14 ஆண்டுகள் ஆனாலும் இன்றும் நட்பின் இலக்கணம் சொல்லும் "குசேலன்"  


எந்த ஒரு உறவும் இல்லாமல் மனிதனால் வாழ்ந்திட முடியும் ஆனால் நட்பு இல்லாத ஒரு உயிர் இருக்கவே முடியாது. அப்படி நட்பை மையமாக வைத்து தமிழ் சினிமாவில் பல திரைப்படங்கள் அன்று முதல் இன்று வரை வெளியாகி கொண்டு தான் இருக்கின்றன. இதில் மிகவும் பிரபலம் நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். நட்பை மையமாக வைத்து பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார் தலைவர். அதில் முக்கியமான படங்கள் அண்ணாமலை, பாட்ஷா, தளபதி, குரு சிஷ்யன், குசேலன். அந்த வரிசையில் குசேலன் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 14 ஆண்டுகள் ஆகின்றன. 


இயக்குனர் பி.வாசு இயக்கத்தில், புஷ்பா கந்தசாமி, G.P விஜய குமார் மற்றும் அஷ்வாணி தத் தயாரிப்பில், ஜி. வி. பிரகாஷ் இசையமைப்பில்    ஆகஸ்ட் 1, 2008ம் தேதி வெளியானது. இந்த திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பசுபதி, மீனா, நயன்தாரா, வடிவேலு, சந்தானம், லிவிங்ஸ்டன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். 


பி.வாசு - ரஜினிகாந்த் ஜோடி :


2005ல் பி. வாசு இயக்கத்தில் வெளியான சந்திரமுகி திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து குசேலன் திரைப்படம் மூலம் மீண்டும் இணைந்தனர். மலையாளத்தில் நடிகர் மம்மூட்டி நடித்த கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்து இருந்தாலும், அவருக்கே உரித்தான தனித்துவமான நடிப்பையும் அவரின் சாயலும் இப்படத்தில் இடம்பெற்றன. குசேலன் திரைப்படத்தில்  இளமை பருவத்தில் ஒரு கிராமத்துவாசிக்கும் அவரது நண்பரான சினிமா நடிகருக்கும் இடையே இருந்த நட்பு பற்றியே கதை நகர்கிறது. 


 



சர்ச்சையின் முடிவு : 


படம் வெளியாவதற்கு முன்னர் மக்களிடம் இருந்த எதிர்பார்ப்பு வெளியான பின்பு பல எதிர்மறை விமர்சனங்களை பெற்றது. குசேலன் திரைப்படத்தில் ரஜினிகாந்த் 60 நிமிடங்கள் மட்டுமே திரையில் தோன்றினார். அவர் கௌரவ வேடத்தில் மட்டுமே நடித்திருந்தார். படம் எதிர்பார்த்த வசூலை ஈட்டாததால் தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்களுக்கிடையே பெரும் தகராறு ஏற்பட்டு திரையுலகில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. பிறகு பல பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு சுமூகமான முடிவிற்கு வந்த பிறகு சர்ச்சைக்கு ஒரு முடிவு வந்தது. இந்த பிரச்சனைக்கு ரஜினிகாந்த் அவர்களுக்கு நேரடி தொடர்பு இல்லை என்றாலும் தானாக முன்வந்து 35 சதவிகித நஷ்ட ஈடை தான் ஏற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


குசேலன் திரைப்படத்தில் ஜி.வி. பிரகாஷ் இசையமைப்பில் வெளியான சினிமா சினிமா பாடல் திரையுலகில் தமிழ் சினிமாவின் 75வது ஆண்டு நிறைவுபெற்றதை நினைவுபடுத்தியது. பல சர்ச்சைகளை இப்படம் கண்டாலும் நட்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் மற்றும் நட்பிற்கு ஒரு இலக்கணமாக விளங்கியது இப்படம்.