சாணிக் காயிதம்... இதைக் கேட்கும் போதும், படத்தின் போஸ்டரை பார்க்கும் போதும்... ஏதோ பாவம், ஏமாளிகள் வஞ்சிக்கப்படும் கதை போல என்றும் தான் தோன்றும். அதில் சரிபாதி உண்மையும் இருக்கிறது. ஏமாளிகள் தான். ஆனால், வஞ்சிக்கப்படும் போது, ஏமாளிகள், விஸ்வரூபம் எடுத்து பகைவரை பஸ்பமாக்கும் கதை.


ரத்தம், வெட்டு, குத்து என ரத்தம் தெறிக்காத நிமிடமே இல்லை. ஒரு பெருஞ்தலைகள் கொண்ட கூட்டத்தை அவர்களிடம் பணியாற்றும் ஒரு தொழிலாளி எதிர்க்கிறான். அவனை பழிவாங்க, அவனது போலீஸ்கார மனைவியை கூட்டு பாலியல் செய்து, சம்மந்தப்பட்ட தொழிலாளியையும் அவரது மகளையும் உயிரோடு எரிக்கிறது அந்த கும்பல். பாதிக்கப்பட்ட பெண் போலீசின், தந்தைக்கு மூத்த தாரத்திற்கு பிறந்த ஆதரவற்ற அண்ணனின் உதவியோடு, தன் குடும்பத்தை எரித்த அந்த கும்பலை, துள்ளத்துடிக்க கொலை செய்வதே கதை. 




இதுவரை தமிழ் சினிமா எத்தனையோ பழிவாங்கும் படங்களை, கதைகளை பார்த்திருக்கிறது. இது அதற்கெல்லாம் மேலே... என்று சொல்லும் அளவிற்கு, கொத்துக்கறி போடும் கொலைவெறி பழிவாங்களாக படம் முழுக்க ஒரே சிவப்பு மயம்.  பாதிக்கப்பட்ட போலீஸ்கார பெண்ணாக கீர்த்தி சுரேஷ். அவரது அண்ணனாக செல்வராகவன். படம் தொடங்கும் போதே, பெண் ஒருவரை சரமாறியாக குத்தி, குடைந்து, உயிரோடு எரித்து கேஷூவலாக அடுத்த ஆபரேஷனுக்கு தயாராகும் கீர்த்தி, செல்வராகவனை பார்க்கும் போதே தெரிந்து விட்டது, அடுத்தடுத்து கொலைவெறி தான் என்று. 


ஆனால், இந்த அளவிற்கு ரத்தம் பீறிடும் என்று, யாருமே எதிர்பார்க்கவில்லை. இதற்கு முன், புதுப்பேட்டை படத்தில் பயன்படுத்தப்பட்ட ஆயுத எண்ணிக்கையை, பல மடங்கு அதிகரித்து அந்த சாதனையை முறியடித்திருக்கிறது சாணிக் காயிதம். சாணிக்காயிதம் என்றால், உறிஞ்சும் தன்மை கொண்டது. உண்மை தான்... இங்கு ரத்தத்தை போதும் போதும் என்கிற அளவிற்கு உறிஞ்சி எடுக்கிறது. 


இத்தனை கொலைகள் இருந்தும், ரத்தம் இருந்தும், அதற்கான நியாயத்தையும், தர்மத்தையும் தெரிவித்ததில் தான் வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குனர் அருண் மாதேஸ்வரன். படத்திற்கு மிகப்பெரிய பலம், ஒளிப்பதிவாளர் யாமினி யக்னாமூர்த்தி  ஒளிப்பதிவு தான். கொரியன் படமா, ஹாலிவுட் படமா, இந்திய படமா... இல்லை இது வேறு படம்... என்கிற மாதிரியான ஒளிப்பதிவு. இயக்குனருக்கு ஏற்ற இரட்டை குதிரை ஒளிப்பதிவு, படத்தை அலுங்காமல் குலுங்காமல் கொண்டு செல்கிறது. 




சாம் சி.எஸ்., இசை... மிஸ்கின் படத்தை அப்படியே நியாபகப்படுத்துகிறது. நாகூரானின் படத்தொகுப்பு, பாகம் பாகமாக வரும் கதையை, குழப்பமில்லாமல் காட்டுகிறது. எதார்த்தமாக சொன்னால், எதையும் சொல்லலாம், எப்படியும் சொல்லலாம் என்பதை நிரூபித்திருக்கிறார்கள். வெறிபிடித்தவர்களை வெறிபிடித்து தான் முடிக்க வேண்டும் என்கிற தீர்மானத்தோடு புறப்படும் கீர்த்தி சுரேஷ், அப்பாடா... என்ன ஒரு மாஸ்! கொலை மாஸ் என்றால் இது தான் போல. ஈவு, இரக்கம் எல்லாம் பிரிவுக்கு முன் வராது என்கிற வைராக்கியத்தோடு வாஞ்சயாக படம் முழுக்க பின்னி எடுக்கிறார் கீர்த்தி. 


என்னை நடிகனாகவும் பயன்படுத்துங்கள் என்று, நடித்து காட்டியிருக்கிறார் செல்வராகவன். நிறைவே அடித்தும் காட்டியிருக்கிறார். இந்த இரண்டு பேரும் தான், கதையை அப்படியே உறிஞ்சி உள்வாங்கிய சாணிக் காகிதங்கள். படத்தில் வரும் நான்ஸ்டாப் அசைவம், சைவப் பிரியர்களுக்கு எரிச்சலூட்டலாம். உண்மையில், அசைவப்பிரியர்களே கொஞ்சம் நெளிந்து போகலாம். அந்த அளவிற்கு காட்சிகளில் கத்தி வாடை. என்ன செய்ய... இப்படி தான் இருக்க வேண்டும் என்பது இயக்குனர் விருப்பம். அதை மட்டும் சகித்துக் கொண்டு படத்தை பார்க்கலாம் என்றால், படம் முழுக்க சகிக்க வேண்டியிருக்கும். சாணிக்காகிதத்தில் எழுதிய பக்கங்கள் எல்லாமே ரத்தத்தில் என்கிற குறையை தவிர, உறவோடு, கதையோடு பயணிக்கும் ஒரு ‛ரத்த’ பந்த கதை தான் சாணிக் காயிதம்! 


அமேஷான் ப்ரைம் வீடியோவில் வெளியாகியிருக்கும் இந்த படத்தை, ஆபாச வார்த்தைகளை ஏற்கனவே ‛மியூட்’ செய்துவிட்டார்கள் என்பதால், குடும்பத்தோடு அமர்ந்து பார்க்கலாம். ஆனால்... ஆனால் தான்!