லக்‌ஷ்மண் உடேகர்  இயக்கத்தில் கிருதி சனோன் மற்றும் பங்கஜ் திருபாதி நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் மிமி. நெட்ஃபிளிக்ஸ் ஒடிடி தளத்தில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. வாடகை தாயாக மாறும் இளம் பெண் சந்திக்கும் பிரச்சனையை ஒன்லைனாக வைத்து இந்த படத்தை  சுவாரஸ்யமான கதைக்களத்துடன் உருவாக்கியுள்ளார் இயக்குநர். படத்தில் நடித்த அத்தனை நடிகர்களும் தங்களுக்கு வழங்கப்பட்ட கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்துள்ளனர். அதுதான் படத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய காரணமாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் படத்தின் முக்கிய கதாபாத்திரமாக வலம் வரும் சிறுவன் தற்போது லட்சக்கணக்கான ரசிகர்களின் இதயங்களை  வெற்றுள்ளார். 





ஜேக்கப் ஸ்மித் என்ற அந்த 5 வயது சிறுவன் படத்தில் ‘ராஜ்’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  இவர் ஸ்காட்லாந்தை சேர்ந்தவர் . தனது பெற்றோருடன் விடுமுறை நாட்கள் சுற்றுப்பயணத்தில் இருந்த சிறுவனை படக்குழுவினர் கோவாவில் கண்டுள்ளனர். படத்தில் நடிக்க வைக்க விருப்பம் இருக்கிறதா என்பது குறித்து பெற்றோரிடம் பேச்சு வார்த்தை நடத்திய போது முதலில்  ஸ்காட்லாந்த் தம்பதிகள் மறுத்துள்ளனர். பின்னர் அவர்களை சமாதானப்படுத்தியர் மிமி படக்குழுவினர், ஒரு வழியாக மும்பை அழைத்து வந்துள்ளனர். அங்கு சிறுவன் ஜேக்கப் ஸ்மித்திற்கு வசன உச்சரிப்பு , நடிப்பு  குறித்த பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஜேக்கப்பின் பெற்றோர்கள் இந்தியாவில் சிறிது காலம் தங்கியிருந்தார்களாம். படத்தில் ஏதோ இந்தி மொழி தெரிந்த குழந்தை போல  அவ்வளவு தத்ரூபமாக வாயசைத்து பலரை கவர்ந்துள்ளார். 







சிறுவன் ஜேக்கப்புடன் நடித்த அனுபவங்களை பகிர்ந்துக்கொண்ட மிமி படத்தின் நாயகி கிருதி சனோன் “ உங்களுக்குள் இருக்கும் குழந்தையை எப்போதும்  உயிர்ப்புடன் வைத்திருங்கள் அது உங்கள் படப்பிடிப்பின் போது உதவும், பாருங்கள் அங்கிருக்கும் அனைத்து நடிகர்களையும் இவர் எப்படி குழந்தையாக மாற்றிவிட்டான் என்று “ என வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் சிறுவனுடன் நாயகி மற்றும் படக்குழுவினர்  செலவிட்ட ஜாலியான தருணங்களையும் , சிறுவன் ஜேக்கப் குறித்து பேசிய காட்சிகள் இடம்பெற்றுள்ளன.படப்பிடிப்பு முடிந்தவுடன் சிறுவன் சொந்த நாடு திரும்ப ஆயத்தமான போது படக்குழுவினர் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துவிட்டார்களாம். நடிகை கிருதி சனோனும் கூட கணத்த இதயத்துடனே சிறுவன் ஜேக்கப்பை வழி அனுப்பி வைத்தாராம். அந்த அளவுக்கு படப்பிடிப்பு தளத்தில்  துறு துறு சமத்து பையாக இருப்பாராம் ஜேக்கப். மிமி படத்தில் ராஜாக நடித்திருக்கும் ஜேக்கப்பை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர். வெளிநாட்டில் வாழும் தம்பதிகளுக்கு வாடகைத்தாயாக மாறும் ஒரு பெண்ணின் , எமோஷன் நிறைந்த வாழ்க்கைதான் மிமி திரைப்படம். இந்த படம் பல விருதுகளை குவிக்க வாய்ப்பிருப்பதாக சினிமா வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்