கே.ஜி.எஃப் 2 திரைப்படம் ஓடிடியில் எவ்வளவு தொகைக்கு விற்கப்பட்டுள்ளது என்பது குறித்தான தகவல் வெளியாகியுள்ளது.
அந்த தகவலின்படி கே.ஜி.எஃப் 2 படமானது பிரபல ஓடிடி தளம் ஒன்றுக்கு 320 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாகவும் வருகிற மே 27 ஆம் தேதி கே.ஜி.எஃப் 2 திரைப்படம் ஓடிடியில் வெளியிடப்படும் என தெரியவருகிறது. ஆங்கிலம், தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் படம் ஸ்ட்ரீம் செய்யப்பட இருக்கிறதான். சினிமா வட்டாரங்களில் பேசப்படும் தகவல்களை வைத்து பார்க்கும் போது, அமேசான் ஓடிடி தளமே கே.ஜி.எஃப் 2 படத்தை வாங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது.
வசூல் சாதனை
யஷ் நடிப்பில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் கடந்த 14 ஆம் தேதி வெளியான கே.ஜி.எஃப் பாகம் 2. இந்தத்திரைப்படம் மக்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்று, வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கிறது. வெளியான அன்றைய நாளே 130 கோடிக்கு மேல் வசூலித்த கே.ஜி.எப் 2 திரைப்படம் அண்மையில் 1000 கோடியை கடந்தது. முன்னதாக பாகுபலி பாகம் 1 வசூலித்த மொத்த வசூலை படம் வெளியான 7 நாட்களில் கே.ஜி.எப் 2 திரைப்படம் வசூலித்து சாதனை படைத்தது. அதனைத்தொடர்ந்து இந்தியில் அமீர்கான் நடிப்பில் வெளியான தங்கல் திரைப்படம் வசுலித்த தொகையை விட அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது.
19 வயது எடிட்டர்
இந்தப்படத்தில் யஷ்ஷூக்கு வில்லனாக பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடித்துள்ளார். கதாநாயகியாக ஸ்ரீநிதி ஷெட்டி, ரவீனா டண்டன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். புவுனா கெளடா ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப்படத்திற்கு ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ளார். 19 வயதே ஆன உஜ்வல் குல்கர்னி படத்தொகுப்பு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.