தமிழ் சினிமாவில் 90களில் மாபெரும் வெற்றிபெற்ற ’சின்ன தம்பி’ திரைப்படம் வெளியாகி 32 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், நடிகை குஷ்பு நெகிழ்ச்சியுடன் தன் ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து பதிவிட்டுள்ளார்.
மெகா ஹிட் சின்ன தம்பி
1991ஆம் ஆண்டு ஏப்ரல் 12ஆம் தேதி பி.வாசு இயக்கத்தில் பிரபு, குஷ்பு, மனோரமா, ராதாரவி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி இமாலய வெற்றி பெற்ற திரைப்படம் ‘சின்ன தம்பி’
நடிகை குஷ்புவின் திரைப்பயணத்தில் முக்கியமான திரைப்படமாக அமைந்த சின்னதம்பி படம், வசூலிலும் பட்டையைக் கிளப்பி, 250 நாள்களுக்கும் மேல் திரையரங்குகளில் ஓடி சாதனை படைத்தது.
இளையராஜாவின் இன்னிசை
குறிப்பாக ‘நீ எங்கே என் அன்பே’, ‘போவோமா ஊர்கோலம்’, ’தூளியிலே ஆடவந்த’ என இளையராஜாவின் இன்னிசையில் அமைந்த பாடல்கள் பட்டிதொட்டியெல்லாம் ஹிட் அடித்து படத்தை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது.
மேலும், தமிழ்நாடு மாநில விருதுகள் உள்பட அன்றைய காலக்கட்டத்தில் பல்வேறு விருதுகளை வாரிக் குவித்த சின்ன தம்பி திரைப்படம் பாக்ஸ் ஆஃபிஸ் ரெக்கார்டுகளை துவம்சம் செய்தது. மேலும், கன்னடத்தில் ராமாச்சாரி, தெலுங்கில் சந்தி, இந்தியின் ஆனாரி என பிற மொழிகளிலும் சின்ன தம்பி ரீமேக் செய்யப்பட்டு கல்லாகட்டியது.
32 ஆண்டுகள் நிறைவு - குஷ்பு ட்வீட்
இந்நிலையில் சின்ன தம்பி படம் வெளியாகி இன்றுடன் 32 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், நடிகை குஷ்பு இன்று நெகிழ்ச்சியுடன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
“தமிழ் சினிமாவில் புயலைக் கிளப்பிய சின்னதம்பி படம் வெளியாகி 32 ஆண்டுகள் ஆகிவிட்டது என்பதை என்னால் நம்ப முடியவில்லை. என் இதயம் என்றும் பி.வாசு மற்றும் நடிகர் பிரபுவுக்காக துடிக்கும். ஆன்மாவைத் தொடும் பாடல்களைத் தந்த இளையராஜாவுக்கு என்றென்றும் நான் கடமைப்பட்டவளாக இருப்பேன்.
’நந்தினி நிலைத்திருப்பார்’
நந்தினி ஒவ்வொருவரது இதயங்களிலும் மனங்களிலும் என்றும் நிறைந்திருப்பார். அனைவருக்கும் நன்றி” என குஷ்பு பதிவிட்டுள்ளார்.
குஷ்புவின் இந்தப் பதிவு இணையத்தில் வைரலாகியுள்ளது. மேலும், தமிழ் தாண்டி வேற்று மொழி ரசிகர்களும் மொழி புரியாவிட்டாலும் பாடல்களுக்காகவும் உங்களுக்காகவும் நாங்கள் இந்தப் படத்தைப் பார்த்தோம் என குஷ்புவின் கமெண்ட் செக்ஷனில் பதிவிட்டு வருகின்றனர்.
சினிமா, அரசியல் என வலம் வரும் குஷ்பு முன்னதாக உடல்நலக்குறைவால் ஹைதராபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று, உடல்நலன் தேறி வீடு திரும்பிய நிலையில், தொடர்ந்து அவரது ரசிகர்கள் குஷ்புவை நலம் விசாரித்து வருகின்றனர்.