கோவை சரளா என்றாலே இரண்டு பாடல்கள் ரசிகர்கள் கண்களின் வந்து செல்லும் முன்பெல்லாம் மாருகோ மாருகோ மாருகயி.. இப்போதெல்லாம் சிநேகிதனை.. சிநேகிதனை.. ரகசிய சிநேகிதனை.. பாடல். ஒரிஜினல் வெர்ஷனையே மறக்கடித்து மணி சாரின் காதல் ரசத்தை மங்கவைத்து கோவை சரளா விஞ்சிவிட்டார் என்றே சொல்லலாம்.
காமெடி தொடங்கி குணச்சித்திரம் வரைக்கும் கைவந்த கலையாக கொண்ட கோவை சரளாவின் கலகல பேட்டியிலிருந்து:
காமெடியில் கவுண்டமணி, செந்திலுக்கு ஒரு ஸ்டைல்னா விவேக், வடிவேலு, சந்தானம், யோகிபாபுவுக்கு ஒரு ஸ்டைல். இப்போது இண்டஸ்ட்ரியில் நிறைய காமெடி நடிகர்கள் வந்துவிட்டார்கள். அதனால் யாருக்கும் திறமையில்லை என்று சொல்ல முடியாது. ஒவ்வொருவரும் அவரவர் பாணியில் க்ளாஸ்.
நான் வடிவேலு சாருடன் நடித்த எல்லா படங்களுமே மாஸ் ஹிட் காமெடி வகையறா தான். அதிலும் ஒரு படத்தில் அவர் மனைவியாக அவரை அடித்து நொறுக்கும் காட்சிகள் இருக்கும். அப்படி ஒரு காட்சி படமாக்கும் போது அவர் வயிற்றில் நிஜமாகவே அடி விழுந்துவிட்டது. அதற்கு அப்புறம் எப்ப பார்த்தாலும் வயிற்றை தொட்டு காட்டி கிண்டல் செய்வார். ஆனால் நிறைய அடிதடி காட்சிகளில் அப்படி ஆக்ஷன் செய்யும்போது காயங்களே ஏற்படாது. ஆனால் பார்ப்பவர்களுக்கு உண்மையிலேயே அடி விழுவது போல் இருக்கும். அதற்கு காரணம் இன்வால்வ்மென்ட். அந்த இன்வால்மென்ட் தான் என் ஸ்பெஷாலிட்டி என நான் கருதுகிறேன்.
நான் ஓவர் ஆக்ட் செய்வதாக சிலர் விமர்சனங்களை முன்வைக்கலாம். ஆனால் இயக்குநர் கேட்கும் போது என்ன செய்ய முடியும். அதற்கு சில உதாரணங்களை சொல்கிறேன். காஞ்சனா படத்தில் என் நடிப்பை ஓவர் ஆக்ட் என்று சொன்னவர்களும் உண்டு. ஆனால் கதைக்கு அது தான் வேண்டும் என்று ராகவா லாரன்ஸ் கூறுவார். நான் என்ன செய்ய முடியும்? அவர் பயந்து பயந்து என் இடுப்பில் ஏறி உட்காருவார். இது கதையோடு சேர்த்து பார்க்கும் போது எப்படி ஓவர் ஆக்ட் ஆகும். அப்புறம் கோவை சரளா எந்த மாஸும் செய்யாவிட்டால் நீங்களும் ஐய்ய.. இதை யார் வேண்டுமானாலும் நடித்திருப்பார்கள் என்று சொல்லிவிட மாட்டீர்களா. அதனால்தான் இயக்குநர் சொல்லுக்கு இணங்க அது மாதிரியான காட்சிகள் தேவைப்படுகின்றன.
நான் விவேக்குடன் ஒரு படத்தில் பிச்சைக்காரியாக நடித்திருப்பேன். அந்தப் படத்தை இயக்குநர் ரவி இயக்கியிருந்தார். அதில் சினேகிதனே பாடலை அவர் ஒரு மாடுலேஷனில் பாடச் சொன்னார். ஆனால் நான் ஒரு மாடுலேஷனை சொல்லி அப்படித்தான் பாடுவேன் என்றேன். அதற்காக பெரிய வாக்குவாதமே நடந்தது. ஒரு மணி நேரத்துக்கும் மேல் படப்பிடிப்பு நின்று போனது. இந்நிலையில் நான் சொன்னபடியே சீன் காட்சியாக்கப்பட்டது. அப்புறம் ஒரிஜினல் வெர்ஷனை மறந்துவிட்டு இதைத்தான் எல்லோரும் பாட ஆரம்பித்தனர். அது மாதிரியாக நல்ல பாடல்களை ரயிலில் சிலர் கொடூரமாக பாடக் கேட்டிருப்போம். அந்த இன்ஃப்ளுவன்ஸில் தான் நான் பாடி நடித்தேன்.
நான் எந்த படமாக இருந்தாலும் முழு ஈடுபாடோடு தான் நடிப்பேன். அப்படி காஞ்சனாவில் நடிக்கும் போதெல்லாம் ரத்தக் கட்டு, சிராய்ப்புகள் ஏற்படும். 10 நாட்கள் ரெஸ்ட் எடுப்பேன். அப்புறம் இயல்புக்கு வந்துவிடுவேன். காமெடி நடிகர்களும் கடுமையாக உழைத்துதான் சிரிக்க வைக்கிறார்கள் என்பதை ரசிகர்கள் தெரிந்துகொள்ள வேண்டும்” என்றார்