அட்லீ இயக்கத்தில் உருவாகியிருக்கும் ஜவான் படத்தின் டிரைலர் பலத்த வரவேற்பைப் பெற்று வருகிறது. ஷாருக்கான் , நயன்தாரா , விஜய் சேதுபதி , தீபிகா படுகோன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இவர்கள் மட்டுமில்லாமல் இன்னும் சில தமிழ் நடிகர்கள் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்கள். இவ்வளவு பெரிய தமிழ் நடிகர்கள் பட்டாளத்தைக் கொண்டு ஒரு பாலிவுட் படம் வருவது இதுவே முதல் முறையாக இருக்கலாம். ஜவான் திரைப்படத்தில்  நடித்திருக்கு கோலிவுட் நடிகர்களைப் பார்க்கலாம்.


 நயன்தாரா






கோலிவுட்டின் லேடி சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா ஜவான் படத்தின் மூலம் தனது பாலிவுட் எண்ட்ரியை பதிவு செய்ய இருக்கிறார். படத்தில் அவருக்கு நிச்சயம் மிகப்பெரிய ரோல் இருக்கும் என்பது டிரைலரை வைத்து தெரிந்துகொள்ள முடிகிறது. அவருக்கு ஏற்கனவே பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.


விஜய் சேதுபதி






ஏற்கனவே ஃபார்ஸி என்கிற இணையத் தொடர் மூலம் இந்தி ரசிகர்களிடம் பாராட்டுக்களை பெற்றுவிட்டவர் நடிகர் விஜய் சேதுபதி.  ஜவான் படத்தில்  விஜய் சேதுபதி படத்தில் வில்லனாக நடித்திருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. ஏற்கனவே மாஸ்டர் மற்றும் விக்ரம் திரைப்படங்களில் வில்லனாக மிரட்டிய ரசிகர்களை அசத்திய விஜய் சேதுபதி  நிச்சயம் இந்தப் படத்தில் அட்டகாசமான வில்லனாக இருக்க வாய்ப்பிருக்கிறது.


பிரியாமனி


சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் ஷாருக்கானுடன் இணைந்து குத்தாட்டம் போட்ட பிரியாமனி தற்போது ஜவான் படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் அவரது கதாபாத்திரம் குறித்து பெரியளவிலான தகவல்கள் வெளியாகவில்லை என்றாலும் அதே மாதிரியான ஒரு குத்தாட்டத்தோடு நிறுத்தாமல அவருக்கு சில நல்ல காட்சிகள் இருக்கும் என்று எதிர்பார்க்கலாமா?


யோகிபாபு




ஒரு மொழியின் நடிகர் இன்னொரு மொழியில் நடிப்பது நமக்கு புதிதல்ல. ஆனால் ஒரு தமிழ் காமெடியன் இந்திப் படத்திலும் காமெடியனாக நடிப்பது கொஞ்சம் புதிதானது தான். இதற்கு முன்பாக தெலுங்கு நடிகர் பிரம்மாநந்தா தமிழ் படங்களில் நடித்திருக்கிறார். தற்போது யோகி பாபு ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டில் தனது காமெடியால் ரசிகர்களை சிரிக்க வைப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.


ரியாஸ் கான்


கஜினி, வின்னர், பத்ரி ஆகிய படங்களில் நடித்த ரியாஸ் கான் இந்தப் படத்தில் இடம்பெற்றிருக்கிறார்.


விஜய் ?


ஜவான் படத்தின் மிகப்பெரிய சஸ்பென்ஸாக இருந்து வருவது நடிகர் விஜய் இந்தப் படத்தில் இருக்கிறாரா இல்லையா என்பது. டிரைலரைப் பார்த்த ரசிகர்கள் கூட்டத்தில் ஏதோ ஒரு மூலையில் நிற்பவரை பிடித்துவந்து விஜய் என்று சோல்லி வருகிறார்கள். ஒரு வேளை விஜய் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார் என்றால் அது விஜய் ரசிகர்களுக்கு மிகப்பெரிய சர்பிரைஸ் தான்.