



தமிழில் விஜயசாந்தி நடித்த மன்னன், போலீஸ் லாக்கப், மெக்கானிக் மாப்பிள்ளை, ராஜஸ்தான் உள்ளிட்ட படங்களும் சூப்பர் ஹிட் படங்களாக வெற்றி பெற்றன. விஜயசாந்தி போலீஸ் கதாபாத்திரங்களில் மட்டுமே நடிக்காமல் பல தெலுங்கு படங்களில் கவர்ச்சியாகவும் நடித்ததால் அவரை கவர்ச்சி ராணி என்றும் அழைத்தனர். சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா, ரஜினிகாந்த், கமல்ஹாசன் என ஸ்டார் நடிகர்களுடன் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு மட்டுமின்றி ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார் விஜயசாந்தி. இவர் கடைசியாக தெலுங்கில் நடிகர் மகேஷ் பாபு நடித்த 'சரிலேரு நீகேவ்வாரு' படத்தில் ரீ என்ட்ரி கொடுத்தார்.  


ஒரு நடிகையாக மக்களின் ஃபேவரட் ஆக்ஷன் நடிகையாக இருந்த விஜயசாந்தி அரசியலிலும் குதித்தார். பாரதிய ஜனதா கட்சியில் 1988ம் ஆண்டு இணைந்து பாஜகவின் மகளிர் பிரிவு செயலாளராக பணியமத்தப்பட்டார். 


திரைப்படத்துறையில் வழங்கப்படும் உயரிய விருதான கலைமாமணி விருது, தமிழ்நாடு அரசு விருது, பிலிம்பேர் விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகளை பெற்றுள்ளார். லேடி அமிதாப் என்றும் செல்லமாக ரசிகர்களால் அழைக்கப்படும் விஜயசாந்திக்கு திரைபிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.