இன்டர்நெட்டில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. ஆனால் வெகு சில வீடியோக்கள் மட்டுமே நெகிழ வைக்கும். நாம் வாழும் உலகம் நமக்கு எப்போதாவது தரும் நம்பிக்கைகளில் ஒன்றாக அது ஒளிரும். மனிதர்கள் இப்படியும் இருக்கிறார்கள் என்று உணர்த்தும் அந்த வீடியோக்களை நாம் நம் ஸ்மார்ட்ஃபோனில் சேவ் செய்து வைத்து அடிக்கடி கண்டு நம்பிக்கை தேற்றிக்கொள்ளும் விடியோக்கலாக அவை இருக்கும். அப்படி மனிதம் போற்றும் வகையில் ஒரு விடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. சாலையோர காய்கறி விற்கும் வயதான பாட்டி ஒருவர் தனது உணவை தவறவிட்ட பிறகு வந்து உதவும் ஒரு குழந்தையினை குறித்த விடியோ அது.



அந்த வைரல் வீடியோவில் ஒரு வயதான பாட்டி நல்ல மதியத்தில் வெயில் நேரத்தில் சாலையோரத்தில் காய்கறிகள் விற்றுக்கொண்டிருக்கிறார். வாடிக்கையாளர்கள் யாரும் வாராத நேரத்தில் அவர் அவருடைய மதிய உணவை உண்ணலாம் என்று தள்ளாத வயதில் மிகவும் சிரமப்பட்டு எழுந்து அவர் பின்னால் இருக்கும் பையை எடுக்கிறார். அதில் அவருடைய உணவு ஒரு சில்வர் பாக்சில் உள்ளது. அதை கையில் எடுத்துக்கொண்டு இன்னொரு கையால் பக்கத்தில் உள்ள கம்பியை பிடித்து மெதுவாக நடந்து வருகிறார். சாப்பிட அமரும் முன் கையில் இருந்த லஞ்ச் பாக்ஸ் தவறி விழுகிறது. தவறி விழுந்த பாக்சில் இருந்து உணவு வெளியே சிதறிக் கிடக்கிறது. அதனை பார்த்து என்ன செய்வதென்று தெரியாமல் வருந்திக்கொண்டிருக்கிறார் பாட்டி. அப்போது சாலையின் மறுபுறத்தில் இருந்து நடக்கும் சம்பவத்தை பார்த்துக்கொண்டிருந்த ஒரு ஐந்து அல்லது ஆறு வயது மதிக்கத்தக்க பள்ளி சீருடை அணிந்த சிறுவன் சாலையை கடந்து வந்து பாட்டியின் அருகில் நின்று தன் பேக்கை திறக்கிறான். அப்போது அந்த பாட்டி கீழே கொட்டியிருக்கும் உணவை எடுக்க முற்படுகிறார். அவரை தடுத்து நிறுத்தி தனக்காக வைத்திருக்கும் உணவை எடுத்து அந்த பாட்டிக்கு கொடுக்கிறான்.






இந்த விடியோ நித்யா என்னும் பெண்ணால் ட்விட்டரில் பகிறப்பட்டுள்ளது. அந்த பெண், "என் இதயத்தை உடைக்கிறது, கடவுள் அந்த குழந்தைக்குள் இருக்கிறார், அந்த பாட்டி ஏன் அங்கு இருக்கிறார் என்றெல்லாம் எனக்கு தெரியாது, ஆனால் யாரும் அவர்களுடைய பெற்றோர்களை இந்த நிலைக்கு விடாதீர்கள்" என்று எழுதியுள்ளார். அதற்கு கீழ் பலர் அந்த குழந்தையின் மனிதத்தை பாரட்டுகின்றனர். பலர் இந்த விடியோ ஸ்க்ரிப்ட் செய்யப்பட்டதாக இருந்தாலும், நல்ல கருத்தை முன்வைக்கிறது, கண்களை கலங்க செய்கிறது என்று எழுதியுள்ளனர். இந்த வைரல் விடியோவை ஷேர் செய்த நடிகையும் பாஜகவை சேர்ந்தவருமான குஷ்பு, "அம்மாக்களை இதுபோன்று விடும் மக்கள் யாருக்கும் நரகத்தில் கூட இடம் கிடைக்காது, இது நிச்சயம் உங்கள் இதயத்தை உடைக்கும், அந்த குழந்தையை கடவுள் ஆசிர்வதிக்கட்டும்" என்று எழுதியுள்ளார்.