பாலிவுட்டில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான ஆஷிக் பனாயா ஆப்னே என்கிற பாடலை தமிழ் நாட்டில் இருக்கும் பெரும்பாலான மக்கள்  நிச்சயம் பார்த்திருப்பார்கள். இந்தப் பாடலில் நடிகர் இம்ரான் ஹஸ்மி மற்றும்  தனுஸ்ரீ தத்தா ஆகிய இருவரும் முத்தமிட்டுக் கொள்ளும் காட்சிகள் ரசிகர்களால் சலிக்க சலிக்க பார்க்கப் பட்டது. முத்தக் காட்சிகள் என்றாலே இம்ரான் ஹஸ்மிதான் என்கிற அளவிற்கு இந்தப் பாடல் புகழ்பெற்றது. பொதுவாகவே திரைப்படங்களில் இடம்பெறும் முத்தக் காட்சிகள் ஒன்று கதைக்கு எந்த சம்பந்தமும் இல்லாமல் ஒரு உல்லாசத்திற்காக மட்டுமே இடம்பெறுகின்றன. அப்படி கதையுடன் பொருந்தி இருந்தாலும் அவை பெரும்பாலும் மேற்கு படங்களின் தாக்கங்களால் எடுக்கப்பட்டதாகவே இருக்கின்றன. தமிழில் முத்தக் காட்சிகளை கதை ஓட்டத்திற்கு பொருத்தமான வகையிலும் அழகியல் ரீதியாக சித்தரித்தவர் கமல். இதில் பல காட்சிகள் வெளியான சமயத்தில் கடும் விமர்சனங்களையும் சந்தித்தன. கமல்ஹாசன் படங்களில் இடம்பெற்ற புகழ்பெற்ற முத்தக் காட்சிகளைப் பார்க்கலாம்.


புன்னகை மன்னன்


கே பாலச்சந்திரன் இயக்கத்தில் 1986 ஆம் ஆண்டு புன்னகை மன்னன் திரைப்படம் வெளியாகியது. கமல் மற்றும் ரேகா ஆகிய இருவரும் இந்தப் படத்தில் காதலர்களாக நடித்திருந்தனர். கமல் ரேகா ஆகிய இருவரும் ஒரு அருவியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொள்ளும் காட்சி இளைஞர்கள் இடையே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அதே போல் அருவியில் இருந்து குதிக்கும் முன்பாக இளையராஜா இசையில் உருவான என்ன சத்தம் இந்த நேரம் பாடலும் மிகப்பெரிய ஹிட் அடித்தது. இந்த காட்சியில் கமல் மற்றும் ரேகா ஆகிய இருவரும் முத்தமிட்டுக் கொள்ளும் காட்சி மக்களிடையே பரபரப்பாக பேசப்பட்டது. சமீபத்தில் இந்தப் படத்தில் நடித்த ரேகா அந்த முத்தக் காட்சியின்போது தன்னிடம் ஒப்புதல் வாங்கவில்லை என்றும் தனது அனுமதி இல்லாமல் அந்த காட்சி எடுக்கப்பட்டதாக குற்றம்சாட்டினார். இதனைத் தொடர்ந்து கமல் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.


மஹாநதி


1994 ஆம் ஆண்டு சந்தானபாரதி இயக்கத்தில் வெளியானத் திரைப்படம் மகாநதி. இந்திய சினிமாவில் ஒரு சாதனையாக மஹாநதி திரைப்படம் விமர்சகர்களால் பாராட்டப்படுகிறது. மனைவியை இழந்து தன்னுடைய இரண்டு குழந்தைகளுடன் கமல் வாழ்ந்து வர. அந்த இரண்டு குழந்தைகளையும் தத்தெடுத்துக் கொண்டு கமலைத் திருமணம் செய்துகொள்ள இருக்கிறார் சுகன்யா. மிக உணர்ச்சிவசமான ஒரு உரையாடலின்போது கமல் மற்றும் சுகன்யாவுக்கு இடையில் இடம்பெற்ற முத்தக் காட்சி மிகப் பிரபலமானது.


குருதிப்புனல்


ஒளிப்பதிவாளர் பி.சி ஸ்ரீராம் இயக்கத்தில் உருவானத்  திரைப்படம் குருதிப்புனல். விறுவிறுப்பான இந்தப் படத்தில் கமல்ஹாசன், அர்ஜுன் கெளதமி உள்ளிட்டவர்கள் நடித்திருப்பார்கள். கமல் மற்றும் கெளதமிக்கு இடையில்  இந்தப் படத்தில் மிகச் சிறிய காட்சி என்றாலும் அதில் ஒரு கணவன் மனைவிக்கு இடையிலான மிக அந்தரங்கமான தருணங்கள் இயல்பாக காட்டப்பட்டிருக்கும். இந்தப் படத்தில் கெளதமி மற்றும் கமலுக்கு இடையிலான முத்தக் காட்சி ரசிகர்களால் அதிகம் பேசப்பட்ட காட்சிகளில் ஒன்று.


ஹே ராம்


ஹே ராம் படம் வெளியான சமயத்தில் பெரியளவில் வரவேற்பைப் பெறாவிட்டாலும் இந்தப் படத்தில் கமல்ஹாசனுக்கு ராணி முகர்ஜிக்கும் இடையிலான காதல் காட்சிகள் மக்களால் அதிகம் பேசப்பட்டன. இந்த காட்சிகள் பல்வேறு விமர்சனங்களை சந்தித்தன. இது தொடர்பாக ராணி முகர்ஜி தெரிவித்தபோது படத்தின் மற்ற காட்சிகள் போலவே காதல் காட்சிகளும் இயல்பான ஒரு விஷயமாக கருதியே இந்தக் காட்சியில் தான் நடித்ததாக கூறியுள்ளார்.


விருமாண்டி


அதே கணவன் மனைவிக்கு இடையிலான காட்சி. அதே சர்ச்சை விருமாண்டி படத்திற்கும் எழுந்தது. உன்ன விட பாடலில் கமல் மற்றும் அபிராமிக்கு இடையிலான ஊடல் காட்சிகள் மிக நேர்த்தியாகவும் அழகாகவும் எடுக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக நடிகை அபிராமியும் ராணி முகர்ஜி சொன்ன அதே பதிலைத்தான் சற்று வேறுபடுத்தி பேசியிருக்கிறார்.


இவைத் தவிர்த்து நம்மவர் படத்தில் கமலும் கெளதமியும் முத்தமிட்டுக் கொள்வதும். தூங்காவனம் படத்தில் கமல் மது ஷாலிலியை முத்தமிடுவது, விஸ்வரூபம் படத்தில் பூஜா குமாருடனான காட்சி என கமல் படங்களின் காதல் காட்சிகளுக்கு எப்போதும் ஒரு ரசிகர் கூட்டம் இருக்கிறது.