தனுஷ் நடிப்பில் வேல்ராஜ் இயக்கத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் வேலையில்லா பட்டதாரி. அமலா பால், சமுத்திரக்கனி, சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்டோர் நடித்த வேலையில்லா பட்டதாரி படம் கடந்த ஜூலை 18-ஆம் தேதி வெளியானது.  இந்நிலையில் வேலையில்லா பட்டதாரி படம் ரிலீஸாகி இன்றுடன் 7 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இது குறித்த முன்னெடுப்பு தற்போது ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. #7YearsOfBlockBusterVIP என்கிற ஹேஷ்டேக் ட்விட்டரில் தேசிய அளவில் டிரெண்டாகியுள்ளது.






இது ஒருபுறம் இருக்க நடிகர் தனுஷ் ட்விட்டரில் கோலிவுட்டில் வேறு எந்த ஒரு நடிகரும் படைக்காத புதிய சாதனையை படைத்துள்ளார். அதாவது ட்விட்டரில் தனுஷை பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை 10 மில்லியனாக (1 கோடி ) அதிகரித்துள்ளது. வேறு எந்த ஒரு முன்னணி நடிகருக்கும் இவ்வளவு ஃபாலோவர்ஸ் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.  மேலும் ட்விட்டரில் தொடர்ந்து ஆக்டிவாக இருக்கும் உலக நாயகன் கமல்ஹாசன்  போன்ற முன்னணி நடிகருக்கும் கூட இவ்வளவு ஃபாலோவர்ஸ் இல்லை. இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள தனுஷின் தயாரிப்பு நிறுவனமான உண்டர்பார் ஃபிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் “எங்க பாஸ் , கோலிவுட்டில் எந்த நடிகரும் படைக்காத சாதனையை படைத்துள்ளார். 10 மில்லியன் ஃபாலோவர்ஸை பெற்றுள்ளார் “ என வாழ்த்து தெரிவித்து தனுஷ் புகைப்படத்துடன் கூடிய பதிவு ஒன்றினை பகிர்ந்துள்ளனர். தற்போது #10MillionFollowersForDhanush என்ற முன்னெடுப்பும் வைரலாகி வருகிறது.






கோலிவுட் மட்டுமல்லாமல் பாலிவுட், ஹாலிவுட் என தனது திறமையை அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றவர் நடிகர் தனுஷ். ஆரம்ப காலக்கட்டத்தில் நடிப்பு திறமையே இல்லை என விமர்சிக்கப்பட்டவர் நடிகர் தனுஷ். ஆனால் தனது திறமையின் மூலம் அசுர நடிப்பை வெளிப்படுத்தி பல உச்சங்களை சென்றவர்.  நல்ல கதைகளையும், கதாபாத்திரங்களை தேர்வு செய்து இன்று கோடிக்கணக்கான ரசிகர்களை தன் வசப்படுத்தியிருக்கிறார் நடிகர் தனுஷ்.  இவரின் கதைத்தேர்வு மற்றும் நடிப்பின் அடிப்படையிலேயே  இவர்  நடிப்பில் வெளியாக இருக்கும் படங்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பும் மவுசும் உள்ளது. இவரின் நடிப்பு திறமையை உணர்ந்த இந்திய அரசு, சமீபத்தில் ’தேசிய விருது (அசுரன் திரைப்படத்திற்காக) வழங்கி கௌரவப்படுத்தியது. அதேபோல ‘கர்ணன்’ படத்திலும் இயல்பான, எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிப்பார் தனுஷ். இந்த படத்தின் மூலம் சிறந்த நடிகருக்கான மற்றொரு தேசிய விருதையும் நடிகர் தனுஷ் பெற வாய்ப்பிருப்பதாக திரைப்பட விமர்சகர்கள் கருதுகின்றனர்.  நடிப்பு என்று ஒரே ஃபோக்கஸில் இருந்து விடாமல் இயக்குநர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என பன்முக திறமைகளை கையில் வைத்துள்ளார். முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தும் ஆக்டரான தனுஷ் மேலும் பல உச்சங்களை தொட வாழ்த்துக்கள்!.