நடிகர் ஷாரூக்கான் நடித்துள்ள ஜவான் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ள நிலையில், அதனை கலாய்த்து ரசிகர்கள் பலரும் இணையத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர். 


இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக இருந்தவர் அட்லீ. இவர் 2013 ஆம் ஆண்டு ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா நடித்த ‘ராஜா ராணி’ படத்தின் மூலம் இயக்குநரானார் அட்லீ. தொடர்ந்து நடிகர் விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் என அடுத்தடுத்து 3 படங்களை இயக்கி கோலிவுட்டின் முன்னணி இயக்குநராக உயர்ந்தார். இதனால் அவருக்கு பாலிவுட்டில் இருந்து அழைப்பு வர, முதல் படமே பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாரூக்கானை வைத்து படம் இயக்கி முடித்துள்ளார். 


ஜவான் என பெயரிடப்பட்டுள்ள அந்த படத்தில் நயன்தாரா,  விஜய் சேதுபதி, தீபிகா படுகோனே உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி கடும் விமர்சனங்களை சந்தித்தது. அதன் மேக்கிங் விஜய் நடித்த மெர்சல் படத்தைப் போல இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்திருந்தனர். தமிழ் சினிமா ரசிகர்களும் ஜவான் படத்தை எதிர்நோக்கி ஆவலுடன் காத்திருக்கின்றனர்.  இந்த படம் செப்டம்பர் 7 ஆம் தேதி உலகளவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


 இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகும் ஜவான் படத்தில் நடிகர் விஜய் கேமியோ ரோலில் நடித்துள்ளதாக தகவல் ஒன்று சுற்றிக் கொண்டிருக்கிறது. பொதுவாக சினிமாவில் படங்கள் ஏதாவது முந்தைய ஒரு படத்தின் இன்ஸ்பிரேஷனில் எடுக்கப்படுவது வழக்கம். அதை எல்லா இயக்குநர்களுமே செய்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால் அட்லீ செய்தால் மட்டும் காப்பி என விமர்சனம் முன் வைக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது. அந்த வகையில் ஜவான் படத்தின் கதை தமிழில் விஜயகாந்த் நடித்து வெளியான பேரரசு படத்தின் கதை என தகவல் வெளியாகி சர்ச்சை எழுந்தது. 


இப்படியான நிலையில் ஜவான் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. முழுக்க முழுக்க ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்த இப்படத்தில் நடிகை தீபிகா படுகோனே சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இந்த ட்ரெய்லருக்கு ஒரு பக்கம் வரவேற்பு எழுந்துள்ள நிலையில், மறுபுறம் வழக்கம்போல காப்பி என சில விமர்சனமும் எழுந்துள்ளது. இந்நிலையில் அட்லீ இதுவரை 4 தமிழ் படங்கள் இயக்கியுள்ளார். 


இதில் ராஜா ராணியில் நஸ்ரியா, தெறி படத்தில் சமந்தா, மெர்சல் படத்தில் நித்யா மேனன் மற்றும் அப்பா விஜய், பிகில் படத்தில் அப்பா விஜய் கேரக்டர் போன்று ஏதேனும் ஒரு கதாபாத்திரம் கொல்லப்படுவது வழக்கம். அந்த வகையில் ட்ரெய்லரில் தீபிகா கேரக்டர் சிறப்பு தோற்றம் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால் அவர் கதாபாத்திரம் கொல்லப்படுவது உறுதியா என ரசிகர்கள் அட்லீயை கலாய்த்து வருகின்றனர்.