ஜூன் 25, 2009. சரியாக 12 ஆண்டுகளுக்கு முன், இந்நாளின் மாலை வேளையில் அனைத்து ஊடகங்களின் பிரேக்கிங் நியூஸ் இதுதான். இசை உலகமும், ரசிகர்களும் ஸ்தம்பித்து போயிருந்தார்கள். ’கிங் ஆஃப் பாப்’ மைக்கேல் ஜாக்சனின் இறப்புச் செய்திதான் அவர்களை கதிகலங்க வைத்தது.
மாபெரும் இசை கலைஞன் ஒருவன், நாடுகள் தாண்டி கடல் தாண்டி உள்ளூர் வரை ரசிகர்களை தன்வசப்படுத்தியிருந்தான். தமிழ் சினிமாக்களில் அவரது நடன ‘reference’கள் ஏராளம். நமக்கு மிகவும் பிடித்த வடிவேலுவின் ‘எட்டணா இருந்தா எட்டூரும் எம்பாட்ட கேக்கும்...’ தொடங்கி பிரபுதேவை 'மைக்கேல் ஜாக்சன்' என செல்லாக அழைத்து, கவுண்டமனியின் நக்கலில், “நீ என்ன பெரிய மைக்கேல் ஜாக்சனா” என வம்பிழுக்கும் வரை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மைக்கேல் ஜாக்சன் பரிச்சயமானவராக இருந்தார்.
மைக்கேல் ஜாக்சன் யார்? அவர் ஒரு பாப் சிங்கரா? நடன கலைஞரா? அவரது பாடல்களில் புரட்சி இருக்குமா? – இதை பற்றியெல்லாம் தெரியாது. ஆனால், மைக்கேல் ஜாக்சனை தெரியும், அவரது பிரபல ‘மூன்வாக்’ ஸ்டெப் தெரியும்! இப்படி கொஞ்சம் கொஞ்சமாக உலகெங்கிலும் உள்ள அடுத்த ஜெனரேஷன் மக்கள் தனக்கு ரசிகர்களாக படையெடுத்துக் கொண்டிருக்கும்போதுதான் அவர் இந்த உலகைவிட்டு மறைந்துவிட்டார்.
2000-ம் ஆண்டுகளின் காலகட்டத்தில்தான் ‘ஐபாட்’ மிக பிரபலம். கையடக்கமான இந்த மியூசிக் ப்ளேயரை வாங்க மக்கள் கனவு கண்டார்கள். கனவை நினைவாக்கி அப்படி ஒரு ஐபாட் வாங்கிவிட்டால், அந்த ப்ளேலிஸ்டில் நிச்சயம் மைக்கேல் ஜாக்சனின் பாடல்கள் இடம் பெற்றிருக்கும்.
இதே காலக்கட்டத்தில்தான், இங்கிலீஷ் பாடல்களை டிவியில் ஒளிபரப்பும் முழுநேர இசை தொலைக்காட்சி சேனல்கள் தொடங்கப்பட்டன. அப்போது அடிக்கடி ஒளிபரப்பப்படும் மைக்கேல் ஜாக்சனின் ‘BEAT IT’, ‘THEY DON’T REALLY CARE ABOUT US’ பாடல்கள்தான் பெரும்பாலானோருக்கு இங்கிலீஷ் ஆல்பங்கள் கேட்க ஆரம்பித்தற்கான அறிமுக பாடல்கள்!
இண்டெர்நெட் வசதிகள் கைக்கூட, மைக்கேல் ஜாக்சனின் மற்ற பாடல்களை தேடி விரும்பி கேட்பதற்குள் அவர் மறைந்துவிட்டார். ஆனால், ஒரு மகத்தான கலைஞனனுக்கு ஏது மரணம்!? அவர் இறந்து இத்தனை ஆண்டுகள் கடந்தபின்பும், மைக்கேல் ஜான்சனின் பாடல்கள் அடுத்தடுத்த ஜெனரேஷன் மக்களிடம் சென்றடைந்து கொண்டேதான் இருக்கின்றது. 38 கின்னஸ் விருதுகள், 40 பில்லிபோர்டு அவார்டுகள், 13 கிராமி, 26 அமெரிக்கன் மியூசிக் அவார்டுகள் என அவர் வாங்கி குவித்த விருதுகளைவிட உலக ரசிகர்களின் அன்பு மேலானது.
ரெக்கார்டு செய்யப்பட்டு வெளியான அவரது பாடல்களுக்கு எவ்வளவு மவுசு இருந்ததோ அதைவிட பலமடங்கு எதிர்பார்ப்பும், ரசிகர் கூட்டமும் அவரது லைவ் நிகழ்ச்சிகளுக்கு இருந்தது. மைக்கேல் ஜாக்சனின் லைவ் பர்ஃபாமென்ஸ்கள் வேற ரகம்!
வரலாற்றில் அதிகம் விற்பனையான இசை ஆல்பம், இசைக்கான உலகின் பிரபலமான விருதுகள் அனைத்தும் தன்வசம், வெற்றிகரமான இசை பயணம் கொண்ட மைக்கேல் ஜாக்சனுக்கு ஆரோக்கியமான உடல்நலம் கிட்டவில்லை. 'விட்டிலிகோ' என்கிற வெண்புள்ளி தோல் பிரச்சினை, மூக்கு பகுதியில் சர்ஜரி என தொடர்ந்து அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தார்.
ஆரோக்கியமான உடல்நலம் இல்லாதது, மிக விலை உயர்ந்த அவரது கனவு மாளிகை சுற்றிய பிரச்சனைகள், போதை மருந்துக்கு அடிமையானது, அவர் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் என கசப்பான பல விஷயங்களும் கூட அவரது அடையாளமாக மாறிப்போயிருந்தது. தனது வாழ்க்கை பயணத்தில் ஏற்ற இறக்கங்களை சரிசமமாய் எதிர்கொண்டு ஓடியவரின் இசை, உலகெங்கும் இன்னும் ஒலித்துக்கொண்டே இருக்கின்றது. என்றும் நினைவில் இருக்கும் இசையை விட்டுச்சென்றதற்கு நன்றி மைக்கேல்!