அரசியலில் நுழைவது தொடர்பாக தகவல் பரவிய நிலையில், நடிகர் கிச்சா சுதீப்பிற்கு மிரட்டல் கடிதம் அனுப்பியது அவரது நண்பரே என்பது தெரிந்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
சுதீப்பிற்கு வந்த மிரட்டல் கடிதம்
கன்னட திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழும் கிச்சா சுதீப், நான் ஈ படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடத்திலும் பிரபலமானார். இப்படியான நிலையில் கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் வரும் மே 10 ஆம் தேதி நடக்க உள்ளது. இதற்கான அறிவிப்பு கடந்த மாதம் வெளியான நிலையில், ஏப்ரல் முதல் வாரத்தில் நடிகர் கிச்சா சுதீப் காங்கிரஸ் கட்சியின் தலைவர் டி.கே.சிவகுமாரை சந்தித்தார். தொடர்ந்து தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் முதலமைச்சர் பசவராஜ் பொம்மையை சந்தித்து பேசினார்.
இதனால் அவர், பாஜகவில் சேரப்போவதாக தகவல் வெளியானது. இதற்கு கிச்சா சுதீப்பின் ரசிகர்கள் கடும் எதிர்ப்புன் தெரிவித்தனர். இதற்கிடையில் அவருக்கு மிரட்டல் கடிதம் வந்தது. உடனடியாக இதுகுறித்து மேனேஜர் ஜாக் மஞ்சு புட்டனேஹள்ளி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதில், “கிச்சா சுதீப் பாஜகவில் சேரக்கூடாது என்றும், அப்படி சேர்ந்தால் அவரின் அந்தரங்க வீடியோக்கள் சமூக ஊடகத்தில் வெளியிட நேரிடும்” என தெரிவிக்கப்பட்டிருந்தது.
சுதீப் விளக்கம்
இதனைத் தொடர்ந்து சுதீப் வெளிப்படையாக விளக்கம் அளித்தார். அதில், "நான் அனைத்து அரசியல் தலைவர்களுடனும் தொடர்பில் இருப்பதும், அவர்கள் அழைப்பு விடுத்ததும் உண்மை தான். ஆனால் அரசியலில் ஈடுபடுவது குறித்து நான் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. நான் இந்த விவகாரத்தில் ஒரு முடிவுக்கு வரும் முன்னர் ரசிகர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பது குறித்து தெரிந்து கொள்ள விரும்புகிறேன்" என தெரிவித்திருந்தார்.
கைது செய்யப்பட்ட இயக்குநர் ரமேஷ் கிட்டி
இப்படியான நிலையில் போலீசாரும் ஒருபக்கம் எஃப்ஐஆர் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். கடிதத்தை கையால் எழுதாமல் டைப் செய்திருந்தனர். கடிதம் போடப்பட்ட தபால் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டது. அருகிலிருந்த சிசிடிவி காட்சிகளை கொண்டு குற்றவாளியை தீவிரமாக தேடி வந்தனர். இப்படியான நிலையில் கிச்சா சுதீப்பிற்கு மிரட்டல் கடிதம் அனுப்பிய சம்பவத்தில் அவரது நெருங்கிய நண்பரும், இயக்குநருமான ரமேஷ் கிட்டியை பெங்களூரு போலீசார் கைது செய்துள்ளனர்.
அறக்கட்டளை நிதியை கையாள்வதில் கிட்டிக்கும் சுதீப்புக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டதாகவும், 2 கோடி முதலீடு செய்த நிலையில் சுதீப் தன்னை ஏமாற்றியதாகவும் கிட்டி போலீசாரிடம் தெரிவித்துள்ளார். அதனால் தான் மிரட்டல் கடிதம் அனுப்பியதாகவும் போலீஸ் விசாரணையில் தெரிவித்துள்ளார். இதன் பின்னணியில் மேலும் சிலர் இருப்பதாக போலீசார் சந்தேகித்துள்ளனர். இந்த சம்பவம் கன்னட திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்துயுள்ளது.