TNPSC குரூப் 4 தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்பு, டாக்டர் அம்பேத்கர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் சார்பில் சென்னையில் பிப்ரவரி 11ஆம் தேதி தொடங்க உள்ளது.
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான தேதியை தமிழ்நாடு அரசு பணியாளர் ஆணையம் அண்மையில் அறிவித்துது. அதன்படி, வரும் ஜூன் மாதம் 6ஆம் தேதி குரூப் 4 தேர்வு நடைபெற உள்ளது. இதன் மூலம் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 6 ஆயிரத்து 244 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
தேர்வு எழுத விரும்புவோர் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் 28.02.2024, இரவு 11.59 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. விண்ணப்பங்களை சரிபார்க்க 04.03.2024 அதிகாலை 12.01 மணியில் இருந்து 06.03.2024, இரவு 11.59 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் குரூப் 4 தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்பு, டாக்டர் அம்பேத்கர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் சார்பில் வழங்கப்பட உள்ளது. இதுகுறித்து அந்த பயிற்சி மையத்தின் ஒருங்கிணைப்பாளர் வாசுதேவன் வெளியிட்ட அறிவிப்பு:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள குரூப் 4 போட்டித் தேர்வுக்கு எங்கள் மையம் சார்பில் கட்டணம் இல்லாமல் இலவசமாகப் பயிற்சி அளிக்க உள்ளோம்.
பொதுத் துறையில் உள்ள காப்பீட்டு ஊழியர்களை உள்ளடக்கிய அகில இந்திய காப்பீட்டு ஊழியர் சங்கமும், தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் இணைந்து இலவச வகுப்புகளை நடத்தி வருகிறோம். இங்கு படித்த 1300-க்கும் மேற்பட்ட மாணவர்கள், பல்வேறு போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று அரசுப் பணிகளில் உள்ளனர்.
கலந்துரையாடல் வகுப்பு
தமிழக அரசின் அறிவிப்பில் வெளிவந்த 6,244 குரூப் 4 பணி இடங்களுக்கு, மாதிரித் தேர்வுகளுடன் கூடிய கலந்துரையாடல் வகுப்பு உடனடியாக தொடங்க உள்ளது. தொடர்ந்து அதிகப்படியான வெற்றியாளர்களை உருவாக்கி வரும் கலந்துரையாடல் வகுப்பு (Test batch with discussion) மாணவர்களின் திறமைகளை அதிகரிப்பது மட்டுமல்லாமல் எல்லா தகவல்களும் குழு விவாதத்திலேயே கிடைத்து விடுகிறது. அவ்வப்போது துறைசார்ந்த வல்லுனர்களின் ஆலோசனைகளும் மாணவர்களிடையே பகிரப்படுகிறது.
யாரெல்லாம் கலந்துகொள்ளலாம்? என்ன தகுதி?
வார இறுதி நாட்களில் நடைபெறும் இப்பயிற்சி வகுப்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களும், பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏனைய அனைத்துப் பிரிவு மாணவர்களும் கலந்து கொள்ளலாம்.
சென்னை பாரிமுனையில் 6/9, அக்ராகரம் சந்து (கச்சாலீஸ்வரர் ஆலயம்) அருகில் உள்ள அரண்மனைக்காரன் தெருவில் உள்ள டாக்டர் அம்பேத்கர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் 11.02.2024 ஞாயிறு அன்று முதல் வகுப்புகள் தொடங்கும்.
ஒவ்வொரு வாரமும் சனி, மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வகுப்பு நடைபெறும். மேலும் இப்பயிற்சியில் கலந்து கொள்ள ஆர்வமுள்ள அனைத்துப் பிரிவு மாணவர்களும் முன்பதிவு செய்வதுடன் மார்பளவு புகைப்படத்துடன் குடியிருப்பு முகவரிக்கான ஆதார நகலையும் கொண்டு வர வேண்டும்.
கூடுதல் விவரங்களை 90950 06640, 63698 74318, 97906 10961, 95665 60017 94446 41712 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டும் பெறலாம்.