கர்நாடக மாநிலம் பெங்களூருவில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் நேற்று தொடங்கி இன்று நிறைவடைந்துள்ளது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடந்த இந்த கூட்டத்தில் வரவிருக்கும் மக்களவை தேர்தலில் பாஜகவை வீழ்த்த வகுக்க வேண்டிய வியூகங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
கூட்டணிக்கு இந்தியா என பெயர் வைக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த கூட்டம் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு விவகாரங்கள் குறித்து முடிவுகளை எடுக்க குழுக்கள் அமைக்கப்படும் என்றும் பிரச்சாரத்தை நிர்வகிக்க டெல்லியில் செயலகம் ஒன்று அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
"தாக்குதலுக்கு உள்ளாகி வரும் இந்திய கருத்தாக்கம்"
கூட்டம் நிறைவுபெற்றதை தொடர்ந்து, பல்வேறு தலைவர்கள் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசினர். அப்போது பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, "இந்தக் கூட்டத்தில் நான் கலந்து கொள்வது பெருமையாக இருக்கிறது. இந்தியா என்ற கருத்தாக்கம் தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது. கோடிக்கணக்கான இந்தியர்களின் குரல் பறிக்கப்படுகிறது.
இது இந்தியாவின் குரலை மீட்டெடுப்பதற்கான போராட்டம். அதனால்தான், இந்த பெயரைத் தேர்ந்தெடுத்துள்ளோம் - இந்திய தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணி (இந்தியா). தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் இந்தியாவுக்கும், நரேந்திர மோடிக்கும் இந்தியாவுக்கும், அவர்களின் சித்தாந்தத்துக்கும் இந்தியாவுக்கும் இடையேயான போர்தான் இது.
இந்திய அரசியலமைப்பையும், நமது மக்களின் குரலையும், இந்த மகத்தான நாட்டின் கருத்தாக்கத்தையும், இந்தியா என்ற எண்ணத்தையும் பாதுகாக்கிறோம். இந்தியா என்ற கருத்தாக்கத்தை எதிர்த்து போரிட்டால் யார் வெற்றி பெறுவார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்" என்றார்.
கூட்டத்தை அதிர வைத்த அரவிந்த் கெஜ்ரிவால்:
தொடர்ந்து பேசிய டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், "கடந்த 9 ஆண்டுகளில் பிரதமர் மோடி பல விஷயங்களை செய்து அனைத்து துறைகளையும் அழித்து விட்டார். இங்கு ஒன்று கூடியிருப்பது நமக்காக அல்ல, வெறுப்புவாதத்தில் இருந்து இந்த தேசத்தை காக்க தான். புதிய இந்தியாவை உருவாக்கும் கனவு கொண்டு இங்கு ஒன்றிணைந்து உள்ளோம். புதிய இந்தியாவில் அனைத்து குழந்தைகளுக்கு கல்வி, அன்பும், அமைதியும் நிறைந்து இருக்கும். இன்று நடைபெற்ற கூட்டத்தில் பல்வேறு விஷயங்களை குறித்து பேசினோம்" என்றார்.
முன்னதாக பேசிய காங்கிரஸ் தலைவர் கார்கே, "நாட்டு மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தைக் காப்பாற்றுவதற்கான மிக முக்கியமான சந்திப்பு இது. நாங்கள் ஒன்று கூடி பல்வேறு விஷயங்களை விவாதித்தோம். இன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை தலைவர்கள் ஆதரித்துள்ளனர்.
பிரச்னைகள் குறித்து பல்வேறு குழுக்கள் அமைக்கப்படும். கூட்டறிக்கைக்கு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. எங்களுக்கிடையில் சில வேறுபாடுகள் உள்ளன. ஆனால் நாங்கள் அதை பின்னுக்கு தள்ளி நாட்டின் நலனுக்காக நாங்கள் ஒன்றாக இருக்கிறோம். 2024 மக்களவைத் தேர்தலில் ஒற்றுமையாகப் போராடி வெற்றி பெறுவோம்" என்றார்.