ரூ.500 நோட்டுகளின் புழக்கம் அதிகரித்துள்ளது. அதேபோல் ரூ.20க்கும் மவுசு அதிகரித்துள்ளது. 2023 நிதியாண்டில்  புழக்கத்தில் உள்ள கரன்சிக்களின் அளவு ரூ.13,621 கோடி என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதில் ரூ.500 நோட்டுகள் புழக்கத்தில் அதிகமாக உள்ளது. இதன் மதிப்பு ரூ.5163 கோடி. இதற்கு அடுத்த படியாக ரூ.10 அதிகமாக புழக்கத்தில் உள்ளது. அதன் மதிப்பு ரூ.2,621 கோடி. ரூ.100 மூன்றாவது அதிகமாக புழங்கப்பட்டும் நோட்டாக உள்ளது. அதன் மதிப்பு ரூ.1805 கோடியாகும்.


மதிப்பின் வாயிலாகப் பார்த்தால் ரூ.500 தான் அதிகளவில் புழக்கத்தில் உள்ளது. இதன் மதிப்பு 77 சதவீதம். மொத்தம் புழக்கத்தில் உள்ள ரூ.33.48 லட்சம் கோடியில் 77 சதவீதம். 


ரிசர்வ் வங்கி அறிக்கையின்படி மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடைந்த காலத்தில் ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுகள் சேர்ந்து புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுகளில் 87.9% ஆகும்.


2022 மற்றும் 2023 நிதியாண்டுக்கு இடையே ரூ.500, ரூ.200 மற்றும் ரூ.20 நோட்டுகள் புழக்கம் அதிகரித்துள்ளது. ரூ.20 நோட்டுகளின் புழக்கம் 2022ஆம் ஆண்டில் 1,101 கோடியாக இருந்தது. இது 2023 ஆம் ஆண்டில் 1,258 கோடியாக அதிகரித்துள்ளது. ரூ.200 நோட்டுகளின் புழக்கம் 4.6 சதவீதம் அதிகரித்துள்ளது. இப்போது அதன் புழக்கம் ரூ.626 கோடியாக உள்ளது.


ரூ.500 நோட்டுகளின் புழக்கம் மொத்த ரொக்கத்தில் 37.9 சதவீதமாகும். ரூ.10 நோட்டுகள் புழக்கம் 19.2 சதவீதமாக உள்ளது.


ரூ.2000 நோட்டுகள் புழக்கம் படிப்படியாக குறைந்துள்ளது. ரூ.2000 திரும்பப் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றை வைத்திருப்போர் வங்கிகளில் கொடுத்து திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.


இ ரூபாய் மொத்த புழக்க மதிப்பு ரூ.10.69 கோடியாகவும் சில்லறை புழக்க மதிப்பு ரூ.5.70 கோடியாகவும் உள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.