நீட் தேர்வு நாளை நாடு முழுவதும் 20.87 லட்சம் பேருக்கு ஒரே கட்டமாக ஆஃப்லைன் முறையில் நடைபெற உள்ள நிலையில், மாணவர்கள் என்ன மாதிரியான உடை அணியலாம் என்று பார்க்கலாம்.
நாடு முழுவதும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் , பிஎஸ்எம்எஸ், பிஏஎம்எஸ் , பிஒய்எம்எஸ், ஓமியோபதி உள்பட இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கும் முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கும் தேசிய அளவில் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. நீட் என அழைக்கப்படும் இந்த நுழைவுத் தேர்வை என்டிஏ எனப்படும் தேசியத் தேர்வுகள் முகமை நடத்துகிறது.
20.87 லட்சம் பேர் விண்ணப்பம்
2023ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வை எழுத 20,87,449 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்காக இந்தியாவுக்கு உள்ளேயும் வெளியேயும் 499 நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தியாவுக்கு வெளியே 14 நகரங்களில் தேர்வு மையங்களை என்டிஏ அமைத்துள்ளது. அதேபோல மற்றொரு மாற்றத்தையும் என்டிஏ கொண்டு வந்துள்ளது . இதன்படி, ஒரே மதிப்பெண்களைப் பெற்ற 2 அல்லது அதற்கு மேற்பட்ட மாணவர்களுக்கு பிறந்த தேதி மற்றும் விண்ணப்ப எண்ணைக் கொண்டு, மதிப்பெண்களைத் தீர்மானிக்கும் முறை ரத்து செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள 645 மருத்துவக் கல்லூரிகள், 318 பல் மருத்துவக் கல்லூரிகள், 914 ஆயுஷ் கல்லூரிகள், 47 கால்நடை மருத்துவக் கல்லூரிகள், நீட் தேர்வு முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு மாணவர் சேர்க்கையை நடத்தி வருகின்றன. மாநிலக் கல்லூரிகளில் 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கும் மத்திய பல்கலைக்கழகங்களில் 100 சதவீத ஒதுக்கீட்டுக்கும் மருத்துவக் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. மீதமுள்ள மாநிலக் கல்லூரி இடங்கள், சொந்த மாநில மாணவர்களுக்கு ஒதுக்கப்படுகின்றன. இதன்படி சுமார் 4 ஆயிரம் இடங்கள் தமிழ்நாட்டுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் இருந்து சுமார் 1.5 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இதில் அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் 21 ஆயிரம் பேர் இந்த ஆண்டு நீட் தேர்வு எழுத விண்ணப்பித்ததாகவும் தகவல்கள் வெளியாகின.
என்ன உடைகளுக்கு அனுமதி?
இந்த நிலையில், மாணவர்கள் என்ன மாதிரியான உடை அணியலாம் என்று பார்க்கலாம். ஆண்டுதோறும் என்டிஏ அறிவுறுத்துவதைப் போல,
* இந்த முறையும் முழுக்கை உடைகளுக்கு அனுமதி இல்லை.
* பெரிய பட்டன்கள், டிசைன்கள் கொண்ட உடைகளுக்கும் அனுமதி கிடையாது.
* லேசான ஆடைகளுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
* மத, கலாச்சார ஆடைகளை அணிந்துவரும் மாணவர்களும் மாணவிகளும் குறிப்பிட்ட நேரத்துக்கு ஒரு மணி நேரம் முன்னதாக, அதாவது 12.30 மணிக்கு வர வேண்டும். இதன்மூலம் பதற்றம் தவிர்க்கப்பட்டு, பரிசோதனை சரியான முறையில் நடைபெறும்.
* குறைந்த ஹீல்ஸ் கொண்ட செருப்புகள் உள்ளிட்ட காலணிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
* ஷூக்களுக்கும், அதிக உயரம் கொண்ட காலணிக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
தொலைபேசி எண்: 011- 40759000
இ- மெயில்: neet@nta.ac.in
இணையதள முகவரி: https://neet.nta.nic.in/
கூடுதல் விவரங்களுக்கு: https://cdnbbsr.s3waas.gov.in/s37bc1ec1d9c3426357e69acd5bf320061/uploads/2023/03/2023031499.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து பார்க்கவும்.