விவசாயிகள் மற்றும் நுகர்வோர்கள் இடையே நேரடி சந்தைப்படுத்துதலை ஊக்குவிக்க கடந்த 1999-ம் ஆண்டு உழவர் சந்தை திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியது. உழவர் சந்தைகளின் முக்கிய நோக்கம் விவசாயிகளுக்கு லாபகரமான விலையை உறுதி செய்வதும், நுகர்வோர்களுக்கு தரமான காய்கறிகளை நியாயமான விலையில் வழங்குவதும் ஆகும். இங்கு விவசாயிகள் சாகுபடி செய்யும் வாழை, காய்கறி உள்ளிட்ட தோட்டக்கலைப் பயிர்களை வாடகை கட்டணம் இல்லாமல், நேரடியாக மக்களிடம் விற்பனை செய்து வருகின்றனர். இதற்காக, விவசாயிகள் உற்பத்தி செய்யும் இடத்தில் இருந்து, உழவர் சந்தைகளுக்கு கொண்டு வந்து விற்பனை செய்யப்படுகிறது.
மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் விற்பனை :
இந்நிலையில், மாவட்டந்தோறும் ஒரு இடத்தில் மாலை நேர உழவர் சந்தைகள் செயல்படும் என சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். இவை, தினசரி மாலை 4 மணி முதல், இரவு 8 மணி வரை செயல்படும். இதில், மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள், சிறுதானிய வகைகள் விற்பனை செய்யப்படும். இதன் மூலம் விவசாயிகளை நேரடியாக வியாபாரிகளாக மாற்றும் தொலைநோக்கு சிந்தனையில், இந்த திட்டம் அறிவிக்கப்பட்டது. இதன்படி தஞ்சை மாவட்டத்தில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிக துறையின் தஞ்சை உழவர் சந்தையில் உற்பத்தியாளர் நிறுவனங்கள், தங்கள் நிறுவனத்தின் மதிப்பு கூட்டுதல் செய்யப்பட்ட பொருட்களின் விற்பனை தொடங்கியது.
இதில் தமிழ்நாடு நீர்ப்பாசன நவீன மயமாக்கல் திட்டம் பிரகதீஸ்வரர் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம், கும்பகோணம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் திரு நாடு கூட்டுப்பண்ணை உற்பத்தியாளர் நிறுவனம் ஆகிய நிறுவனங்களில் இருந்து சிறு தானியங்கள் பருப்பு வகைகள், மாவு வகைகள், மளிகை பொருட்கள், தேன், டீத்தூள், தேங்காய் மற்றும் பல மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் கொண்ட கடைகள் திறக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டன. முன்னதாக உற்பத்தியாளர்களின் நிறுவனங்களின் தலைவர்கள் மதியழகன் சிவக்குமார் விஜி அப்பாதுரை கண்ணன் ஆகியோர் தலைமையில் தொடக்க விழா நடந்தது. உழவர் சந்தை நிர்வாக அலுவலர் ஜெய்ஜி பால் வரவேற்றார். இதில் வேளாண் விற்பனை அலுவலர் பிரதீப் கண்காணிப்பாளர் முருகானந்தம் விற்பனை குழு உதவி வேளாண்மை அலுவலர் கணேசன், ராஜ்குமார் மோனிஷா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர்.
மாலை வேளையில் உழவர் சந்தைகளில் இதுபோன்ற மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் விற்பனையால் விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கிறது. மேலும் நேரடியாக நுகர்வோர்கள் தரமான பொருட்களை வாங்குவதற்கும் ஏதுவாகிறது. இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தும் அரசும் மற்றும் அதிகாரிகளுக்கு பொதுமக்கள் பாராட்டுக்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்