ஹெச்.வினோத் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
கமல் - ஹெச்.வினோத் காம்போ
இந்தியன் 2 படத்தை அடுத்து நடிகர் கமல்ஹாசன் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிப்பதாக கடந்த சில வாரங்களாக தகவல்கள் வெளியாகி வந்தன. இந்நிலையில், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, KH233 படத்துக்காக கமல் - ஹெச்.வினோத் இணைவதாக வீடியோ பகிரப்பட்டு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த வீடியோவில் கமல் தீப்பந்தம் ஏந்தியபடி இருக்கும் புகைப்படம் ஒன்றும் இடம்பெற்றுள்ளது. இந்தப் படத்தை நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் மகேந்திரன் உடன் இணைந்து தயாரிக்க உள்ளது. ராஜ்கமல் நிறுவனத்தின் 52ஆவது படமாக இப்படம் உருவாகிறது.
வரிசைகட்டி நடிக்கும் கமல்
இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரங்களுள் ஒருவரான கமல்ஹாசன் கோலிவுட்டில் இறுதியாக லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் படத்தில் நடித்திருந்தார். சென்ற ஆண்டு வெளியான இப்படம் கோலிவுட்டில் வரலாற்று வசூல் சாதனை புரிந்து மாஸ் ஹிட் அடித்தது.
இந்நிலையில், அடுத்ததாக இயக்குநர்கள் பா.ரஞ்சித், மணிரத்னம் ஆகியோருடன் கமல்ஹாசன் கைக்கோர்ப்பதாகத் தகவல்கள் வெளியாகின. இதனிடையே பல காலமாக தடைபட்டிருந்த இந்தியன் 2 படப்பணிகளும் தொடங்கி முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது.
மற்றொருபுறம் பிரபாஸ் - அமிதாப் என பான் இந்தியா படமாக உருவாகி வரும் ப்ராஜெக்ட் கே படத்தில் கமல் வில்லனாக நடிப்பதாகத் தகவல் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.
233ஆவது படம்
இதனிடையே மணிரத்னத்துடன் கமல் இணைந்துள்ள திரைப்படம் அவரது 234ஆவது படம் எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில், 233ஆவது திரைப்படம் குறித்த கேள்விகள் கோலிவுட் வட்டாரத்தில் எழுந்து வந்தன.
இந்நிலையில் கமலும் ஹெச்.வினோத்தும் இணைவதாக கடந்த சில நாள்களாக கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டு வந்தது. இந்த ஆண்டு பொங்கல் வெளியீடாக அஜித் நடிப்பில் வெளியான துணிவு படத்தை அடுத்து கமலுடன் ஹெச்.வினோத் இணைவதாகவும், பான் இந்தியா படமாக இப்படம் உருவாவதாகவும் தகவல்கள் வெளியாகின.
தன் முதல் படமான சதுரங்க வேட்டை தொடங்கி ஹெச்.வினோத் தொடர்ந்து சமூக பொறுப்புணர்வு கொண்ட கதைகளை இயக்கி வரும் நிலையில், இந்தப் படமும் அவ்வாறே இருக்கும் என்றும் தகவல்கள் வெளியாகின.
மேலும் முன்னதாக நெல் ஜெயராமன் மற்றும், பாரம்பரிய நெல் பாதுகாப்பு மைய உறுப்பினர்களுடன் கமல் - ஹெச்.வினோத் இருவரும் கலந்துரையாடிய நிலையில், அவரைப் பற்றிய கதையாக இருக்கலாம் எனவும் கூறப்பட்டது. இந்நிலையில் ‘ரைஸ் டூ ரூல்’ எனும் வாசகத்துடன் அதகளமாக வெளியாகியுள்ள இந்த அறிவிப்பு கமல்ஹாசன் - ஹெச்.வினோத் இருவரது ரசிகர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.