சென்னை அயனாவரத்தில் பணிக்கு கிளம்பிய காவலர், திடீரென வீட்டிற்குள் சென்று தூக்கிட்டு தற்கொலை  செய்துகொண்டுள்ளார். அருண் குமார் என்ற காவலர் சீருடையில் தூக்கிட்டு தற்கொலை செய்தது கொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலைக்கு காரணம் பணிச்சுமையா அல்லது குடும்ப பிரச்னையா என விசாரணை நடைபெற்று வருகிறது. 


ஏற்கனவே கோவை சரக டிஐஜி விஜயகுமார் தற்கொலை செய்துக் கொண்ட நிலையில், தற்போது மற்றொரு காவலர் தற்கொலை செய்துகொண்டுள்ளது காவல்துறையினர் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


காதலித்து திருமணம் செய்து கொண்ட நான்கு 4 மாதத்தில் விபரீத முடிவு: சிக்கிய உருக்கமான கடிதம் 


விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த 27 வயதான அருண்குமார், சென்னை அயனாவரம் வசந்தம் கார்டன் தங்கி குதிரைப்படை பிரிவில் காவலராக பணியாற்றி வந்தார். கடந்த 2022 ஆண்டு பணியில் சேர்ந்த  அருண்குமார் சென்னை அயனாவரம் வசந்தம் காலனியில் தங்கி தற்பொழுது சென்னை ஆயுதப்படையில் உள்ள குதிரைப்படையில் காவலராக பணியாற்றி வந்தார் இந்நிலையில் இவரது அறையில் உடன் தங்கியிருந்த புஷ்பராஜ் வெளியே சென்று விட்டு 11.30 மணிக்கு வீட்டிற்கு வந்து பார்த்த போது அருண்குமார் வீட்டில் தூக்கில் தொங்கியபடி இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்து உடனே அயனாவரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.  பின்னர் சம்பவயிடத்திற்கு வந்த போலீஸார் காவலர் அருண்குமார் உடலை மீட்டு கேஎம்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இச்சம்பவம் குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.. முதற்கட்ட விசாரணையில் அருண்குமார் திருநெல்வேலி ஆயுதப்படையில் காவலராக பணியாற்றி வரும் பிரியா என்ற காதலித்து வந்ததும் , கடந்த மார்ச் மாதம் இருவரும் திருமணம் செய்து கொண்டதும் தெரியவந்தது. திருமணத்திற்கு பின்னர்  பிரியா தனது கணவரிடம் அவரது பெற்றோரை பார்க்க கூடாது, கவனிக்க கூடாது என கூறி சண்டையிட்டதாக கூறப்படுகிறது...


இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததும் இதேபோல் நேற்று இருவருக்கும் இடையே போனில் தகராறு ஏற்பட்டதால் மன உளைச்சல் அடைந்த காவலர் அருண்குமார் இன்று காலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.


தமிழகம் இத்தனையாவது இடமா தற்கொலையில்..? 


இந்தியாவில் அதிக தற்கொலைகள் நடக்கும் மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. தமிழ்நாடு மற்றும் மத்தியப் பிரதேசத்திற்கு அதற்கு அடுத்த 2 இடங்களில் உள்ளது.


கடந்த 2021 ஆம் ஆண்டில் மட்டும் நாடு முழுவதும் 1,64,033 தற்கொலை வழக்குகள் பதிவாகியுள்ளதாக தேசிய குற்றப் பதிவுப் பணியகம் (NCRB) அறிக்கை வெளியிட்டுள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 7.2% அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. நாடுமுழுவதும் கடந்த 2020 ஆம் ஆண்டில் மொத்தம் 1,53,052 தற்கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 


தற்கொலைக்கான காரணங்கள் : 


தொழில் சார்ந்த பிரச்சனைகள், வன்கொடுமை, மனநல பிரச்சனைகள், குடும்ப பிரச்சனைகள், தனிமை உணர்வு, வன்முறை, போதை மருந்து , தீராத வலி, நிதி நெருக்கடி போன்றவைகள் இந்தியாவில் தற்கொலைகள் எண்ணிக்கைக்கு முக்கிய காரணங்களாக இருப்பதாக இந்த அறிக்கை தெரிவித்துள்ளது. 


மாநிலம் வாரியாக தற்கொலை விவரம் : 


மகாராஷ்டிரா - 22,207 (13.5 சதவீதம்)
தமிழ்நாட்டு - 18,925 (11.5 சதவீதம்)
மத்தியப் பிரதேசம் - 14,965 (9.1 சதவீதம்)
மேற்கு வங்கம் - 13,500 (8.2 சதவீதம்)
கர்நாடகா - 13,056 (8 சதவீதம்)


அதிக தற்கொலைகள் நடக்கும் மாநிலங்களின் பட்டியலில் மேற்கண்ட 5 மாநிலங்கள் டாப் 5 இடங்களை பிடித்துள்ளது.


எந்த ஒரு பிரச்னைக்கு தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும்.


மாநில உதவிமையம் : 104


சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050