பிரபல பின்னணி இசை பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத்துக்கு இன்று முதலாம் ஆண்டு நினைவு நாளாகும். அவரது நினைவுகளை ரசிகர்கள் சமூக வலைத்தளங்கள் வாயிலாக தெரிவித்து வருகின்றனர். 


வசீகர குரலின் மன்னன்


1968 ஆம் ஆண்டு டெல்லியில் வசித்து வந்த மலையாள குடும்பத்தில் பிறந்த கிருஷ்ணகுமார் குன்னத் திரையுலகில் அனைவராலும் கே.கே. என அன்போடு அழைக்கப்பட்டார். 1996 ஆம் ஆண்டு முதலே திரையில் பல பாடல்களை அவர் பாடியுள்ளார்.  1999 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்காக பாடல் ஒன்றை பாடியிருந்தார். மேலும் தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் சுமார் 3500க்கும் மேற்பட்ட பாடல்களை கே.கே. பாடியுள்ளார்.


கே.கே பாடிய தமிழ் பாடல்கள்  


தமிழில் 1997 ஆம் ஆண்டு வெளியான மின்சார கனவு படத்தில் இடம் பெற்ற ஸ்ட்ராபெர்ரி கண்ணே பாடல் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்களை பெற்றுக் கொடுத்தது. தனித்துவமான குரலால் தமிழில் ஏகப்பட்ட பாடல்களை பாடி நீங்கா இடம் பிடித்துள்ளார். அப்படி போடு, காதல் வளர்த்தேன், கல்யாணம் தான் கட்டிக்கிட்டு, உயிரின் உயிரே, காதல் ஒரு தனி கட்சி, குண்டு குண்டு பெண்ணே, காதலிக்கும் ஆசை இல்லை,நினைத்து நினைத்து, அண்டங்காகா கொண்டைக்காரி, அண்ணனோட பாடு, பனித்துளி பனித்துளி, லேலக்கு லேலக்கு லேலா, ஒல்லிகுச்சி உடம்புகாரி, நீயே நீயே, வச்சுக்க வச்சுக்கவா, நிஜமா நிஜமா என பல ஹிட் பாடல்களை கே.கே.பாடியுள்ளார். தன் 25 ஆண்டுகள் சினிமா பயணத்தில் மலையாளத்தில் ஒரே ஒரு பாடல் மட்டும் தான் கே.கே. பாடியுள்ளார். 


இதனிடையே கடந்தாண்டு கொல்கத்தாவில் நடைபெற்ற கல்லூரி கலாச்சார விழாவில் பங்கேற்ற கே.கே.வுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. உடனடியாக தான் தங்கியிருந்த அறைக்கு திரும்பிய அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்ததால் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மாரடைப்பு காரணமாக கே.கே. மறைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 


கே.கே.வின் மறைவு செய்தி இன்றளவும் பலராலும் நம்ப முடியாத ஒன்றாகவே உள்ளது. 53 வயதில் அவர் இந்த உலகத்தை விட்டு பிரிந்தாலும், அவரின் கான குரலால் நூற்றாண்டுக்கும் ரசிகர்கள் மனதில் வாழ்ந்து வருகிறார் கே.கே.


மேலும் படிக்க: Regina Teaser: லிப் கிஸ், கையில் சிகரெட்... எதிர்பார்ப்புகளை எகிறவைக்கும் சுனைனாவின் ‘ரெஜினா’ பட டீசர்..!