நடிகர் கமல்ஹாசன் - இயக்குநர் மணிரத்னம் இருவரும் 35 ஆண்டுகளுக்குப் பின் இணையும் KH 234 படத்தில் நடிகை நயன்தாரா இணைவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


மணிரத்னம் - கமல் - நயன்தாரா


1987ஆம் ஆண்டு வெளியாகி நடிகர் கமல் ஹாசனுக்கு தேசிய விருதினைப் பெற்று தந்த நாயகன் படத்துக்குப் பிறகு கமல்ஹாசன் - இயக்குநர் மணிரத்னம் இருவரும் தற்போது அடுத்த படத்துக்காக இணைகின்றனர்.


உறவுக்காரர்களான மணிரத்னம் - கமல் இருவரும் சுமார் 35 ஆண்டுகளுக்குப் பிறகு ஒன்றிணையும் நிலையில், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சென்ற ஆண்டு வெளியானது. உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயிண்ட் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கும் நிலையில், ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்துக்கு இசையமைப்பதாகவும் முன்னதாக தகவல்கள் வெளிவந்தன.


இந்நிலையில், இந்தப் படத்தில் நடிகை நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.


கமல்ஹாசன் ஒருபுறம் இந்தியன் 2 படப்பிடிப்பில் பிஸியாக இருக்கும் நிலையில், இயக்குநர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் 2 வெளியீட்டுக்குத் தயாராக உள்ளது. மற்றொருபுறம் நடிகை நயன்தாரா ஷாருக்கான் - அட்லி கூட்டணியில் உருவாகி வரும் ஜவான் படப் பணிகளில் பிஸியாக உள்ளார். மேலும் தமிழில் அடுத்தடுத்து இறைவன், டெஸ்ட், தன் 75ஆவது படம் என பிஸியாக வலம் வருகிறார்.


த்ரிஷா போய் நயன்தாரா...


இந்நிலையில், தன் கனவுப் படமான பொன்னியின் செல்வன் பாகங்களை முடித்து இயக்குநர் மணிரத்னம் ஆசுவாசமடைந்துள்ள சூழலில், கமல்ஹாசன் - நயன்தாரா இருவரும் இணைவதாகத் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.


முன்னதாக நடிகை த்ரிஷா கமல்ஹாசனுக்கு ஜோடியாக இந்தப் படத்தில் நடிப்பதாகக் கூறப்பட்டது. த்ரிஷா ஏற்கெனவே தூங்காவனம், மன்மதன் அம்பு உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்துள்ளார். மேலும் இயக்குநர் மணிரத்னத்தின் ஆயுத எழுத்து, பொன்னியின் செல்வன் பாகங்களில் நடித்துள்ள நிலையில், அடுத்ததாக இந்தப் படத்தில் இணைவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், நயன்தாரா இந்தப் படத்தில் இணைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


முன்னதாக நடிகர்கள் மாதவன், சித்தார்த் உடன் நயன்தாரா நடிக்கும் டெஸ்ட் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி கவனமீர்த்தது.


டெஸ்ட் கிரிக்கெட் விளையாட்டை சுற்றி நடக்கும் கதையாக இப்படம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் படத்தின் யார், யார் நடிக்கவுள்ளார்கள் என்ற அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


சென்ற ஆண்டு ஜூன் மாதம் தன் நெடுநாள் நண்பர், காதலர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்ட நயன்தாரா, காத்து வாக்குல ரெண்டு காதல், ஓ2, கனெக்ட் ஆகிய மூன்று தமிழ் படங்களில் நடித்திருந்தார்.


மேலும் படிக்க: Maamannan : ஏ.ஆர்.ரஹ்மான் என் அரசியலை புரிஞ்சுக்கிட்டார்.. தேதி சொல்வேன்.. மாமன்னன் அப்டேட் சொன்ன மாரி செல்வராஜ்