காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால், தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து வினாடிக்கு 24,000 கன அடியிலிருந்து 45,000 கன அடியாக அதிகரிப்பு.

 

கர்நாடக, கேரளா காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், கர்நாடக அணைகளான கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகள் நிரம்பியுள்ளது. இதனால் தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு மீண்டும் படிப்படியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. மேலும் இன்று காலை நிலவரப்படி கபினி கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து வினாடிக்கு 15,189 கன அடி என மொத்தம் 20,189 கன அடியாக தண்ணீர் அதிகரித்து திறக்கப்பட்டுள்ளது.

 



 

 

 

இந்நிலையில் கர்நாடக அணைகளில் நீர்திறப்பு அதிகரிப்பு மற்றும்  கடந்த சில நாட்களாக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுவுக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. நேற்று காலை நிலவரப்படி நீர்வரதது அதிகரித்து வினாடிக்கு 18,000 கன அடியிலிருந்து வினாடிக்கு 21,000 கன அடியாக இருந்தது. நேற்று காலை மேலும் நீர்வரத்து அதிகரித்து, வினாடிக்கு 24,000 கன அடியாக உயர்ந்தது. தொடர்ந்து காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், நேற்று மாலை நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து, வினாடிக்கு 40,000 கன அடியாக உயர்ந்தது. இன்று காலை மேலும் அதிகரித்து வினாடிக்கு 45,000 கன அடியாக உயர்ந்துள்ளது. மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதால், தண்ணீர் ஒகேனக்கல் வரை தேக்கமடைந்துள்ளது. இதனால் மெயினருவி, சினியருவி, ஐந்தருவிகள் உள்ளிட்டவைகளை தண்ணீர் மூழ்கடித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

 

தொடர்ந்து இன்று 23-வது நாளாக  ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகளுக்கான தடை நீடித்து வருகிறது. மேலும் தொடர்ந்து நீர்வரத்து இருப்பதால், காவிரி கரையோரப் பகுதிகளில், வருவாய், ஊரக வளர்ச்சி, தீயணைப்பு மற்றும் காவல் துறையினர் ரோந்து பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கர்நாடக அணைகளில் நீர்திறப்பு அதிகரிப்பு மற்றும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால், மேலும் நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க வாய்ப்புள்ளது என மத்திய நீர் ஆணைய அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.