தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத கமர்ஷியல் இயக்குநர் என பெயரெடுத்த கே.எஸ்.ரவிகுமாரின் முதல் படமான ‘புரியாத புதிர்’ வெளியாகி இன்றோடு 33 ஆண்டுகள் நிறைவடைகிறது. 


முதல் படத்திலேயே முத்திரை பதித்த கே.எஸ்.ரவிகுமார் 


தமிழ் சினிமாவில் மிக அற்புதமாக படங்களை கொடுத்ததோடு மட்டுமல்லாமல் மிகப்பெரிய இயக்குநர்களை அறிமுகம் செய்த பெருமை ஆர்.பி.சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்துக்கு உண்டு. அந்த வகையில் பார்த்திபனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த விக்ரமனை புது வசந்தம் படம் சூப்பர் குட் நிறுவனம் இயக்குநராக்கி அழகு பார்த்தது. அவரிடம் பணியாற்றிய கே.எஸ்.ரவிகுமார் அதே சூப்பர் குட் நிறுவனம் மூலம் இயக்குநராக எண்ட்ரீ கொடுத்தார். 


மிரள வைத்த ‘புரியாத புதிர்’ 


1990 ஆம் ஆண்டு வெளியான புரியாத புதிர் படம் ஒரு க்ரைம் திரில்லர் வகையை சேர்ந்தது. இந்த படத்தில் ரஹ்மான், ரகுவரன், சரத்குமார், ஆனந்த் பாபு, ரேகா, சித்தாரா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். எஸ்.ஏ.ராஜ்குமார் இந்த படத்துக்கு இசையமைத்திருந்தார்.


படத்தின் கதை 


மரண தண்டனை கைதியான ரஹ்மான் சிறையிலிருந்து தப்பி ரேகா இருக்கும் பங்களாவுக்குள் வருவார். அங்கு அவரின் கணவர் ரகுவரன் கொல்லப்பட்டிருப்பார். இருவரும் சேர்ந்து உடலை அப்புறப்படுத்த முயலும் போது விமான விபத்தை ஒன்றை தொடர்புபடுத்தி பிரச்சினையை முடிப்பார்கள். இதனைத் தொடர்ந்து ரகுவரனுடான பிளாஸ்பேக் காட்சிகள் வரும். அதில் ரேகாவும், அவர் நண்பர் ஆனந்த பாபுவும் சந்தித்ததை தவறாக புரிந்து கொண்டு ரகுவரன் ஆனந்த் பாபுவை அடிப்பார். அடுத்த சிறிது நேரத்தில் ரகுவரன் இறந்திருப்பார். 


இதனிடையே ரேகாவுக்கு ரகுவரன் உடலை அப்புறப்படுத்தியது தொடர்பாக பணம் கேட்டு மிரட்டல் வரும். இவர்கள் இருவரும் சந்தேகம் ஆனந்த் பாபு மீது திரும்பும். ஆனால் இந்த வழக்கை ரகசியமாக விசாரிக்கும் சரத்குமார், மிரட்டல் விடுத்த டெல்லி கணேஷ் மட்டுமல்லாது ரேகா, ரகுமான், ஆனந்த் பாபு என எல்லோரையும் கைது செய்வார். இங்கு நடக்கும் விசாரணையில் ரகுமான் தான் உண்மையான கொலையாளி என தெரிய வரும். அது ஏன்? என்பதே இப்படத்தின் கதையாகும்.


முதல் படமே ரீமேக் 


கே.எஸ்.ரவிகுமாரின் முதல் படமான புரியாத புதிர் ஒரு ரீமேக் படமாகும். 1958 ஆம் ஆண்டு ஆங்கில எழுத்தாளரான அகதா கிறிஸ்டி எழுதிய தி அன் எக்சக்டட் கெஸ்ட் என்ற நாவல் கன்னடத்தில் தர்கா என்னும் பெயரில்  வெளியானது. இதனை 1989ம்  ஆண்டு மலையாளத்தில் சோத்யம் என்ற பெயரில் ஆர்.பி.சௌத்ரி ரீமேக் செய்தார். ஆனால் இப்படம் அவருக்கு திருப்தியளிக்கவில்லை. 


இதனைத் தொடர்ந்து தமிழில் ரீமேக் செய்ய முடிவு செய்யப்பட்டு அதற்காக விக்ரமனின் உதவியாளராக இருந்த கே.எஸ்.ரவிக்குமாரிடம் திரைக்கதை எழுதச் சொன்னார். 30 நாட்களில் நாள் ஒன்றுக்கு ரூ.1 லட்சம் என்னும் பட்ஜெட் கணக்கிடப்பட்ட நிலையில் 29 நாட்களில் படப்பிடிப்பை முடித்து தயாரிப்பாளருக்கு ஒரு லட்சத்தை மிச்சப்படுத்திய ரவிக்குமார் ஆச்சரியம் கொடுத்தார்.