பிரபல கன்னட நடிகர் தர்ஷன் அவரின் காதலி பவித்ரா கவுடாவை பற்றி ஆபாசமாக மெசேஜ் அனுப்பிய தர்ஷன் ரசிகர் மன்ற உறுப்பினரான ரேணுகா சுவாமி என்பவரை ஆள் வைத்து அடித்து கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் குறித்த விவகாரங்கள், விமர்சனங்கள் தான் தற்போது சோசியல் மீடியாவில் பேசுபொருளாக இருந்து வருகிறது.
காதலிக்கு மெசேஜ் அனுப்பிய ரசிகரை கொலை செய்த வழக்கில் நடிகர் தர்ஷன் மற்றும் பவித்ரா கவுடா சிறை காவலில் வைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளபட்டு வருகிறது. ஏற்கனவே தர்ஷன் அவரின் மனைவி மீது தாக்குதல் நடத்தியதாக ஒரு வழக்கும் தயாரிப்பாளர் ஒருவரை மிரட்டியதாக ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. பப்பில் விதிகளை மீறிய வழக்கு, பறவைகளை கொன்ற வழக்கு உள்ளிட்ட பல வழக்குகள் தர்ஷன் மீது ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தர்ஷினின் செய்த இந்த செயலை கண்டித்து பிரபலங்கள் பலரும் அவர் சட்ட ரீதியாக இந்த பிரச்சனையை அணுகி இருக்க வேண்டும் என கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் நடிகையும் அரசியல்வாதியுமான திவ்யா ஸ்பந்தனா தன்னுடைய அழுத்தமான கருத்தை முன்வைத்துள்ளார்.
"நியாயம் கிடைக்கவில்லை என்பதற்காக ஒருவரை ஒருவர் அடித்து கொல்வது சரியானதல்ல. காவல் நிலையத்தில் இது குறித்து ஒரு புகார் அளிப்பதால் இந்த பிரச்னைக்கு ஒரு முடிவு வர வாய்ப்பு இருந்து இருக்கும். காவல் துறையும் தன்னால் ஆன முயற்சிகளை செய்து இருப்பார்கள். ஒருவர் ட்ரோல் செய்யப்படுகிறார் என்றால் அதில் இருந்து விடுபட வன்முறை சரியான தீர்வல்ல.
நாம் அனைவரும் சட்டத்திற்கு உட்பட்டவர்கள் தான். அதை அவர்களாகவே கையில் எடுப்பது ஆபத்தானது. வன்முறையில் ஈடுபடுவது, கொலை செய்வது உள்ளிட்ட செயல்கள் கண்டிக்கத்தக்கவை. எந்த ஒரு பிரச்னையாக இருந்தாலும் அதை சட்டரீதியாகத்தான் அணுக வேண்டும். இந்த விவகாரத்தை பொறுத்தவரையில் காவல்துறையினர் சிறப்பாக செயல்பட்டதற்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
மக்கள் சட்டத்தின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை எந்த இடத்திலும் விட்டு கொடுக்காமல், அரசியல் அழுத்தங்களுக்கு அடிபணியாமல் அரசும், நீதித்துறையும் உரிய நடவடிக்கை எடுக்கும் என முழுமனதாக நம்புகிறேன், நாமாக சட்டத்தை கையில் எடுத்து கொள்ள கூடாது" என தெரிவித்து இருந்தார் திவ்யா ஸ்பந்தனா.
இந்த வழக்கை விசாரித்த எஸ்.கிரிஷ், ஏசிபி சந்தன் குமார் மற்றும் அவர்களின் குழு அனைவரும் சேர்ந்து எந்த ஒரு அச்சுறுத்தலுக்கும் அடிபணியாமல் விசாரணை செய்து குற்றம் செய்தவர்களை கைது செய்துள்ளது பாராட்டுக்குரியது என்றார் திவ்யா ஸ்பந்தனா.