”எனக்கு ஒரே ஒரு மனைவி..அதுவும் எப்போதும் என்மேல் எரிந்து விழும். எந்த படத்திலும் எனக்கு பெரிதாக ரொமான்ஸ் இல்லாமல் செய்கிறார்கள்” என ‘கொலை’ படத்தின் செய்தியாளர் சந்திப்பில் விஜய் ஆண்டனி கலகலப்பாக பேசி அனைவரையும் சிரிக்க வைத்தார். 


அண்மையில் பிச்சைக்காரன் -2 வெளியாகி வெற்றிப்பெற்ற நிலையில் கொலையை கதையாக கொண்ட ’கொலை’ படத்தில் விஜய் ஆண்டனி நடித்து வந்தார். படப்பிடிப்பு வேலைகள் முடிந்த நிலையில், புரோமோஷன் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. பாலாஜி குமார் இயக்கும் இந்த படம் வரும் 21ம் தேதி திரைக்கு வருகிறது. 2 ஹீரோயின்களை கொண்ட கொலை படத்தில் ரித்திகா சிங் மற்றும் மீனாட்சி சௌத்ரி நடித்துள்ளனர். இவர்களை தவிர மேலும் மீனாட்சி சௌத்ரி, ராதிகா சரத்குமார், முரளி சர்மா, அர்ஜுன் சிதம்பரம் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.


இந்த நிலையில் படத்தின் புரோமோஷனுக்காக படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர். பத்திரிகையாளர்கள் கேள்விக்கு முன்னதாக பேசிய விஜய் ஆண்டணி, “முதலில் கொலை படத்தின் கதை சொல்லும்போது மூன்று கதாநாயகிகள் இருப்பதாக சொன்னார்கள். பிறகு இண்டு ஹீரோயின்கள் என்றனர். அதிலும் புதிதாக அறிமுகமான மீனாட்சி இன்னொருவருக்கு ஜோடி. கடைசியில எனக்கு ஒரே ஒரு மனைவி என்று சொன்னார்கள். அந்த கேரக்டரும் என்னிடம் எப்போதும் எரிந்து விழும். இப்படி ஒவ்வொரு படத்திலும் எனக்கு பெரிதாக ரொமான்ஸ் கிடைக்காமல் செய்கிறார்கள். எனக்கு நீதி வேண்டும்” என்றார்.  


இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் ஆர்யா, “நானும் விஜய் ஆண்டனியும் எங்களது ஆரம்ப காலக்கட்டத்தில் சினிமாவில் வளர்வதற்கு ஒருவருக்கு ஒருவர் மாற்றி மாற்றி உதவி செய்துக் கொண்டோம். விஜய் ஆண்டனி தனது ஒவ்வொரு படத்திலும் எதாவது ஒன்றை புதிதாக முயற்சி செய்து பார்க்க வேண்டும் என்று நினைப்பார். அந்த வகையில், கொலை படமும் நிச்சயமும் வித்தியாசமாக தான் இருக்கும்” என்றார். 


முன்னதாக பேசிய படத்தின் இயக்குனர் பாலாஜி குமார், ”விஜய் ஆண்டனி இயல்பாகவே குறும்புத்தனம் கொண்டவர். அதை நடிப்பிலும் கொண்டு வர வேண்டும், அதேநேரம் ஒரு சீரியசான கேரக்டராகவும், வயதானவராகவும் விஜய் ஆண்டனி இருக்க வேண்டும். இதை படத்தில் அவர் சிறப்பாக செய்திருக்கிரார். விஜய் ஆண்டனி இல்லை என்றால் இந்த படம் கிடையாது. கதைக்குள் கதை என இருக்கும் கொலை படத்துக்கு ஆதரவு தாருங்கள்” என கேட்டு கொண்டார்.