தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான ஒரு நடிகையாக தவிர்க்க முடியாத ஒரு ஹீரோயினாக இருந்தவர் நடிகை குஷ்பூ. நடிகைகளுக்கு கூட கோயில் கட்டுவோம் என கோயில் கட்டி கொண்டாடும் அளவிற்கு வெறித்தனமான ரசிகர்கள் குஷ்பூவிற்கு இருந்தனர். இன்றும் திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் சிறப்பாக நடித்து  வருவதோடு, சின்னத்திரையிலும் சீரியல், ரியாலிட்டி ஷோக்களில் நடுவராகவும் இருந்து வருகிறார். திரைப்பயணத்தில் சிறப்பாக ஈடுபடும் குஷ்பூ அரசியலிலும் தனது பங்களிப்பை கொடுத்து வருகிறார்.



 


1988ம் ஆண்டு ரஜினிகாந்த், பிரபு நடிப்பில் வெளியான 'தர்மத்தின் தலைவன்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து கன்னடம், தெலுங்கு, மலையாளம் என அனைத்து தென்னிந்திய மொழி படங்களிலும் முன்னணி நடிகர்களுடன் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் பிரான்சில் நடைபெற்ற கான் திரைப்பட விழாவில் கூட இந்தியாவின் பாரம்பரிய உடையான பட்டு புடவையில் பங்கேற்று அனைவரின் கவனத்தை ஈர்த்தார். 


சோசியல் மீடியாவில் குஷ்பூ :


சோசியல் மீடியாவில் என்றுமே ஆக்டிவாக இருக்கும் குஷ்பூ, உடல் எடையை வெகுவாக குறைத்து இரண்டு வளர்ந்த மகள்களுக்கு தாய் போல இல்லாமல் யங்ஸ்டர் போல தோற்றமளிக்கிறார். விதவிதமாக புகைப்படங்களையும், வீடியோவையும் போஸ்ட் செய்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். சமூகம் சார்ந்த தனது கருத்துக்களையும் அவர் சோசியல் மீடியா மூலம் பகிர தவறுவதில்லை. அந்த வகையில் கன்னட நடிகர் ரவிச்சந்திரனின் பிறந்தநாளை முன்னிட்டு வீடியோ போஸ்ட் ஒன்றை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். 


 



கன்னடத்தில் அறிமுகம் :


1988ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான 'ரணதீரா' என்ற படத்தில் நடிகர் ரவிச்சந்திரன் ஜோடியாக அறிமுகமானார். அறிமுகமான முதல் படமே கன்னட மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலிலும் சாதனை படைத்தது. முதல் படத்திலேயே ஒரு பெரிய ரசிகர் பட்டாளத்தையே ஈர்த்தார். மூன்று முறை ரவிச்சந்திரன் - குஷ்பூ இணைந்து நடித்துள்ளனர். இறுதியாக 2011ம் ஆண்டு வெளியான 'நானல்லா' என்ற நடித்து இருந்தார் குஷ்பூ.   






குஷ்பூ வெளியிட்ட வீடியோ போஸ்ட் :


நடிகர் ரவிச்சந்திரன் பிறந்தநாளுக்காக 'ரணதீரா' படத்தில் இடம்பெற்ற  ஒரு பாடலுக்கு நடனமாடிய வீடியோ ஒன்றை சோசியல் மீடியாவில் பகிர்ந்து அவருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். மேலும் கன்னட ரசிகர்கள் அவருக்கு கொடுத்த வரவேற்புக்கு கடமைப்பட்டவளாக என்றும் இருப்பேன் என்றும் ரணதீரா படம் மூலம் ஏராளமான ரசிகர்கள் அவருக்கு கிடைத்ததையும் தெரிவித்துள்ளார். 50 வயதை கடந்தும் குஷ்பூவின் நளினமான நடனம் அவரின் ரசிகர்களின் பாராட்டுக்களை குவித்துள்ளது.