டாக்ஸிக்


கே.ஜி எஃப் படத்தின் மூலம் இந்திய அளவில் மிகப்பெரிய அங்கீகாரத்தைப் பெற்றவர் நடிகர் யஷ்.  இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு  அவரது 18 ஆவது படத்தின் டைட்டில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. கீது மோகன் தாஸ் இயக்கும் இந்தப் படத்திற்கு டாக்ஸிக் (Toxic Movie) என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவுக்கு ஏற்கெனவே பரிச்சயமான நடிகையான கீது மோகன்தாஸ்.


சத்யராஜ் - சுஹாசினி நடித்த ‘என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். தொடர்ந்து நடிகர் மாதவன் உடன் ‘நள தமயந்தி’ உள்ளிட்ட தமிழ் படங்களிலும் ஹீரோயினாக கீது மோகன்தாஸ் நடித்துள்ளார். 'லையர்ஸ் டைஸ்' என்ற இந்தி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானர். இந்தப் படத்திற்காக தேசிய விருதை வென்ற இவர், அடுத்தபடியாக  நிவின் பாலியை வைத்து இயக்கிய மூதோன் திரைப்படத்துக்காக பெரும் பாராட்டுகளைக் குவித்தார். கீது மோகன் தாஸ் இயக்கிய இரு படங்களும் சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்ற படங்கள். 


கே.ஜி.எஃப் நடிகருன் இணைந்த நயன்தாரா


தனது முதல் இரு படங்களையும் பெரிய நட்சத்திரங்கள் இல்லாமல் இயக்கிய கீது மோகன் தாஸ் தனது மூன்றாவது படத்தை மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரபலமான நடிகரை வைத்து அறிவித்தது டாக்ஸிக் படத்தின் மீது எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளது. இப்படத்தில் சாய் பல்லவி கரீனா கபூர் நாயகிகளாக நடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப் பட்ட நிலையில், கோலிவுட்டின் லேடி சூப்பர்ஸ்டார் இப்படத்தில் நாயகியாக தேர்வு செய்யப் பட்டார். பாலிவுட் நடிகை  கியாரா அத்வானி மற்றொரு கதாநாயகியாக நடிக்கிறார். காலா படத்தில் நடித்த ஜூமா குரேஷி இப்படத்தில் நெகட்டிவ் ரோலில் நடிக்கிறார். 


லண்டனில் படப்பிடிப்பு






டாக்ஸிக் படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே இந்தியாவில் தொடங்கிவிட்டுள்ளது. தற்போது அடுத்தகட்ட படப்பிடிப்பு லண்டனில் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மொத்தம் 200 நாட்கள் இப்படத்தின் படப்பிடிப்பு தீர்மானிக்கப்பட்டிருப்பதாகவும் அதில் 150 நாட்கள் படப்பிடிப்பு லண்டனில் நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தில் யஷ் மிகப்பெரிய டானாக நடிப்பதாகவும், ஆனால் வழக்கமான கேங்ஸ்டர் படமாக இல்லாமல் நாயகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படமாக இப்படம் இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. படத்தின் கதை மற்றும் பிற நடிகர்கள் பற்றிய தகவல்கலை இதுவரை ரகசியமாகவே வைத்திருக்கிறார்கள் படக்குழுவினர். அடுத்த ஆண்டு ஏப்ரல் 10 ஆம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப் படுகிறது.