அடித்தட்டில் இருந்து தமிழ் சினிமாவுக்குள் நுழைந்து மிகவும் பிரபலமான நடிகராக இருந்து பின்னர்  காணாமல் போன நடிகர்களில் ஒருவர் விஜயன். 'கிழக்கே போகும் ரயில்' திரைப்படத்தின் மூலம் உதவி இயக்குநராகவும் நடிகராகவும் அறிமுகமானவர். 

 

இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் கண்டுபிடிப்புகளில் ஒருவரான விஜயன் முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனம் பெற்றார். அடுத்து அவர் நடித்த ‘கிழக்கே போகும் ரயில்’ படத்திலேயே கவனமீர்த்தார். தொடர்ந்து இயக்குநர் மகேந்திரனின் ‘உதிரிப் பூக்கள்’ திரைப்படத்தில்  ஒட்டுமொத்த வில்லத்தனத்தையும் கொட்டி இப்படி ஒரு வில்லனா என அனைவரும் அதிர்ச்சி அடையும் அளவுக்கு நடித்து 80 ரசிகர்களின் ஒட்டுமொத்த பாராட்டுகளையும் குவித்தார். லோ பட்ஜெட் படங்கள் மூலம் பெரிய லாபம் ஈட்ட வேண்டும் என்றால் தயாரிப்பாளர்களின் முதல் சாய்ஸ் விஜயனாக தான் இருப்பார்.

 




ஹீரோவாக, குணச்சித்திர நடிகராக, வில்லனாக கலக்கிய விஜயனின் ஒவ்வொரு அசைவிலும் மற்றவர்களிடம் இருந்து வேறுபட்டு காணப்பட்டார்.   அவரின் தனித்துவமான ஹேர்ஸ்டைல் அன்றைய இளைஞர்கள் மத்தியில் ட்ரெண்டிங்காக இருந்தது. ஒரு விடுகதை ஒரு தொடர்கதை, பாலைவன ரோஜாக்கள், பசி, நாயகன், நிறம் மாறாத பூக்கள், மண் வாசனை என அடுத்தடுத்து பல வெற்றிப்படங்களில் நடித்து வந்த விஜயன் திடீரென சினிமாவில் இருந்து காணாமல் போனார். மீண்டும் ரன் திரைப்படம் மூலம் விஜயன் ரீ என்ட்ரி கொடுக்க, 2 கே கிட்ஸ்கள் மத்தியில் 'ரமணா' வில்லன் மற்றும் '7g ரெயின்போ காலனி' படத்தில் கதிரின் தந்தையாக நடித்ததன் மூலம் அறியப்பட்டார்.




சிறந்த நடிகரான விஜயன், இயக்குனராக வேண்டும் என ஆசைப்பட்டு 'புதிய ஸ்வரங்கள்' என்ற படத்தை இயக்கினார். ஆனால் அந்தப் படத்தில் பிலிம் ரோல் தீ விபத்தில் கருகியதால் அத்துடன் சேர்ந்து விஜயன் கனவும் கருகி போனது. கடைசியில் அப்படம் வெளியாகாமலே போனது. அதனால் பெரும் மனஉளைச்சலுக்கு ஆளான விஜய் குடிப்பழக்கத்துக்கு அடிமையானார். அதனால் சினிமாவில் நடிக்கும் வாய்ப்புகளும் குறைத்தது.

 

ஒரு பிரேக்குக்கு பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்கத் தொடங்கிய விஜயனை நினைத்து சந்தோஷப்பட்ட ரசிகர்கள் மீண்டும் அவரை பல நல்ல கதாபாத்திரங்களில் பார்க்கலாம் என எதிர்பார்த்த நிலையில், அது அனைத்தையும் பொய்யாக்கும் விதமாக சம்பாதித்த மொத்த பணத்தையும் குடித்தே அழித்து தன்னுடைய கடைசி காலகட்டத்தில் வறுமையில் வாடி, விஜயன் மே 17ஆம் தேதி 2007ம் ஆண்டு மாரடைப்பு ஏற்பட்டு உயிர் இழந்தார். அவரின் 17ஆவது நினைவு தினம் இன்று.