உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழக குழுவினர் கோவாக்சின் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களிடம் ஆய்வு செய்தது. அதன் முடிவுகளில் சுவாச குழாய்களில் தொற்று ஏற்படுவதாக தெரிவித்துள்ளது.
இந்த செய்தியை சமீபமாக, வைரலாகி வருவதை பார்க்க முடிகிறது. இந்நிலையில் கோவாக்சின் தடுப்பூசி தொடர்பான ஆய்வுமுறை குறித்தும், பாரத் பயோடெக் தெரிவித்தது குறித்தும் தெரிந்து கொள்வோம்.
கொரோனா தடுப்பூசி:
கொரோனா தொற்று உலக முழுவதும் பரவி வந்த நிலையில், தொற்றை கட்டுப்படுத்துவதில் தடுப்பூசியானது பெரும் பங்கு வகித்ததாக பல மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றன. இந்தியாவில், பெரும்பாலானவர்கள் கோவிசீல்டு மற்றும் கோவாக்சின் செலுத்தியுள்ளனர். இந்நிலையில், சில வாரங்களுக்கு முன்பு கோவிசீல்டு தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மிக அரிய நிகழ்வுகளில்தான் ரத்தம் உறைதல் உள்ளிட்ட பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது என தயாரிப்பு நிறுவனமான அஸ்ட்ராஜெனிகா தெரிவித்தது.
பனாரஸ் இந்து பல்கலைக்கழக குழுவினர் ஆய்வு:
இந்நிலையில், தற்போது பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் ஒரு குழுவானது கோவாக்சின் தடுப்பூசியால் ஏற்படும் பக்க விளைவுகள் குறித்து தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாக ஆரம்பித்தன. பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் ஆய்வு எப்படி நடைபெற்றது? என்ன சொல்கிறது என்பதை பார்ப்போம்.
ஆய்வு நடைபெற்றது எப்படி?:
கோவாக்சின் கோவிட்-19 தடுப்பூசியின் நீண்டகால பாதுகாப்பு குறித்து இளம் பருவத்தினர் மற்றும் பெரியவர்களிடையே நடத்தப்பட்ட ஆய்வு குறித்தான தரவை வழங்குகிறோம் என பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆய்வானது ஜனவரி 2022 முதல் ஆகஸ்ட் 2023 வரை நடத்தப்பட்ட ஆய்வாகும். கோவாக்சின் ( BBV152 ) தடுப்பூசியைப் பெற்ற ஆர்வமுள்ள இளம் பருவத்தினர் மற்றும் பெரியவர்களிடம் தொலைபேசியில் நேர்காணல் செய்யப்பட்டனர். தடுப்பூசி செலுத்திய 1 வருடத்திற்கு பிறகு ஆய்வு செய்யப்பட்டனர் என்று ஆய்வு தெரிவிக்கிறது.
இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட 1024 நபர்களில், 635 இளம் பருவத்தினர் மற்றும் 291 பெரியவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிப்பு:
பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் குழு தெரிவித்துள்ள பக்க விளைவுகள்: ( 1024 நபர்களில் தொலைபேசி வாயிலாக எடுக்கப்பட்ட முடிவுகள் அடிப்படையில் )
- 304 (47.9%) இளம் பருவத்தினர் மற்றும் 124 (42.6%) பெரியவர்களுக்கு மேல் சுவாசக் குழாயில் தொற்றுகள் இருக்கிறது.
- நரம்பு மண்டலக் கோளாறுகள் (4.7%) இளம் பருவத்தினரிடம் பாதிப்பு இருக்கிறது.
- 5.5 சதவிகித பெரியவர்களிடம் நரம்பு மண்டல கோளாறுகள் இருக்கிறது
- ஆய்வில் பங்கேற்ற பெண்களில் 4.6 சதவிகித பேருக்கு மாதவிடாய் தொடர்பான பிரச்னைகள் இருக்கிறது.
- 2.7% மற்றும் 0.6% பேருக்கு கண் தொடர்பான பிரச்னைகளில் மற்றும் ஹைப்போ தைராய்டிசம் ஆகியவை காணப்பட்டன.
- தோராயமாக 10 பேரில் 0. 3 சதவிகித நபருக்கு பக்கவாதம் இருப்பதாக கண்டறியப்பட்டது.
- டைபாய்டு ஏற்படுவதற்கான வாய்ப்பு 3.2 மடங்கு அதிகமாக இருக்கிறது.
பாரத் பயோடக் தெரிவித்தது என்ன?
கோவிஷீல்டு தடுப்பூசி தொடர்பான சர்ச்சை எழுந்த நிலையில், மே 2 ஆம் தேதி கோவாக்சின் தடுப்பூசி நிறுவனமான பாரத் பயோடக் கூறியதாவது, "இந்திய அரசாங்கத்தின் கோவிட்-19 நோய்த்தடுப்புத் திட்டத்தில் இந்தியாவில் செயல்திறன் சோதனைகளை நடத்திய ஒரே கோவிட்-19 தடுப்பூசி Covaxin ஆகும். கோவாக்சின், சுகாதார அமைச்சகத்தால் மதிப்பீடு செய்யப்பட்டதாகவும் நிறுவனம் கூறியது.
மேலும் சில தடுப்பூசிகளில் கூறப்படும் பக்க விளைவுகளான இரத்தக் உறைதல், த்ரோம்போசைட்டோபீனியா, ஆகியவை Covaxin தடுப்பூசியில் இல்லை என்றும் கூறியது. Covaxin பற்றிய பல ஆய்வுகள் சிறந்த பாதுகாப்பு உள்ளவை என்றே நிரூபித்துள்ளன என்றும் பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.