தமிழ் சினிமாவில் மிகவும் துணிச்சலாகவும் தைரியமாகவும் புதுமுகங்களை சினிமாவுக்குள் அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் இமயம் பாரதிராஜா. அந்த வகையில் 1978ம் ஆண்டு அவரின் இயக்கத்தில் வெளியான கிளாசிக் சூப்பர் டூப்பர் ஹிட் திரைப்படம் 'கிழக்கே போகும் ரயில்". இன்று திரையுலகில் மிகவும் வெர்சடைல் பர்சனாலிடியாக கலக்கி கொண்டிருக்கும் நடிகை ராதிகா சரத்குமார் அறிமுகமான திரைப்படம். அதே படத்தில் ஹீரோவாக அறிமுகமானவர் தான் நடிகர் சுதாகர். 80ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகராக வலம் வந்த சுதாகர் பிறந்தநாள் இன்று.

பாரதிராஜாவின் தேர்வு :
இயக்குநர் பாரதிராஜா 'கிழக்கே போகும் ரயில்' படத்துக்காக பரஞ்சோதி என்ற கிராமத்து கவிஞன் கதாபாத்திரத்தில் நடிக்க தகுந்த ஒரு முகத்தை தேடி கொண்டு இருக்கையில் பல ஆடிஷன் செய்தும் பாரதிராஜாவுக்கு யார் மீதும் பெரிய ஈடுபாடு ஏற்படவில்லை.
அப்போது தான் பிலிம் இன்ஸ்டிடியூட்டை சேர்ந்த ஒரு இளைஞன் பற்றி அவருக்கு தெரிய வர ஆடிஷனுக்கு அழைப்பு விடப்படுகிறது. அப்படி வந்தவர் தான் சுருட்டை முடி, திடகாத்திரமான உடல் அமைப்பு, ஹீரோவின் முக சாயலுடன் வந்த நடிகர் சுதாகர். அவரை பார்த்ததும் பாரதிராஜாவின் மனசுக்குள் பளிச் என்ற ஒளிவட்டம் தோன்றுகிறது. கதைக்கு பொருத்தமான ஒரு நடிகர் கிடைத்துவிட்டார் என்றாலும் அவரின் சாயலையும் மொழியிலும் தெலுங்கு வாடை மிக அதிகமாகவே இருந்தது. இருப்பினும் பாரதிராஜாவின் சரியான தேர்வாக சுதாகர் அமைந்தார்.
ரஜினி கமலுக்கு டஃப் :
திரைப்பட கல்லூரியை சேர்ந்த மாணவர், மொழி தெரியாத சுதாகரை எப்படி ஹேண்டில் செய்வது என்பது சற்று யோசனையாக இருந்தது. இருப்பினும் சுதாகர் சிறப்பாக ஒத்துழைத்தார். 'கிழக்கே போகும் ரயில்' திரைப்படம் வெளியானதும் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். அவரை மக்களும் தமிழ் பையன் தான் என ஏற்றுக்கொண்டு வரவேற்றனர். ஓவர் நைட்டில் மளமளவென படங்கள் வந்து சுதாகருக்கு குவிக்கின்றன. அப்படத்தின் வெற்றியை பார்த்து அந்த காலகட்டத்தில் கோலோச்சி கொண்டு இருந்த நடிகர் ரஜினி மற்றும் கமல் போன்ற ஸ்டார் நடிகர்களுக்கு டஃப் கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. தமிழ், தெலுங்கு என மாறி மாறி படங்களில் நடித்து வந்தார். ஒரு சில படங்கள் வெற்றி படங்களாக அமைந்தன அதே வேளையில் ஒரு சில படங்கள் தோல்வியும் அடைந்தன. இருப்பினும் கிழக்கே போகும் ரயில் படம் அளவுக்கு சூப்பர் டூப்பர் ஹிட் படமாக வெற்றி பெறவில்லை.
குடும்ப பின்னணி :
சினிமா பின்னணி இல்லாத படித்த பணக்கார குடும்பத்தை சேர்ந்த சுதாகர் நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தால் சென்னை திரைப்பட கல்லூரியில் சேர்ந்து படித்தார். ஆரம்ப காலகட்டத்தில் ஒரு சில தெலுங்கு திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். அதற்கு பிறகு அவருக்கு அமைந்த ஒரு டர்னிங் பாய்ண்ட் தான் 'கிழக்கே போகும் ரயில்' திரைப்படம்.
தெலுங்கில் நிலைநாட்டினார் :
தமிழ் சினிமாவில் பெரிய அளவில் ஜெயிக்க முடியவில்லை என்றாலும் தெலுங்கு சினிமாவில் தனக்கான சரியான இடத்தை தக்கவைத்து கொண்டு முன்னணி நடிகரானார். இருப்பினும் பாரதிராஜா சுதாகரை வைத்து 'கல்லுக்குள் ஈரம்' படத்தை எடுத்தார். படம் பெரிய அளவில் பேசப்படவில்லை என்றாலும் இளையராஜாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. 90ஸ் காலகட்டத்துக்கு பிறகு முழுமையாக தெலுங்கு சினிமா பக்கம் சென்றுவிட்டார். அதற்கு பிறகு பெரும்பாலும் காமெடியில் இறங்கி கலக்கினார்.
பரவிய வதந்தி :
ஒரு காலகட்டத்துக்கு பிறகு தலைகாட்டாமல் இருந்த சுதாகர் இறந்துவிட்டார் என சமூக வலைத்தளங்கள் எங்கும் செய்திகள் பரவ அதை வதந்தி என்பதை நிரூபிப்பதற்காக வீடியோ மூலம் தான் நலமாக சந்தோஷமாக இருப்பதாகவும் சொல்லி இது போன்ற வதந்திகளை பரப்ப வேண்டாம் என கோரிக்கை வைக்கும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார் நடிகர் சுதாகர். பல ஆண்டுகளுக்கு பிறகு அவரை வீடியோ மூலம் பார்த்த அவரின் ரசிகர்களுக்கு சந்தோஷமாக இருந்தாலும் அவரின் தோற்றம் வருத்தத்தை கொடுத்தது. அன்று பார்த்த பரஞ்சோதியா இது ? எனும் அளவுக்கு ஆள் அடையாளமே தெரியாமல் இருந்தார். எது எப்படி இருந்தாலும் அவர் நல்ல உடல்நலத்துடன் இருக்க அவரது பிறந்த நாளில் வாழ்த்துகிறது ஏபிபி நாடு.