எல்லா இடத்திலும் அரசியல் இருக்கும் நிலையில் அதைத்தாண்டி தான் நாம் நிற்கிறோம் என பட்டிமன்ற பேச்சாளர் பழனி நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 


விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு ரியாலிட்டி காமெடி நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடத்தில் மிகப்பெரிய அளவில் பிரபலமானவர் பட்டிமன்ற பேச்சாளர் பழனி.  இதனைத் தொடர்ந்து கனா காணும் காலங்கள் சீரியலின் இரண்டாம் பாகத்திலும் நடித்திருந்தார். மேலும் சீமராஜா, மாவீரன், பாபா பிளாக் ஷீப் உள்ளிட்ட படங்களிலும் பழனி நடித்துள்ளார். மேலும் பட்டிமன்றங்களில் தனது பேச்சால் ஏகப்பட்ட ரசிகர்களையும் கவர்ந்துள்ளார்.  இப்படியான நிலையில் நேர்காணல் ஒன்றில் அவர் தன் காதல் கதையை தெரிவித்துள்ளார். 


அதில், “எல்லா இடத்திலும் அரசியல் இருக்கும். அதை தாண்டி தான் நம்ம நிக்கிறோம். நடிப்பு என்பது இரண்டாம் பட்சம் தான். என்னுடைய பேச்சு தான் அடையாளப்படுத்தியது.மாவீரன் படத்தில் ஒரு கேரக்டர் பண்ணினேன். தொடர்ந்து சில படங்கள் பண்ணிக் கொண்டிருக்கிறேன். நம்ம வேலையை செய்வோம், பலன் கிடைக்கும்போது கிடைக்கும். அதேபோல் என் மனைவி சங்கீதாவுடன் ஸ்டேஜில் பண்ணிய கவுண்டர் காமெடி பெர்பார்மன்ஸ்கள் தான் திரையில் நானும், அறந்தாங்கி நிஷாவும் பண்ணியது. 


2000 ஆம் ஆண்டு நான் சென்னைக்கு வந்தேன். அப்போது தி.நகரில் உள்ள ராமகிருஷ்ணா மிஷன் பள்ளியில் பேச்சு போட்டி ஒன்றின்போது தான் மனைவி சங்கீதாவை பார்த்தேன். ப்ரபோஸ் பண்ணியது எல்லாம் இல்லை. எங்களுக்கு பிடிச்சி இருந்தது. போட்டிகளுக்காக வரும்போது பார்ப்பது, பேசுவதும் மட்டும் தான் இருந்தது. மனைவியிடம் திருமணம் செய்வது தொடர்பாக ஒரு உறுதியான நிலைப்பாடு இருந்தது. ஆனால் எனக்கு கொஞ்சம் தயக்கம் இருந்தது. 


அவர்கள் வீட்டில் கல்யாணத்துக்கான பேச்சை தொடங்கிய போது தான் உண்மையை வெளியே சொல்லும் நேரம் வந்தது. அதனால் கல்யாணம் செய்துக் கொண்டு தான் விஷயத்தையே சொன்னோம். நாங்கள் பயத்தால் முதலிலேயே பதிவு திருமணம் செய்தோம். அன்றைய தினம் நண்பர் ஒருவர் மூலமாக வீட்டுக்கு காதல் விஷயத்தை கொண்டு சென்றோம். பிரச்சினை வெடித்தது. அதன்பிறகு அதிகாரப்பூர்வமாக தேதி முடிவு செய்து ஊரில் வைத்து கல்யாணம் பண்ணோம். மொத்தம் 3 கல்யாணம் ஒரே பெண்ணை செய்தேன். சங்கீதா வீட்டில் பதிவு திருமணத்தை கேன்சல் செய்ய சொன்னார்கள். ஆனால் முடியாது என சொன்னதால் காதலின் உறுதியை புரிந்து கொண்டார்கள். நாங்கள் இரண்டும் பேரும் பேராசிரியர்கள் என்பதால் தைரியமாக இருந்தோம்” 




மேலும் படிக்க: Actor Sairam: புற்றுநோய் பாதிப்பால் அவதி... பிரபல நடிகர் சாய்ராமின் அறியப்படாத சோகக்கதை