லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா இன்று தனது 39வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவருக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்துகள் குவிந்து வருகிறது.
நடிகைகள் மீது பரப்பப்படும் அவதூறுகள்
எவ்வளவு மகத்தான செயல்களை செய்த ஒரு பெண்ணாக இருந்தாலும் தனிப்பட்ட வாழ்க்கையில் எவ்வளவு உயரத்திற்கு சென்ற ஒரு பெண்ணாக இருந்தாலும் அவரை அவமானப்படுத்த வேண்டும் என்றால் வெகுஜன சமூகம் கையில் எடுக்கும் முதல் ஆயுதம் அந்த பெண்களைப் பற்றிய அவதூறுகளைப் பரப்புவது தான். அதிலும் குறிப்பாக சினிமாவில்.
சினிமால எல்லாம் சகஜம்
’சினிமால இதெல்லாம் சகஜம்’ இந்த வரியை தன்வாழ் நாளில் ஒருமுறைகூட கேட்காதவர்கள் இருக்க மாட்டார்கள்.
சினிமாத் துறைப் பற்றிய பல பொதுப்படையான புரிதல்கள் வெகுஜன மக்கள் மத்தியில் நிலைத்துவிட்டன. அதிலும் குறிப்பாக திரைப்பட நடிகைகள் பற்றி. வரலாறு முழுவதும் அந்ததந்த காலத்திற்கு இந்த பொதுப்படையான புரிதல்களுக்கு பலியான நடிகைகள் இருக்கிறார்கள். சினிமாவில் ஒருவர் பிரபலமான நடிகையாகி விடுகிறார் என்றால் அவர் மீது பாலியல் ரீதியிலான பல்வேறு வதந்திகள் பரப்படும்.
அப்போ சினிமாவில் இது எதுவும் நடக்க வில்லையா என்று கேட்டால். அதை தனியாக விவாதிக்கும் அளவிற்கு ஒரு பெரிய தலைப்பு. சுருக்கமாகச் சொன்னால் எந்த ஒரு துறையிலும் பெண்களின் பங்கு அதிகரித்து வரும் சூழலில் அவர்கள் தங்களது பாலினத்தால் சுரண்டப்படும் சூழல்களே ஆண்களுக்கு சாதகமாக உருவாக்கப் படுகின்றன. ஆண்கள் ஒரு நல்ல நடிகராக வேண்டும் என்றால் அவர் பல்வேறு மனரீதியிலான போராட்டங்களையும் உழைப்பு சுரண்டல்களையும் கடந்து வரவேண்டியதாக இருக்கும். கூடுதலாக அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கைத் தேர்வுகளும் அரங்கம் அமைத்து விவாதிக்கப் படுகிற அளவிற்கு முக்கியமானதாக மாறிவிடுகின்றன. ஆனால் அதே நிலை ஒரு பெண் நடிகருக்கு மனரீதியாகவும் உடல்ரீதியான சவால்களையும் எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது.
இதில் எந்த நடிகை சமரசத்திற்கு ஆளாகிறார் என்பதில்லை கேள்வி . இந்த சூழலை ஏற்படுத்தி அதை வெளிப்படையாக பேச 100 ஆண்டுகள் தேவைப்படும் நிலையை ஏற்படுத்தி வைத்திருப்பதையே இங்கு கேள்வி கேட்க வேண்டிய அவசியம் இருக்கிறது. ஒரு நடிகை இந்த சவால்களைக் கடந்து வெற்றிபெற்றாலும் அவர் மேல் மிக எளிமையான அவதூறுகள் கட்டமைக்கப் படுகின்றன. அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை சாமானிய மனிதர்களின் மத்தியிலும் திரையிட்டு விமர்சிக்கப் படுகின்றன. அப்படியான பொது மனப்பான்மை கட்டமைக்கும் அவதூறுகளில் இருந்து தன்னையும் தனது சினிமா கேரியரையும் பாதுகாத்துக் கொண்டவர் நயன்தாரா.
தன்னுடைய அடையாளத்தை மாற்றிய நயன்தாரா
தன்னுடைய சினிமா வாழ்க்கையை ஐயா படத்தின் மூலம் தொடங்குகிறார் நயன்தாரா. தொடர்ச்சியாக வெற்றிப் படங்களில் நடித்து வரும் நயன்தாரா எல்லா நடிகைகளைப் போல் தன்னுடைய கேரியரை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்ல கிளாமர் டிராக்கிற்கு மாறுகிறார். இதே சமயத்தில் அவரது தனிப்பட்ட வாழ்க்கையும் வெகுஜனத்தில் அதிகம் கவனம் பெறுகிறது. ஹாலிவுட் நடிகர்கள் தங்களது காதலனுடன் நடுரோட்டில் நின்று முத்தம் கொடுத்துக் கொள்கிறார்கள். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின்றன. ஆனால் இதைவைத்து யாரும் அந்த நடிகையின் ஒழுக்கத்தை கேள்விக்கு உள்ளாக்குவதில்லை. ஆனால் இங்கு ஒரு நடிகை தன்னுடைய காதலனை முத்தமிடும் புகைப்படம் கலாச்சார சீரழிவு என்கிற அளவிற்கு மிகைப்படுத்தப் படுகிறது.
லேடி சூப்பர்ஸ்டார்
தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை எப்படிபட்ட விமர்சனங்களை எதிர்கொண்டாலும் அதனை எல்லாம் கவனத்தில் எடுத்துக் கொள்ளாமல் தன்னுடையப் படங்களில் தான் தேர்வு செய்யும் கதாபாத்திரங்களை வைத்து ஒரு புது ஆளுமையாக தன்னை உருவாக்கி இருக்கிறார் நயன்தாரா. ராஜா ராணி , நானும் ரவுடிதான், அறம் , கோல மாவு கோகிலா, இமைக்கா நொடிகள் ஆகிய படங்கள் நயன்தாராவிற்கு மக்கள் மத்தியில் மீண்டும் புதிய ஒரு அடையாளத்தைக் கொடுத்திருக்கின்றன. அதனை செய்துகாட்டியதால் தான் அவரை லேடி சூப்பர்ஸ்டார் என்று அழைப்பதற்கு அவரை தகுதியானவராக மாற்றுகிறது. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் நயன்தாரா..!