குஷி படத்தின் நடிகை சமந்தாவுடனான க்யூட்டான ஆஃப் ஸ்க்ரீன் தருணங்களை நடிகர் விஜய தேவரகொண்டா பகிர்ந்துள்ளார்.


நடிகர் விஜய் தேவரகொண்டா - சமந்தா நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே உருவாகி வரும் திரைப்படம் குஷி.  தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகி வரும் இந்தத் திரைப்படம் வரும் செப்டெம்பர் 1ஆம் தேதி திரையரங்குகளில்  வெளியாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.


ஏற்கெனவே கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான மகாநடி தெலுங்கு ( தமிழில் நடிகையர் திலகம்) இரண்டாவது லீட் ஜோடியாக நடித்த சமந்தா - விஜய் தேவரகொண்டாவின் கெமிஸ்ட்ரி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், இவர்கள் இருவரும் முதன்முறையாக மெய்ன் லீடாக நடிக்கும் குஷி படத்தை இருவரது ரசிகர்களும் பெரிதும் எதிர்பார்த்துக் காத்துள்ளனர்.


ரொமாண்டிக் காமெடியாகத் தயாராகி வரும் இந்தப் படத்தை சிவ நிர்வாணா இயக்கியுள்ளார். சச்சின் கெதெக்கர், ராகுல் ராமக்கிருஷ்ணா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மலையாள சூப்பர் ஹிட் திரைப்படமான ‘ஹிருதயம்’ படத்துக்கு இசையமைத்த ஹேஷம் அப்துல் வஹாப் தான் இந்தப் படத்துக்கும் இசையமைத்துள்ளார். 


காஷ்மீரில் தொடங்கிய இந்தப் படத்தின் படப்பிடிப்பு  ஹைதராபாத், அலப்பி, விசாகப்பட்டினம் ஆகிய பகுதிகளில் தொடர்ந்தது. ஆனால் நடிகை சமந்தா மயோசிட்டிஸ் பாதிப்பால் இடையே பாதிக்கப்பட்ட நிலையில், தொடர்ந்து படப்பிடிப்பு தடைபட்டது.  இந்நிலையில் குஷி படத்தின் முதல் பார்வை போஸ்டர், ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் ஆகியவை முன்னதாக வெளியாகி வரவேற்பைப் பெற்றன.


அந்த வரிசையில் தற்போது விஜய் தேவரகொண்டா, நடிகை சமந்தா மீதான தன் அன்பை வெளிப்படுத்தும்
வகையில், அவருக்குத் தெரியாமல் ரீல்ஸ் எடுத்து வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார். 


குஷி படப்பிடிப்புத் தளத்தில் சமந்தாவிடன் சேட்டை செய்யும் தன் வீடியோ தொகுப்பைப் பகிர்ந்துள்ள விஜய் தேவரகொண்டா,  “உங்களுக்கானவர் நீங்கள் செலுத்தும் அன்பை எப்போதுமே உணராவிட்டாலும், அவர் மீது உங்களுக்கு எவ்வளவு உள்ளது என்பதை சொல்லும் படம் குஷி. தவறவிடாதீர்கள்” எனப் பதிவிட்டுள்ளார்.


இந்த வீடியோவை விஜய் தேவரகொண்டா தன் இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ள நிலையில், சமந்தா - விஜய் தேவரகொண்டாவின் ரசிகர்கள் இந்த வீடியோவைப் பகிர்ந்து ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.


 






கடந்த மே 9ஆம் தேதி விஜய் தேவரகொண்டா தன் பிறந்தநாளைக் கொண்டாடிய நிலையில், அவரது பிறந்தநாள் ஸ்பெஷலாக இந்தப் படத்தின் ‘என் ரோஜா நீயா’ எனும் பாடல் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.


விக்னேஷ் சிவனின் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தைத் தொடர்ந்து, சமந்தா  இந்தப் படத்தில் இஸ்லாமியப் பெண்ணாக நடித்து வரும் நிலையில், மதம் தாண்டிய காதலை மையப்படுத்தி இந்தப் படம் அமைந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.