ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஒவ்வொரு திரையுலகிற்குமே கொண்டாட்ட வாரமாகவே இருக்கும். புதுப்படங்களின் வௌியீட்டால் திரையரங்குகள் நிறைந்திருக்கும். தற்போது பான் இந்தியா திரைப்பட கலாச்சாரம் என்பதால் எந்த மொழியில் பிரம்மாண்ட திரைப்படங்கள் வெளியானாலும் அந்த படங்கள் மற்ற மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியாகிறது.
இந்த நிலையில், இன்று தமிழ் திரையுலகில் வெளியாகியுள்ள படங்களை கீழே காணலாம்.
- கண்ணை நம்பாதே:
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் நீண்டநாட்களாக வெளியாகாமல் இருந்த கண்ணை நம்பாதே திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தை இயக்கிய மு.மாறன் இயக்கத்தில் வெளியாகியுள்ள இந்த படத்திற்கு சித்துகுமார் இசையமைத்துள்ளார். த்ரில்லர் படமான இந்த படத்திற்கு காலை முதல் ரசிகர்கள் கூட்டம் குவிந்து வருகின்றனர்.
- கப்ஸா
கன்னட திரையுலகின் மிகப்பெரிய நடிகரான உபேந்திரா நடிப்பில் உருவாகியுள்ள கப்ஸா திரைப்படம் கன்னடம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மொழிகளில் வெளியாகியுள்ளது. பிரம்மாண்ட பட்ஜெட்டில் கே.ஜி.எஃப். சாயலில் உருவாகியுள்ள இந்த படத்தில் சிவராஜ்குமார், சுதீப் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
- கோஸ்டி
கோலிவுட்டின் முன்னணி நாயகிகளில் ஒருவரான காஜல் அகர்வால் நடிப்பில் உருவாகியுள்ள படம் கோஸ்டி. கத சொல்ல போறோம் என்ற படம் மூலமாக தமிழில் இயக்குனராக அறிமுகமான கல்யாண் இந்த படத்தை இயக்கியுள்ளார். இவர் இயக்கிய குலேபகாவலி, ஜாக்பாட் ஆகிய வெற்றிப்படங்களை இயக்கியுள்ளார். இன்று வெளியாகியுள்ள கோஸ்டி படத்தில் காஜல் அகர்வால், ஊர்வசி, சத்யன் ஆகியோர் நடித்துள்ளனர். சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.
- டி3
பிரஜீன் நடிப்பில் உருவாகியுள்ள டி3 படம் இன்று வெளியாகியுள்ளது. இயக்குனர் பாலாஜி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஸ்ரீஜித் இசையமைத்துள்ளார். ஆக்ஷன் திரில்லர் படமாக இந்த படம் உருவாகியுள்ளது.
- குடிமகன்:
குடிக்காமலே போதையாகும் வியாதி உடைய ஒருவன் சந்திக்கும் பிரச்சினைகளை நகைச்சுவையாக கூறியுள்ள குடிமகன் படமும் இன்று வெளியாகியுள்ளது. அறிமுக இயக்குனர் பிரகாஷ் இயக்கியுள்ள இந்த படத்தில் சுரேஷ்தாத்தா, சாந்தினி ஆகியோர் நடித்துள்ளனர். தனுஜ்மேனன் இசையமைத்துள்ளார்.
- ராஜாமகள்:
தமிழ் திரையுலகின் நகைச்சுவை நடிகராகவும், குணச்சித்திர கதாபாத்திரமாகவும் நடித்து வருபவர் நடிகர் முருகதாஸ். இவர் கதையின் நாயகனாக தந்தை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ராஜாமகள். பக்ஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஹென்றி இயக்கியுள்ள இந்த படம் தந்தை – மகள் கதாபாத்திரத்தை மையமாக கொண்டு உருவாகியுள்ள இந்த படமும் இன்று வெளியாகியுள்ளது.
- ஷசாம் ப்யூரி ஆஃப் தி காட்ஸ்:
ஹாலிவுட் உலகில் மார்வெல் திரையுலகிற்கு போட்டியான நிறுவனம் டிசி திரையுலகம். டிசி திரையுலகு தயாரிப்பில் 2019ம் ஆண்டு வெளியான ஷசாம் திரைப்படத்தின் தொடர்ச்சியான ஷசாம் திரைப்படத்தின் அடுத்த பாகம் இன்று வெளியாகியுள்ளது. உலக நாடுகள் முழுவதும் இன்று வெளியாகியுள்ளது. இந்த படம் தமிழிலும் டப் செய்யப்பட்டு தமிழ்நாட்டில் பல திரையரங்குகளில் வெளியாக உள்ளது.